ELOCUTION 2024 BEGINNER- பகிர்ந்தலுக்கு பாடமான கொர்நேலியு (அப்போஸ்தலர் 10:2)

 பகிர்ந்தலுக்கு பாடமான கொர்நேலியு (அப்போஸ்தலர் 10:2)

அகிலத்தின் பாவம் போக்க தன்னையே பகிர்ந்தளித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பகிர்ந்தலுக்கு பாடமான கொர்நேலியு என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி அப்போஸ்தலர் 10-ஆம் அதிகாரம் 2-ஆம் திருவசனம். இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

அப்போஸ்தலர் 10:2- இல் பகிர்ந்தலுக்கு பாடமாக சொல்லப்படும் கொர்நேலியு என்பவர் இத்தாலிய படையைச் சார்ந்த நூற்றவர் தலைவர்களில் ஒருவர். அதிகாரம் படைத்தவர், ஆற்றல் மிக்கவர், கடவுள் பயம் கொண்டவர், எல்லாவற்றிற்கும் மேலாக யூத சமயத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைக்கும் ஒரு இலட்சிய பிறஇனத்தவராக சுட்டிக்காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் அடிச்சுவட்டை மறந்து அநீதியின் வழியில் வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் நீதியின் வழி நின்று கிறிஸ்தவ வாழ்விற்கு சான்றாக விளங்கினவர் கொர்நேலியு. அதிலும் குறிப்பாக அதிகார பலமும், செல்வமும், சிறந்த நன்மதிப்பும் மிக்கவராகவும் இருந்தபோதிலும் இவர் தேவபக்தி உள்ளவராய் தன் வீட்டார் அனைவரோடும் தேவனுக்கு பயந்தவருமாயிருந்தார் என்கிறது திருமறை. தான் மட்டும் கிறிஸ்துவின் அன்பிற்கு பாத்திரவானாய் இருக்க வேண்டும் என்கிற சுயநல சிந்தனை அற்றவராய், பிறர் நலம் கொண்டு அனைவரும் கிறிஸ்துவின் அன்பை பெற காரணியாய் செயல்படுகிறார். புறஇனத்தார் மத்தியில் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியது மற்றும் இன்றி அவர்களின் பொருளாதார தேவைகளையும் சந்தித்தார் கொர்நேலியு, இதனைஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தார்என்பதின் வழியாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

தற்கால கிறிஸ்தவத்திற்கு கொர்நேலியுவின் பகிர்தல் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. காரணம், கொர்நேலியு கிறிஸ்துவையும், அவரது திருவார்த்தைகளையும் பிறரோடு பகிர்ந்தது மட்டுமின்றி கிறிஸ்து போதித்தது போன்று தேவையில் இருப்போருக்கு உதவிகள் பல செய்தார். பெரும்பாலான இன்றைய திருச்சபைகள் கிறிஸ்துவை குறித்து அதிகம் பேசுகிறது, அதோடு நின்று விடுகிறது, செயலிலோ ஒன்றுமில்லை. நற்செய்தி என்பது வெறும் பேச்சு அல்ல அது செயலில் வெளிப்படுவது. அதை தான் கிறிஸ்து செய்தார் நம்மையும் அதற்கென்றே ஏற்படுத்தினார். கொர்நேலியுவின் தனி வாழ்வு அவருக்கும் அவரை சார்ந்தோருக்கும் மட்டுமே வாழ்வளிக்கவில்லை, தற்கால உலகில் வாழ்ந்து வரும் நமக்கும் பகிர்ந்தலுக்கான சான்றாக அமைந்திருக்கிறது. எனவே நாமும் நமது செயலின் வழியாக பகிர்தலை வெளிப்படுத்தி, பிறரை கிறிஸ்துவின் அண்டை வருவதற்கு உதவுவோம், அவர்களை கிறிஸ்துவின் சீடர்களாக உயரச்செய்வோம் எனக் கூறும் என் உரைக்கு திரையிடுகிறேன் ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)