ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)
வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)

வார்த்தையால் உலகை படைத்த இறைமகன்
இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் கலங்கமில்லா நல்ல தீர்ப்பு வழங்க
வீற்றிருக்கும் நடுவர்களை வாழ்த்தி, சபையோரை
வணங்கி எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் என்னும் தலைப்பில்
1பேதுரு 2:3 -யை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை
திருமறை வெளிச்சத்தில் பகிர ஆசிக்கிறேன்.
தூய பேதுரு இந்த நிருபத்தினை
கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட புற இனத்து கிறிஸ்தவர்களுக்கு
எழுதுகிறார். இதில்
முந்தைய வாழ்வை களைந்து புதிய வாழ்வை ஆரம்பித்த கிறிஸ்தவர்களுக்கு ஆண்டவரின்
திருவசனத்தை மையமாக வைத்து நல்ஆலோசனை வழங்குகிறார். 1பேதுரு 2:3-இல் ஆண்டவரின் திருவசனத்தை களங்கமில்லா ஞானப்பாலுக்கு
ஒப்பிடுகிறார் பேதுரு. இதற்குக்
காரணம் புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு
ஒப்பானவர்கள். பிறந்த
ஒரு குழந்தையின் சரீர வளர்ச்சிக்கு ஊட்டப்படும் உணவு எவ்வளவு முக்கியமோ அதைப்
போன்று விசுவாச
வாழ்வில் நிலைத்து நிற்க திருவசனமாகிய ஞானப்பால் மிக முக்கியம் என்பதை
எடுத்துரைக்கிறார் பேதுரு.
புறஇனத்து கிறிஸ்தவர்களின் முந்தைய
வாழ்வு கள்ளம், கபடு, பொறாமை போன்ற துற்குணங்களால்
நிறைந்திருந்தன. அவற்றிலிருந்து
விடுபட்டு வருபவர்கள் கிறிஸ்துவில் வேரூன்றி நிற்க திருவசனம் மிக அவசியமானது.
அதை புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்
கொண்டவர்கள் ருசி பார்க்க வேண்டும் என்பதே இந்த நிருபம் சொல்லும் செய்தி. ஆண்டவரின் திருவசனத்தை ருசி பார்த்த
சங்கீதக்காரர் சங்கீதம் 34:8-இல் கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என
கூறுகிறார். அந்த
சங்கீதத்தின் கூற்றை அடிச்சுவடாய் பேதுரு இங்கே வலியுறுத்துகிறார். திருவசனமே தீமைக்கு எதிராக போராட
உதவும் ஆயுதம் என்பதை தெளிவுபடுத்துகிறார். திருவசனத்தால் நிறைந்த வாழ்வு தேனிலும் மதுரமானது
என்பதை சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு
எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் என்பதன் வழியாய் தெரிவிக்கிறார் சங்கீதக்காரர். இத்தகைய இனிய திருவசனத்தால்
கிறிஸ்தவர்களின் வாழ்வு நிறைந்து இருக்க வேண்டும் என்பதே இந்நிருபத்தின் அறைகூவல்.
தற்கால உலகில் சில சிறார்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் பெரியவர்களை காயப்படுத்துவதாகவும், திருமறை கற்றுத்தரும் வாழ்விற்கு
எதிர்மறையாகவும் அமைந்திருக்கிறது. தீய
வார்த்தைகளையும் வயதிற்கு மீறிய சொற்களையும் இன்றைய சிறுவர்கள் அதிகம்
பயன்படுத்துகிறார்கள். அதே
சமயம் மற்றவர்களை கேலி செய்யும் தன் பிள்ளைகளை கண்டிக்காமல் அதை ரசித்து
உற்சாகப்படுத்தும் பெற்றோரும் பெருகி வருகிறார்கள். இத்தகைய செயல்பாடு சிறார்களின் எதிர்கால
வாழ்வுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே
சிறு பருவம் முதலே பிள்ளைகள் களங்கமில்லாததும், தேனிலும் மதுரமான திருவசனத்தை கற்று அதன்படி
வளர்வது ஒளிமயமான எதிர்காலத்தை தனி வாழ்விலும், திருச்சபை வாழ்விலும் ஏற்படுத்தும் எனக் கூறி
என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
Comments
Post a Comment