பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

 

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை

கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிற திருவார்த்தையை நினைவில் கொண்டு, சிறப்புமிக்க இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் வாழ்த்துரை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த வாய்ப்பினை நல்கி இருக்கிற பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய இப்பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வணங்குகிறேன்.

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதற்கிணங்க நமது பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடாத்துபவர்கள் ஆசிரியர்களே. நல்ல குருவை அடைந்தவர்களே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர் என்று சொல்வதுண்டு. நம் பெற்றோர்களுக்கு அடுத்து ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பள்ளிக்கூடம் தான். பல அறிஞர்களையும், கவிஞர்களையும், மேதைகளையும், மருத்துவர்களையும், விளையாட்டு வீரர்களையும், சாதனையாளர்களையும், விஞ்ஞானிகளையும் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்துவது பள்ளியும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த உலகத்திற்கு பல ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்கும் பயிற்சி கூடம் தான் இந்த பள்ளி கூடம். இளம் வயதில் இருந்தே முற்போக்கு சிந்தனைகளையும், ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவு புகட்டும் அறிவு கூடங்கள் தான் நாம் படிக்கும் பள்ளிக்கூடங்கள்.

சமூக நெறிகளை கற்றுக் கொடுப்பதும் பள்ளிக்கூடங்கள் தான். இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அதன் முக்கியத்துவத்தைப் பேணிப் பாதுகாக்கவும் பள்ளிக்கூடங்களை பெரிதும் உதவுகின்றன. பள்ளிக்கூட வளாகத்தில் இருக்கும் மரம், செடி, கொடிகள் இயற்கைக்கு தர வேண்டிய முக்கியத்துத்தின் பிரதிபலிப்புகள். இவை மாணவர்களுக்கான காட்சி பாடங்கள், இவைகள் மானுட வாழ்வில் இயற்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிள்ளைகளுக்கு காட்சி பாடமாக போதிக்கின்றன. அதேபோன்று தினமும் பள்ளி வளாகத்தில் துப்புரவு செய்யும் பணியாளர்களின் பணி கூட ஒரு காட்சி பாடம்தான், நாம் வாழும் இடத்தை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், தூய்மையாக வைப்பதின் மூலம் கிடைக்கும் பயன் என்ன என்கிற வாழ்வியல் பாடத்தை சிறார்களுக்கு இவை கற்றுத் தருகின்றன.

ஒவ்வொரு பள்ளிக்கூடமும் விளையாட்டு மைதானங்களை கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் கல்வி மட்டுமே ஒருவரை சிறந்தவராகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் மாற்றுவதில்லை. கல்வியோடு இணைந்த உடல்சார்ந்த செயல்பாடுகளும் மாணவ மாணவிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் கல்வியோடு இணைந்து உடல் ஆரோக்கியமும், திறனும் அவசியம் என்பதற்காகவே பள்ளிக்கூடங்கள் விளையாட்டுக்கும், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் இன்றைய நவீன காலத்து பிள்ளைகள் உடல் சார்ந்த செயல்பாடுகளை மறந்து அல்லது தவிர்த்து MOBILE PHONE, INTERNET, FACEBOOK என இணையதள வழியில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் மனரீதியான பாதிப்பும், இன்னும் சில இடங்களில் சிறார்களை தற்கொலைக்கு தூண்டும் நிகழ்வும் ஏற்படுகின்றன.  இதன் முக்கியத்துவத்தை அறிந்து தான் பாரதியார்

