ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

அணையா சுடர் ஒளியாய் இப்பாரில் அவதரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு எரிந்து சுடர்விடும் விளக்கு என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி யோவான் 5:35. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச ஆசிக்கிறேன்.

யோவான் 5:35-இல் இயேசு கிறிஸ்து தனக்கு முன் அடையாளமாய் தோன்றிய யோவான் ஸ்நானனை குறிப்பிடும்போது எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்கிறார். இதற்கு காரணமாய் அமைந்தது யோவான் ஸ்நானனின் வாழ்வில் வெளிப்பட்ட இறைபக்தி. மத்தேயு 3:5,6- ஆகிய திருமறை வசனங்களிலிருந்து ஜனங்கள் யோவான் ஸ்நானின் மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தான் இயேசு இவரை வெறும் விளக்கு எனக் குறிப்பிடாமல் எரியும் விளக்கு என்கிறார். விளக்கு வெறுமனே இருப்பின் அது பயன்தராது மாறாக அது எரிந்து பிரகாசிக்க வேண்டும் அப்பொழுதுதான் அதை நாடி செல்வோர் பயன் பெறுவர். அதைப்போலவே யோவானின் வாழ்வு அமைந்திருந்தது. படித்தவர்கள் முதல் பாமரர் வரை அவரை நாடி சென்று வாழ்வு பெற்றார்கள். அந்த வரிசையில் உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவும் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது மேலும் சிறப்பு. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து இங்கு தனக்கு வழியை ஆயத்தம் பண்ணினவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்கிறார், அதை குறித்து சாட்சியும் தருகிறார். அதே சமயம் யோவானின் ஆரம்பகால ஊழியத்தில் உற்சாகத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட ஜனங்கள், அதிலும் குறிப்பாக யூதர்கள் இறுதியில் அவரை சிறைவாசம் அனுபவிக்க செய்தனர். யோவானோடு இணைந்து பக்தி வாழ்விற்கு சான்றாய் இருக்க வேண்டியவர்கள் அவரை பகைத்து சாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். எப்படி மெழுகுவர்த்தி அல்லது விளக்கு தன்னைக் கரைத்து பிறர் வாழ்வில் ஒளி கொடுக்கிறதோ அதைப்போலவே யோவான் ஸ்நானனின் வாழ்வும் அமைய பெற்றுள்ளது. எனவே தான் திருமறையில் மத்தேயு 5:16-இல் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று குறிப்பிடுகிறது. இன்றைய உலகில் நாம் கூட அநேக நேரங்களில் தேவை வரும்போது தேவனை தேடுவதும் தேவைகள் தீர்ந்தவுடன் தேவாலயம் செல்வதை தவிர்ப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். இத்தகைய வாழ்வு எரிந்து பிரகாசிக்கிற விளக்கை போன்றது அல்ல, மாறாக அந்த விளக்கிலிருந்து சிதறி விழும் தீப்பொறி போன்றது, அதனால் எதற்கும் யாருக்கும் பலன் கிடையாது. ஆகவே கிறிஸ்துவின் பண்புகளைப் பின்பற்றி நடக்கும் நாம், பிறர் வாழ்வில் ஒளிவிளக்காய் திகழ்ந்து, இருளை அகற்றும் தீபமாய் ஒளிர்வோம் எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன் ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)