ELOCUTION 2024- POST SUPER SENIOR கனம் பெற்ற சகேயு (லூக்கா 19)

 கனம் பெற்ற சகேயு (லூக்கா 19)

கனத்திற்கு பாத்திரமாம் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் கனம் பொருந்திய பொறுப்பாம் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என்னை போன்ற பேச்சாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு கனம் பெற்ற சகேயு என்பதாகும் இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி லூக்கா 19-ம் அதிகாரம். இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

லூக்கா 19-ஆம் அதிகாரம் எரிகோவில் வாழ்ந்த சகேயு என்னும் மனிதனைக் குறித்து பேசுகிறது. லூக்கா 19:1-இல் ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு எனக் குறிப்பிடுகிறது. திருமறை வரலாற்றினை புரட்டிப் பார்க்கும்போது எரிகோ என்பது கடவுளின் கடும் சினத்திற்கும் சாபத்திற்கும் உள்ளான ஒரு பட்டணம். இதற்கு காரணம் இந்த பட்டணத்தில் தீமைகளும் அநீதிகளும் ஏற்ற தாழ்வுகளும் நிறைந்து காணப்பட்டன. யோசுவா 6:24-இல் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர் என்பதன் மூலமாக இந்த பட்டணம் தனது பாவ வாழ்வுக்கான பிரதிபலனை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய தீமைகளின் பின்னணியத்தை கொண்ட இடத்தில் தான் சகேயு வாழ்ந்து வந்தார்.

மேலும் சகேயுவை குறித்து சிந்திக்கும்போது இவர் ஒரு யூதன் அதிலும் குறிப்பாக ஆயக்காரனுக்கு தலைவன் என்னும் போது இவரிடத்தில் அதிகாரமும் ஆள் பலமும் மிகுந்து இருந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறது. அதேசமயம் ஜனங்களின் வெறுப்புக்கும் உள்ளான மனிதன் என்பதையும் லூக்கா 19 வழியாக புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம் இவர் யூதராய் இருந்தபோதிலும் யூதர்களிடம் வரி வசூல் செய்யும் பணியினை செய்து வந்தார். ஆகையால் இவரை யூதர்களுக்கு பிடிக்கவில்லை. லூக்கா 19:7-இல் அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள் என காண்கிறோம். ஆக ஜனங்கள் இவரை குறிப்பிடும்போது பாவியான மனிதன் என்றே அடையாளப்படுத்தினர். சகேயு ஐசுவரியம் ஏழை எளிய மக்களிடம் சுரண்டி சம்பாதித்தவை என்பது இந்நிகழ்வில் நிறைவு சகேயுவின் சுயஅறிக்கை வாயிலாக உறுதிப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்புதான் லூக்கா 18:24-இல் ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார் இயேசுநாதர். நாளுக்கு நாள் மக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பும் சமீபத்தில் இயேசுவின் ஐசுவரியவான்களை குறித்த கருத்தும் சகேயுவை மனதளவில் அதிகம் பாதித்திருக்க வேண்டும். எனவே தான் இவர் தன்னிலை உணர்ந்து கடவுள் பக்கமாக தன் வாழ்வினை திருப்ப முயல்கிறார். இதற்கான வாய்ப்பாக இயேசுவின் எரிகோ வருகையினை தனக்கென்று பயன்படுத்திக் கொள்ள முனைகிறார் சகேயு.

எனவேதான் லூக்கா 19:3,4 ஆகிய திருவசனங்களில் இயேசுவோடு எந்த ஒரு முன் அறிமுகமும் இல்லாவிட்டாலும் அவரது குணநலன்களை அறியாத போதிலும் அவர் எப்படிப்பட்டவரோ என்கிற தெளிவில்லாத சூழலிலும் அவர் எவ்வழியாக வருகிறார் என்கிற தெளிவோடு இயேசு அவ்விடத்தை அடையும் முன்பே அவருக்கு முன்பாக ஒரு காட்டத்தி மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். அவரது இரட்சிப்பு இயேசுவை காண வேண்டும் என்று நினைத்த அந்த நொடிப்பொழுதிலிருந்தே ஆரம்பமாயிற்று. திருமறை சகேயுவை குறித்து சொல்லும் போது இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான் என அவரது உருவத்தை கொண்டு அடையாளப்படுத்துகிறது. ஆனால் இந்த நிகழ்வில் இயேசுவை காண வேண்டும் என்கிற அவரது ஆவல் சகேயுவின் உயர்ந்த உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது. இது இயேசுவின் மனதிலும் சகேயுவிற்கு உயர்ந்த இடத்தை பெற்று தந்தது. இந்த உயர்ந்த உள்ளம் இயேசு நின்று சகேயுவே என பெயர் சொல்லி அழைக்கவும் எப்படிப்பட்டவரோ என பார்க்க விரும்பிய சகேயுவை அவர் அண்ணாந்து பார்க்கும் அனுபவத்தையும் சகேயு அழைப்பதற்கு முன்பே அவர் வீட்டில் விருந்து உண்ணும் அனுபவத்தையும் சகேயுவிற்கு பெற்று தந்தது. அதேசமயம் இவை மற்றவர்களுக்கு புலம்பலாய் அமைந்தது என்பதையும் லூக்கா 19:7-யின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவிற்கு சகேயு வீட்டில் தங்க வேண்டும் என்னும் விருப்பம் இயேசு பாவிகளை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இயேசுவை காண வேண்டும் என்று விரும்பிய சகேயுவிற்கு ஆண்டவரோடு பேசவும் உடன் தங்கவும் உணவு அருந்தவும் அவர் விரும்பிய நல்வழியில் நடக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக லூக்கா 19:8-இல் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு மீட்பின் பேரானந்தத்தில் பங்கு பெற்றார் சகேயு.

தற்கால உலகில் வாழ்ந்து வரும் நாமும் அநேக விதங்களில் சோதிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டும் பாவியென முத்திரையிடப்பட்டும் நிந்தைக்குள்ளாகும் அனுபவங்கள்  கொண்டிருக்கலாம். இத்தகையோரான நாம் கனம் பொருந்திய இயேசுவுக்காக நம்மை கையளிக்கும் போது கடவுளால் கப்படுத்தப்படுவோம் என்பதற்கு சகேயுவின் வாழ்வு சிறந்த ஒரு முன்உதாரணம். தன் தவறுகளை உணர்ந்து கடவுள் பக்கமாக திரும்பிய சகேயுவை லூக்கா 19:9- இல் ஆபிரகாமின் குமாரன் என்று அழைப்பதன் வாயிலாக கனப்படுத்துகிறார் இயேசு கிறிஸ்து. நாமும் நமது தவறுகளை உணர்ந்து, மனதாழ்மையுடன் கடவுள் பக்கமாக திரும்புவோமானால் அவரால் கிடைக்கப்பெறும் கனத்திற்கு பாத்திரவான்களாய் மாறுவோம் எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்

  A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

 

Comments

  1. ஒப்புரவின் பணிவிடையாளர் பவுல் 2 கொரிந்தியர் 5 : 18

    ReplyDelete
    Replies
    1. It is available in the blog. Please check. Thank you

      Delete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)