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

என்று தன் கவிதை வரிகளில் விவரித்தார். எனவே அன்பு மாணவர்களே நீங்கள் கல்வியோடு இணைந்த விளையாட்டையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் அணியும் UNIFORM உங்கள் UNITY-யை காட்டுகிறது. அனைவரும் சமம் எங்களுக்குள் வேற்றுமை இல்லை என உலகிற்கு நீங்கள் சொல்லும் செய்தி இது. உங்கள் ஆடைகளில் மட்டுமல்ல உங்கள் வாழ்விலும் அனைவரும் சமம் என்கிற சிந்தை கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் வகுப்பறை எப்பொழுதுமே காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்கும் இதைப் போலவே உங்கள் வாழ்வும் ஒரு திறந்த புத்தகத்தை போன்று, திறந்த மனதுடன், பரந்த சிந்தை கொண்டு இருக்க வேண்டும். குறுகிய மனநிலை இல்லாமல் உங்கள் லட்சிய  தேடலுக்கான இடமாக இந்த முழு உலகையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பிறர் வாழ்வில் வெளிச்சம் வீசுங்கள், பிறரையும் வெளிச்சத்திற்கு நேராய் நடத்தி, அவர்களையும் வெளிச்சம் வீச உதவுங்கள். “நாளைய சமுதாயம் பிள்ளைச் செல்வங்களே என்று சொல்வதுண்டு அதற்கான பயிற்சி கூடமாய் உங்கள் பள்ளிக்கூடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பள்ளி காலங்களில் உரையாடல் (COMMUNICATION) மிக முக்கியமானது சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இனிமையான ஒழுக்கமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுங்கள். உங்கள் வார்த்தைகளில் அன்பும், கரிசனையும், கனிவும் அதிகமாய் இருக்கட்டும். நாம் பிறருக்கு மரியாதை செலுத்தும் போது தான் அவர்களிடத்தில் நமக்கு மதிப்பு கூடும். இதேநிலை உங்கள் இல்லத்திலும் தொடர வேண்டும். உங்கள் தேவைகளை, கஷ்டங்களை உங்கள் பெற்றோரிடம் மனம் திறந்து பேசுங்கள். இல்லத்தில் பெற்றோரோடு FRIENDLY ATMOSPHERE-யை வளர்த்துக்கொள்ள நல்ல COMMUNICATION அடிப்படை அவசியமானது. இவை எல்லாவற்றையும் உங்களுக்கு தருவதற்காகவே பள்ளிக்கூடங்களில் LIBRARY, LABS, NCC, NSS, JUNIOR RED CROSS, SCOUT போன்ற ACTIVITIES தரப்படுகிறது. இவைகளை தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்களுக்கு பள்ளி நாட்களில் தான் கிடைக்கும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். பள்ளிக்கூடத்தில் எல்லா நிகழ்வுகளிலும் தயக்கமின்றி பங்குபெறுங்கள், கிடைக்கும் மேடைகளை உங்களுக்கு உரியதாய் மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல சிந்தனை உடையவர்களாகவும், நாளைய சமுதாயத்தை நல்வழியில் கொண்டு போகும் தூண்களாகவும் இருக்க உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். திருவள்ளுவர் தன் குரளில் சொல்லும்போது

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு

என்கிறார். இதற்கு இணங்க ஒவ்வொரு மனிதனும் அவன் எந்தளவிற்கு கல்வியைக் கற்கின்றானோ அந்தளவிற்கு அவனது அறிவாற்றலானது அதிகரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத பருவமாக அமைவதும் இப்பள்ளிப் பருவமே. இவ்வாறு இன்றியமையாததாக விளங்கும் பள்ளிப் பருவமானது பலவகையான வாழ்க்கைப் பாடங்களையும், அனுபவங்களையும் அள்ளி வழங்குகின்றது. சின்னஞ்சிறு பிஞ்சுகளாய் பெற்றோரின் கைபிடித்து பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் நாம், ஆசிரியர்களுடன் கைகோர்த்து அறிவுகள் பல பெற்று முழுமையடைந்த மனிதனாக பள்ளியில் இருந்து வெளியேறுகின்றோம்.

ஆகவே ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டிகளாகவும், மாணவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்துபவர்களாகவும் காணப்படவேண்டும். ஒரு சமூகம் எந்தவித சீர்கேடுகளுமற்ற சமுதாயமாக திகழ வேண்டுமாயின் அங்கே வாழும் மக்கள் சிறிதளவாவது கல்வி அறிவினை பெற்றிருத்தல் அவசியமாகும். இந்த கல்வி அறிவினை சமூக்திற்கு வழங்குவதில் கல்விசாலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாணவர்களது வாழ்வில் அறிவொளியினை ஏற்றி இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து பிள்ளைகளும் உயர்ந்த பண்புகளைப் பெற்று சிறந்த மகான்களாக மாற்றம் பெற்று விளங்க, இத்தகைய சிறந்த பணியினை செய்து நிறைவேற்றி கொண்டிருக்கிற இப்பள்ளியினை வெகுவாக பாராட்டுகிறேன். எனக்கு இங்கு வாழ்த்துரை வழங்க தரப்பட்ட நல்ல வாய்ப்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, என் உரையை நிறைவுக்கு கொண்டு வருகிறேன், நன்றி வணக்கம்.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

Comments

Post a Comment

Popular posts from this blog

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)