சிலுவை மொழி 6 “முடிந்தது” - SERMON ON THE CROSS VERSE 6 "It is Finished"

 

சிலுவை மொழி - 6

முடிந்தது

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30)


சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஆறாம் பொன்மொழி முடிந்தது. இந்த வார்த்தை தோல்வியின் வார்த்தையா? அல்லது வெற்றியின் வார்த்தையா? என்கிற விவாதத்தை ஏற்படுத்தும் வார்த்தை. இந்த வார்த்தை சிலுவையில் இயேசுவால் ஏன் சொல்லப்பட்டது? என்கிற பின்னணியத்தை சிந்திப்பதற்கு முன்பு, இந்த முடிந்தது என்கிற வார்த்தை சிலுவையின் நிழலிலே பல மனிதர்களின் மனதின் நினைவுகளை பிரதிபலிப்பதாக அமையப் பெற்றிருக்கிறது. அந்த நபர்கள் யார்? யார்? அவர்களின் எண்ணங்களுக்கும் இந்த முடிந்தது என்கிற வார்த்தைக்குமான தொடர்புதான் என்ன என்று சிந்திக்கிற போது!

அந்த வரிசையில் வரும் பிரிவினர்:

1. பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர்: தங்கள் சதித் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது இனி இயேசு தப்பிக்க வழியில்லை வாய்ப்புமில்லை, நம்மை மாய்மாலக்காரர் என தோலுரித்து, நமக்கு முடிவு கட்ட முயன்றவனின் முயற்சி முடிந்துவிட்டது என்கிற அகந்தையின் சிந்தையை இந்த வார்த்தை வெளிப்படுத்துகிறது.

2. பிலாத்து: இயேசுவை விடுதலை செய்ய எவ்வளவோ முயன்றேன் முடியவில்லையே, எல்லாம் முடிந்துவிட்டதே!! என்கிற பிலாத்துவின் மனிதாபிமான மனநிலையை வெளிப்படுத்துவதாய் இந்த வார்த்தை அமையப் பெற்றிருக்கிறது.

3. சீஷர்கள்: யோவானை தவிர மற்ற சீஷர்கள் இதோடு எல்லாம் முடிந்தது என்கிற தவறான சிந்தை கொண்டு, இயேசுவின் எதிரிகள் நம்மையும் இதைப் போன்று செய்துவிடுவார்களோ என்கிற பயத்தில், மேல் வீட்டின் அறைக்கதவை பூட்டி கொண்டனர். ஆம்! அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஊழியம் முடிந்தது.

4. யோவான்: சிலுவையின் அருகில் நின்ற யோவான் தன் பொறுப்பில் தரப்பட்ட இயேசுவின் தாய் மரியாளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாரானார். அவரும் கூட இயேசுவோடு தன்னுடைய மானுட பந்தம் முடிந்தது என்கிற மனநிலை கொண்டிருந்ததை இந்த ஆறாம் மொழி வெளிப்படுத்துகிறது.

இப்படி சிலுவையின் கீழே மனிதர்கள் பல நிலையான மனநிலையோடு நின்றிருக்க, சிலுவையிலிருந்து உதயமான முடிந்தது என்கிற வார்த்தை இயேசுவை நேசித்தவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், அதேசமயம் இயேசுவைப் பகைத்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இயேசுவை எதிர்த்தவர்கள் முடிந்தது என்ற இந்த வார்த்தையை தோல்வியின் வார்த்தையாக கொண்டாடினர். தங்கள் முயற்சியில் தாங்கள் வெற்றி பெற்றவர்களாகவே கருதினர். ஆனால் உண்மையில் முடிந்தது என்கிற வார்த்தை எதை வெளிப்படுத்துகிறது? இயேசுவின் பகைவர்கள் கருதியதைப் போன்று இது தோல்வியின் வார்த்தை தானா? அல்லது இயேசு இந்த உலகத்தில் வந்த நோக்கம் நிறைவேறியதையும், பிதாவின் சித்தத்தை செவ்வனே நிறைவேற்றிய மகிழ்ச்சியோடும் முடிந்தது என்று சொன்னாரா? என்பதனை திருமறை பின்னணியத்தோடு சிந்திப்போம்.

