Sermon on Wisdom from Above விண்ணிலிருந்து வரும் ஞானம்


 Wisdom from Above

விண்ணிலிருந்து வரும் ஞானம்


1 ராஜாக்கள் 3:16-28                                                                                         யாக்கோபு 1: 1-8

சங்கீதம் :119:33-40                                                                                             லூக்கா 10: 21-24

தியான வசனம்:

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவர் ஞானத்தை கொடுப்பார்கள். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். (யாக்கோபு 1:5)

கிறிஸ்து இயேசுவில் அன்பான இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்துக்கள். 

✝ தென்னிந்தியத் திருச்சபை  இன்றைய ஞாயிறை மாணவர் ஞாயிறாக ஆசரிக்கிறது. ஆகவே இந்நாளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு மாணவர்கள் மற்றும் நம்  அனைவருக்கும் கடவுள் தந்துள்ள  விண்ணிலிருந்து வரும்  ஞானத்திற்காக அவருக்கு  இணைந்து நன்றி கூறுவது மிகவும் சிறப்பானது. 

இன்று கொரோனா நோய்த்தொற்று மற்றும் அதனை சார்ந்த ஊரடங்கினால் கல்விக்கூடங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள்  இணையம் வழியாக  கல்வி கற்று வருகின்றனர். இச்சூழலில் மாணவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது. 

✝ நமது ஒன்றிய அரசு ஒன்றிய பாடத்திட்டத்தின்படி நடைபெறுகின்ற பொதுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மேற்கல்விக்கான NEET  போன்ற தகுதித் தேர்வுகளை நடத்தும் நிலையில் உறுதியாக உள்ளது. ஆனால் சாதாரணமான மாணவர்கள் இத்தேர்வுகளை எவ்விதம் சந்திக்க இருக்கிறார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.

✝ அதோடு நமது மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது. அதோடு ஒன்றிய அரசு நடத்தும் NEET போன்ற தகுதித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. மட்டுமல்லாது மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் வழங்க  வேண்டும் என்பதிலும் அரசு மிகவும் தெளிவாக உள்ளது.  ஆனால் எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு  மதிப்பெண் வழங்கப்படவிருக்கிறது என்பது இதுவரையிலும் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனை செயல்படுத்திட குழு அமைக்கப்படவிருக்கிறது. இத்தகைய மதிப்பிடுதல் சிலருக்கு நன்மையாகவும் சிலருக்கு பாதிப்பாகவும் அமைந்துவிடும் என்பது பொதுவான கருத்தாக அமைந்துள்ளது. இத்தகைய மதிப்பீடுகள் உண்மையாகவே மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன்றைய ஊடக கல்வி மாணவர்களை அறைகளுக்குள் அடைந்து வாழ்கிறவர்களாகவும், வாழ்வில் பல எதிர்மறை சவால்களை சந்திக்கவும் செய்கிறது. அதேநேரத்தில் விளையாட்டு அரங்கங்களில் விளையாட வேண்டிய பிள்ளைகள் வீட்டில் அறைகளில் அடங்கியிருந்து இணைய விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது கடவுள் இயல்பாக அவர்களுக்கு கொடுத்துள்ள ஞானத்தை தீமையான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

✝ இன்றைய இணைய வழிக் கல்வியில் குழந்தைகள் உண்மையாகவே  பல்வேறு  கடினங்களை இயல்பாக சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின்  இணைய வழிக் கல்வியில், ஆசிரியர் திரு. ராஜகோபாலன் அவர்கள் மற்றும் அதனை தொடர்ந்து வேறு சில பள்ளிகளின்  ஒருசில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறதாக உள்ளது. அதோடு உண்மையாகவே இவர்கள் ஞானத்தோடும், தெளிந்த புத்தியோடும், நிதானத்தோடும் கற்றுக் கொடுக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

✝ இச்சூழலில் ஞானத்தின் ஆதாரமான கடவுள் அருளும்  இறைஞானம் எத்தகையது? என்பதையும் அதனைப் பெற்று பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்தில் மன திடனற்று வாழும் நமது வாழ்வில் விண்ணிலிருந்து வரும் இறை ஞானம்  தரும்  நம்பிக்கையினையும் மன உறுதியினையும் சிந்திப்பது மிகவும் சிறப்பானது.