முடிந்தது என்கிற இந்த வார்த்தையை கிரேக்க மொழியில் Tetelestai என்கிற வார்த்தையை கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இது “It has been finished” என்கிற பொருளைத் தருகிறது. கிரேக்கர்கள் இந்த வார்த்தையை வெற்றியை குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த வார்த்தை வெற்றியின் வார்த்தை (sound of victory). இதனடிப்படையில் சிந்திக்கிற போது இந்த வார்த்தை தோல்வியின் வார்த்தை அல்ல இது வெற்றியின் வார்த்தை என்கிற புரிதலை தருகிறது. அப்படியானால் இயேசு எதையெல்லாம் முடிந்தது என்கிறார் என்பதனை சிந்திப்போம்.

1. பலி முடிந்து போயிற்று

யூத மரபில் பலி செலுத்துவது என்பது அவர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்று. பொதுவாக பஸ்கா பண்டிகையின் போது உலகெங்கிலும் இருக்கும் யூதர்கள் எருசலேமிலே ஒன்று கூடுவார்கள். இது கடவுளால் இவர்களுக்கு கட்டளையாக கொடுக்கப்பட்டது, அதை நிறைவேற்றுவது தங்கள் கடமை என யூதர்கள் கொண்டிருந்தனர். இப்படி பஸ்காவை ஆசரிக்க வரும் யூதர்கள் வெறும் கையோடு வருவது இல்லை, அவர்களின் பாவத்திற்கு பரிகாரமாக ஆட்டுக் கடாக்கள், காட்டு புறாக்கள் போன்ற ஏதாவது ஒரு உயிர் பலியை காணிக்கையாகக் கொண்டு வருவார்கள். இவர்கள் கொண்டுவரும் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு, ஆசாரியர்களால் பலி செலுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும். இன்றைய காலச் சூழலில் இந்தப் பொருள்கள் எல்லாராலும் வாங்கக் கூடியதாக இருப்பினும், இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த ஏழைகளாலும், எளியோராலும் எருசலேம் தேவாலயத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை கொடுத்து வாங்க முடியவில்லை. இதற்கு காரணம் அநியாய விலைக்கு இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. யூத மரபின்படி பஸ்கா ஆசரிக்கும் நபர் தன் பாவம் போக்க பலி செலுத்தவில்லை என்றால் அவருடைய பாவம் மன்னிக்கப்படாது என்கிற நம்பிக்கை அன்று இருந்தது. இந்த நிலையில் எருசலேமின் வியாபாரிகளின் அநியாய செயல்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையும் தந்தது. எனவேதான் மத்தேயு 21:12 - இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து போட்டார் என்று திருமுறை சொல்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையிலே உலகின் பாவம் போக்கும் ஜீவ பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்தின்  வாயிலாக இனி இவர்கள் பலி செலுத்த தேவையில்லை அவர்களுக்கான பாவம் போக்கும் நித்திய பலியாக இயேசு சிலுவையில் பலியானார். இதை குறிக்கும் அடையாளமாக இயேசு  முடிந்தது என்கிறார். இதனை 1யோவான்: 2:2 “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்என்று குறிப்பிடுகிறது.

2. சாபம் முடிந்து போயிற்று

சிலுவையில் அறைதல் என்பது மனிதன் கண்டுபிடித்த பழிவாங்கும் முறைகளில் மிக கொடியதும், ஈவு இரக்கமற்றதுமாகும். சிலுவையில் அறைதல் முதன்முதலில் பாரசீகத்தில் பயன்படுத்தப்பட்ட மரண தண்டனை முறையாகும். அவர்கள் சிலுவை மரணத்தை ஏன் தெரிந்து கொண்டார்கள் என்கிற வரலாற்று தகவல் ஒன்று உண்டு, அதாவது பாரசீகர்கள் பூமியை கடவுளாக கருதினர், எனவே குற்றவாளியின் பாதம் தாங்கள் கடவுளாகிய கருதிய பூமியின் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக குற்றவாளியை மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்தனர். பிற்காலத்தில் இது ரோமர்களால் பின்பற்றப்பட்டது, துரோகிகள், தப்பியோடிய கைதிகள், மற்றும் அடிமைகள் கொடிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர், அத்தகையோருக்கு மட்டுமே சிலுவையில் அறைந்து கொல்லப்படுவது  தண்டனையாக கொடுக்கப்பட்டது. ரோம குடிமக்கள் யாருக்கும் சிலுவை தண்டனை வழங்கப்படுவது கிடையாது. இயேசுவின் காலத்தில் சிலுவையில் அறைதல் என்பது சாபத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவும், இத்தகைய சாபம் தன்னோடு முடிந்து விட்டது, இது முடிந்து போயிற்று, இனி சிலுவையை சுமக்க யாருக்கும் தயக்கம் வேண்டாம், சிலுவை என்பது கடவுளோடு ஒன்றிப்பதற்கான வழி அல்லது பாலம் என்பதை இயேசு சிலுவையில் முடிந்தது என்னும் இந்த வாரத்தையைக் கொண்டு வெளிப்படுத்தினார். சாபமாக பார்க்கப்பட்ட சிலுவை, இயேசுவின் சிலுவை மரணத்திற்கு பிறகு புனிதச் சின்னமாக கருதப்பட்டது. 1கொரி:16:22-ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என தூய பவுலார் சாபத்திற்கான புதிய அர்த்தத்தை தருகிறார். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் சாபத்திற்கானவர்கள் அல்ல என்னும் உறுதியை இந்த வார்த்தை ஏற்படுத்துகிறது. சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவை வாழ்வில் ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்தாலும் அவர்களுக்கு நித்திய வாழ்வு உண்டு. இயேசு சாபத்தின் சின்னமான சிலுவையை சுமந்ததால் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்கும் கடவுளின் திட்டம் நிறைவேறியதை குறிக்கவே  முடிந்தது என்கிறார்.

3. பாடுகள் முடிந்து போயிற்று

இயேசு கிறிஸ்துவின் சிலுவை சுமத்தல் என்பது அவர் இவ்வுலகின் பாடுகளை சுமப்பார் என்கிற இறைவாக்கிற்கு ஏற்றதாய் அமைந்திருக்கிறது. சராசரி மனிதர்களைப் போன்று இயேசுவும், சரீரத்தாலும், மனதாலும் காயங்களையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டார். மனிதன் அனுபவிக்கிற ஒவ்வொரு வேதனைகளையும், பாடுகளையும் இயேசு சிலுவையில் அனுபவித்தார்.  மகிமை பொருந்திய சரீரத்திற்கு உரிமை கொண்டவர், மானுட சுபாவத்தையும், உணர்வுகளையும் கொண்டிருந்தார் என்பதற்கு அடையாளமாகவே உடலில் பல காயங்களையும், அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டார். இத்தகைய வேதனைகளை அனுபவித்தவர் முந்தின தினம் பிதாவினிடத்தில் ஜெபிக்கிற போது லூக்கா 22:42- பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணி, பிதாவின் கைகளில் தன் பாடுகளை ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் பிதாவின் சித்தம் இந்த பாடுகளை தான் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தபடியால் கல்வாரி வரை இயேசுவின் ஒரே குறிக்கோள் பிதாவின் சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாகவே இருந்தது. அதை சரியாக நிறைவேற்றினேன் என்கிற நிறைவோடு பெருத்த தொணியாய் முடிந்தது என்கிறார். சிலுவையில் தொங்கின இயேசுவின் மீதான மனிதர்களின் பார்வை பல கோணங்களில் இருந்தது பரிசேயர் பார்வையில் சமூக, சமய, தேச துரோகி. ரோம வீரர்கள் பார்வையில் குற்றவாளி, தீவிரவாதி, பயங்கரவாதி. பிலாத்து பார்வையில் அநீதி குற்றம் சாட்டப்பட்ட குற்றமில்லாத மனிதன், இப்படி இயேசுவின் மீதான பார்வை ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் அமைந்திருந்தது. பொதுவாகவே இயேசுவின் வாழ்வு முழுவதையும் குறித்த தீர்க்கதரிசன இறைவாக்குகள் திருமறையில் நிரம்பி உள்ளன அவற்றை நிறைவேற்றி முடித்தார் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்

v  அவர் ஸ்திரீயின் வித்தாய் இருப்பார். (ஆதியாகமம் 3:15)

v  கன்னியின் வயிற்றில் பிறப்பார். (ஏசாயா 7:14)

v  யூதேயாவிலுள்ள பெத்லகேமில் தோன்றுவார். (மீகா 5:2)

v  ஈசாயின் வேராய் இருப்பார். (ஏசாயா 11:2)

v  அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவார். (ஏசாயா 52:12)

v  உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:22).

ஆக!! இத்தகைய தீர்க்கதரிசனங்களும் நிறைவேற இயேசு கிறிஸ்து சாபத்தின் சின்னமான சிலுவையை சுமக்க வேண்டியதாய் இருந்தது. அதை சுமந்து தன்னைக் குறித்த முன் அறிவிப்புகளை செய்து நிறைவேற்றினேன் என்கிற வெற்றியின் வார்த்தையாய் முடிந்ததுஎன்கிறார். யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடும் போது யோவான் 4: 34- இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்பதன் மூலம் பாடுகளின் போஜனம் முடிந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊


Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)