1 . மனதின் எண்ணங்களை அறியச் செய்யும்  ஞானம்: (1 ராஜாக்கள் 3:16-20)

✝ விண்ணிலிருந்து வரும் ஞானம்  மனித வாழ்வில் உள்மனதின் உண்மையான உணர்வு  எது என்பதை உய்த்து உணர்த்தும் தன்மை கொண்டது. உண்மையான வாழ்விற்கும் உண்மையை வெளிப்படுத்துவதால் வெளிப்படும் நீதிக்கும் விண்ணின் ஞானம் காரணமாகி விடுகிறது. அதோடு நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறிந்து கொள்ளவும், உலகிற்கு அதனை அடையாளப்படுத்தவும் உதவுகிறது. ஒரே இல்லத்தில் வாழ்ந்து, ஓரிரு நாள் இடைவெளியில் ஆண்குழந்தைகளைப் பெற்று, ஒரே குழந்தைக்காக உரிமைகோரிய  இரண்டு விலை மாதரும் அவரவரது ஞானத்தை பயன்படுத்தி குழந்தையை தமதாக்கிட முயன்றனர்(1 ராஜாக்கள் 3:16-22).  தனது குழந்தை தான் இறந்த குழந்தை  என்பதை அறிந்திருந்தும்,  உயிரோடிருக்கும் குழந்தையினைப் பெற முயன்று, குழந்தை  தனக்கு கிடைக்காது என்ற நிலை வந்த போது தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைக்க கூடாது, குழந்தையை கொன்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது  அவளது குறுகிய மனநிலையினையும், அவளது ஞானத்தின் குறைபாட்டையும் வெளிப்படுத்துகிறு. ஆனால் தான் பெற்ற குழந்தை தனக்கு கிடைக்காவிட்டாலும் தன் குழந்தையை தனக்கு முன்பாக கொல்லக் கூடாது அக்குழந்தை வாழ வேண்டும், அடுத்தவரிடமிருந்தாவது குழந்தை வாழட்டும் என விட்டுக்கொடுக்க இசைந்தது இரண்டாவது மாதுவிடமிருந்த  ஞானத்தின் நிறைவாகும்.

✝ அதோடு நியாயம் விசாரித்த அரசர் சாலமன் தான் கடவுளிடமிருந்து பெற்ற நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கும் ஞானத்தை சரியாக பயன்படுத்தினார்(1 ராஜாக்கள் 3:7-12). குழந்தை அதின் உண்மையான தாய்க்கு கிடைக்க ஞானத்தோடும் விவேகத்தோடும் செயல்பட்டார். அகவே இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் நியாயம் விசாரிப்பதற்கு கடவுள் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு பயந்தார்கள்(1 ராஜாக்கள் 3:28).ஞானத்திற்கு ஆதாரமான கடவுள் நம்  அனைவருக்கும் மனித உள்உணர்வுகளை அறிந்து கொள்ளும்  பகுத்தறியும் ஞானத்தை கொடுத்துள்ளார். அதனை பயன்படுத்தி நன்மை தீமைகளை வேறுபடுத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்புகளையும் தந்துள்ளார். இதனை நாமும் கல்வி கற்கும் நமது பிள்ளைகளும் எங்கனம் பயன்படுத்துகிறோம்? என்பதை சிந்திக்கவும், இத்தகைய பகுத்தறிந்து செயல்படும் ஞானத்தை சரியாகவும், நேர்மையாகவும்  செயல்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். 

     ✝ இந்த கொரோனா பாதிப்பு சூழலில் இணைய வழி கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது இணைய செயல்பாடுகளை பகுத்தறிந்து வாழ்வு சார்ந்தவைகளை தங்களுக்கு சொந்தமாக்கி, தீமைகளை தவிர்த்துக் கொள்வது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் பெற்றுத் தரும். ஆகவே மாணவர்கள் தங்களது கல்வி சார்ந்த காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஞானத்தோடும் விவேகத்தோடும் செயல்பட வேண்டும்.

✝ இறைமக்களாகிய நாமும் கடவுள் நமக்கு தந்துள்ள விண்ணின் ஞானத்தை இந்த நோய் தொற்று காலத்தில் பயன்படுத்தி முகக்கவசம், சமூக இடைவெளி, வீட்டில் பாதுகாப்பாக இருத்தல் போன்றவைகளின் மூலமாக நோய்த் தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும். மட்டுமல்லாது நோயின் அறிகுறிகள் இருந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று தனிமைப்படுத்தி கொள்வதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் ஞானம் நிறைந்த செயல்பாடுகளாகும். 

✝ திருச்சபை தலைவர்களும் இறைமக்களும் கடவுள் அனைவருக்கும் தந்துள்ள விண்ணின் ஞானத்தை இக்காலத்தில் தெளிவாக பயன்படுத்தி பாதிக்கப்பட்டு வாழும் மக்களோடு தங்களை இணைத்து ஆதரவாக செயல்படவும், மக்களின் அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட பாரபட்சமின்றி உழைக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்.  அதோடு கடவுளுக்கு பயப்படுதல் ஞானத்தின் தொடக்கமாக இருப்பதினால் எல்லா நிலைகளிலும் கடவுளுக்கு பயந்து நன்மை செய்து வாழ வேண்டும்.


2.மறை உண்மைகளை அறியச் செய்யும் ஞானம்: (லூக்கா 10: 21-24)

✝ விண்ணிலிருந்து வரும் ஞானம் மறைந்திருக்கும் மறை உண்மைகளை அறியச் செய்கிறது. இன்று ஊடகம் மற்றும் இணைய வழிக் கல்வியினால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், மறைந்து கிடக்கும் உண்மைகளை கண்டறியும் திறனும் குறைந்து வருகிறது. தங்களது ஞானத்தை பயன்படுத்தி நன்றாக சிந்தித்து அறிய வேண்டியவைகளை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ஆகவே மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைந்து வருகிறது. இயல்பாக சிந்திக்க மனமற்றவர்களாகவும் முயற்சி செய்து மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை  கண்டறிய தவறி சோம்பேறிகளாக மாறிவருகின்றனர்.

✝ இச்சூழலில் இறைப்பணிக்காக தெரிவு செய்யப்பட்டு, அதிகாரப்படுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட கலிலேயர்களான, கல்வி அறிவற்ற பாமரர்கள் எனக் கருதப்பட்ட இயேசுவின் எழுபத்திரண்டு  சீடர்களும் இயேசுவிடம் வெறுமையாக திரும்பி வராமல், மகிழ்வுடன் திரும்பி வந்து, ஆண்டவரே,உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன என்றனர்(லூக்கா 10:17).  இதற்கான காரணம் என்னவென்றால்  படிப்பறிவில்லாத அவர்களில் இயல்பாக இருந்த இறை ஞானம், இயேசுவில் இருந்த  இறைஞானத்தினால் அவர் அவர்களுக்கு கொடுத்த இறை அதிகாரம், இவைகளின் மூலமாக அவர்கள் பெற்ற இறைவழிநடத்துதலுமாகும். 

✝ இறை ஞானத்தினாலும் இறை ஆற்றலினாலும் சீடர்கள் இறைப்பணி செய்தபோது  வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போன்று விழுவதைக் காண முடிந்தது, கொடியத் தீமையான  பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர்.  எவ்வித தீங்கும் அவர்களை மேற்கொள்ளாத நிலையில் அவர்களது வாழ்வு அமைந்திருந்தது(லூக்கா 10:18-20).

✝ தமது சீடர்களில் இறை ஞானத்தையும் ஆற்றலையும் அதின் செயல்பாடுகளையும் கண்ட இயேசு ஆவியாரில் நிறைந்தவராய் கடவுளைப் போற்றினார். மட்டுமல்லாது  ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறை உண்மைகளை மறைத்து, ஞானத்தில் குழந்தைகளான சீடர்களுக்கு அதனை  வெளிப்படுத்தினீர் என்றார்(லூக்கா 10:21,22). அதோடு சீடர்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் காணவும் கேட்கவும் விரும்பினார்கள். ஆனால் ஞானம் நிறைந்த அவர்களால் அவைகளை காணவும் கேட்கவும் இயலவில்லை. சீடர்கள்  காண்பவற்றைக் காணும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பேறு பெற்றோர் என்றார் (லூக்கா 10:23,24).  

விண்ணின் ஞானத்தை பெற்ற சாதாரணமான சீடர்கள் அசாதாரணமான காரியங்களை காணவும் கேட்கவும் முடிந்தது. இன்று கல்வி கற்கும் நமது பிள்ளைகளும் இறைவழிநடத்துதலைப் பெற்று கடவுள் கொடுத்துள்ள ஞானத்தை ஒப்படைப்போடும் நிதானத்தோடும் பயன்படுத்தும் போது வாழ்விலே மேன்மையை அடைய முடியும். ஆகவே ஊடகம் மற்றும் இணைய வழிக் கல்வியானால் மாணவர்களின் சிந்தனைத் திறன் குறைந்துள்ள நிலையில் அதிலிருந்து விடுபட கடவுள் கொடுத்துள்ள ஞானத்தை தீமையான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான காரியங்களை செய்ய ஒப்படைப்புடன் பயன்படுத்த வேண்டும்.

✝ இன்று நாமும் நமது திருச்சபைகளும் கொரோனா நோய் தொற்றுக்கான காரணத்தை அறிவதற்கு முயலுகிறவர்களாகவும், சரியான தெளிவான காரணத்தை அறிய முடியாமல் கடவுளின் தண்டனை என சிந்திக்கிறோம். அதோடு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை தீட்டானவர்டளாக பார்க்கின்ற பார்வை நம்மிடம் உள்ளது. இந்த  ஊரடங்கு காலத்தில்  இல்லங்களில் சோம்பேறிகளாக நமது இல்லங்களில் அடைபட்டு இருக்காமல் கடவுள் நமக்கு தந்துள்ள ஞானத்தை விவேகத்தோடு பயன்படுத்தி கொரோனா பாதிப்பு சுழலில் மறைந்திருக்கும் உண்மைகளையும், கடவுளின் இரக்கத்தின் வெளிப்பாட்டையும் அறிந்து கொள்ள  அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

✝ மட்டுமல்லாது  கல்வியறிவற்ற  சாதரணமான சீடர்கள் இறைவாக்கினர்கள் மற்றும் அரசர்களால் காணமுடியாதவைகளை கண்டது போலவும், கேட்கமுடியாதவைகளை கேட்க முடிந்தது போலவும் நமது ஒப்படைப்புள்ள வாழ்வினாலும் பணியினாலும் அசாதாரணமான காரியங்களை அறிந்து கொள்ளவும் நம்மால் இயலாது என எண்ணுகின்றவைகளையும்  சாதித்துக் காட்ட முடியும். ஆகவே இந்த நோய்த் தொற்று காலத்தில் சோம்பேறிகளாக அல்ல சுறுசுறுப்பாக செயல்பட்டு இறைத் திட்டத்தை அறிந்து அதனை நிறைவேற்றி நீதியுடனும் நியாயத்துடனும் நேர்மையுடனும் வாழ்வோம். 


3.மன உறுதி தரும் ஞானம்: (யாக்கோபு 1:1-8)

✝ விண்ணிலிருந்து வரும் ஞானம் நமது உறுதியற்ற சோர்புற்ற வாழ்வில் அனுதினமும் சந்திக்கின்ற சவாலினை மன உறுதியுடன் எதிர் கொள்ளும் வாழ்வினைத் தருகிறது.

✝ யாக்கோபு திருமுகத்தில் விண்ணிலிருந்து வரும் ஞானம் நம்பிக்கையோடும் ஐயப்பாடின்றியும் அவரிடம்  கேட்கின்ற அனைவருக்கும் தாராளமாக கடவுள் கொடுக்கிறார் என வாசிக்க முடிகிறது (யாக்கோபு 1:5,6). அதோடு கடவுள் அருளும் ஞானம் ஒருவரது நம்பிக்கை சோதிக்கப்படும்போது மன உறுதியினைத் தருகிறது (யாக்கோபு 1:2-4) எனவும்,  நம்பிக்கை இழந்த வாழ்வு சூழலில் இறை ஞானம் தரும் மன உறுதி நமது நிறைவான செயல்பாடுகளினால் விளங்கிட வேண்டும் (யாக்கோபு 1:4) எனவும்,  இவ்வாறு விளங்குவதால் எக்குறைவுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் வாழ இயலும் (யாக்கோபு 1:4), என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

✝ இந்த கொரோனா பாதிப்பு சூழலில் இணைய வழிக் கல்வியில் குழந்தைகள் மன உறுதியினை இழந்து வருகின்றனர். அறைகளில் அடைபட்டு இருக்கிறவர்கள் தங்களில் அருகில் மக்கள் சந்திக்கும் சவாலினை அறியாதிருக்கிறார்கள். அறிந்தவர்கள் அதனை எப்படி எதிர் கொள்ள முடியு‌ம் என மன உறுதியற்ற நிலையில் உள்ளனர். கொரோனாவினால் பெற்றோரை இழந்து அநாதையாக்கப்பட்ட பிள்ளைகள் மன உறுதியற்ற நிலையில் வேதனையுடன் உள்ளனர். எதிர்கால நம்பிக்கை இழந்து வாழ்வில் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதோடு தங்களது வாழ்வாதாரங்களையும்  உடல் நலக்குறைவால் வாழ்வினையும் இழந்து மன உறுதியற்ற நிலையில் அநேகர் வாழ்கின்றனர். 

✝ இத்தகையோருக்கு நல் எதிர்கால நம்பிக்கையினையும், மன உறுதியினையும், தருவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், திருச்சபைகள், திருச்சபை தலைவர்கள், மற்றும் இறைமக்களின் இன்றியமையாத கடமையாகும். கிறிஸ்து வாயிலாக நமக்கு அருளப்பட்ட இறை ஞானத்தினை வாழ்வில் நாமும் சொந்தமாக்கி மன உறுதியுடன் வாழ்ந்து மற்றவர்களையும் இத்தகைய வாழ்வில் வாழச் செய்திட நம்மில் கடவுள் எதிர்பார்கிறார்.

✝ ஆகவே இந்த நோய்த் தொற்று காலத்தில் ஊடகம் மற்றும் இணைய வழிக் கல்வியால் மன உறுதியை இழந்து தடுமாறும் மாணவர்கள் சரியான பாதையில் பயணிக்க வழிகாட்டுவதோடு, அவர்களின் எதிர்காலம் நன்மையானதாக அமைந்திட நம்மை நல்மாதிரியாக்கிட வேண்டும். ஆதோடு நம்பிக்கை இழந்து மன உறுதியற்ற நிலையில் வாழும் நம்மவர்கள் மன உறுதியுடன் சவாலினை எதிர்கொண்டு, விடுதலை பெற்றிடவும், நல் எதிர்பார்ப்புடன் முன்னேறிச் செல்லவும் நமது வாழ்வினை சான்றாக்கி வாழ்வோம்.

✝ இன்று  உலக அளவில் கொரோனா நோய் தொற்று பாதித்த மூன்று பேரில் ஒருவர் இந்தியர் என்ற நிலை நமது வாழ்வு சூழலில் சவாலானது(தினத்தந்தி,p8, நாள் 06-06-2021). ஆனால் படைப்பின் வரலாற்றிலும், கிறிஸ்துவின் வாழ்விலும் நிறைந்திருந்த கடவுளின் ஞானம் நமக்கு அருட்கொடையாக அருளப்பட்டிருக்கிறது. இந்த இறை ஞானத்தை நமது வாழ்வாக்கி நீதியினையும் நியாயத்தையும் நிலைநாட்டுகிறவர்களாகவும், நம்மில் மறைந்திருக்கும் இறை இரகசியத்தை அறிகிறவர்களாகவும், பயத்தினாலும் கலக்கத்தினாலும்  மன உறுதியிழந்த நிலையில் வாழும் நாம்  நம்பிக்கையோடும் மன உறுதியோடும் கிறிஸ்துவின் சிலுவைப் பாதையில்  தொடர்ந்து முன்னேறி செல்வோம்.

இறையாசி நம் அனைவரோடும் தங்கி இருப்பதாக, ஆமென்.


Rev.A.மகேர் ஷால் அஸ்பாஸ், 

கண்காணிப்பாளர், பேராய அச்சகங்கள்,

கன்னியாகுமரிப் பேராயம்.


Thank you for visiting my blog page. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)