ELOCUTION 2024 INTERMEDIATE- ஒப்புரவின் பணிவிடையாளர் பவுல் (2கொரி. 5:18)

 ஒப்புரவின் பணிவிடையாளர் பவுல் (2கொரி. 5:18)

ஒப்புரவின் வழியாக பிரிவினைகளை அகற்ற பாரில் உதித்த இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நல்ல தீர்ப்பு வழங்கு வீற்றிருக்கும் நடுவர்களையும் சபையோரையும் வாழ்த்தி ஒப்புரவின் பணிவிடையாளர் பவுல் என்னும் தலைப்பில் 2 கொரி. 5:18-யை மையமாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர விரும்புகிறேன்.

தூய பவுலார் தனது இரண்டாம் நற்செய்தி பயணத்தின் போது கொரிந்து திருச்சபையை நிறுவினார். பவுல் வாழ்ந்த காலகட்டத்தில் கொரிந்து பட்டணம் ரோம ஆட்சியின் கீழ் மிக முக்கியமான இடமாக கருதப்பட்டது. இது ஒரு துறைமுகப்பட்டணம் என்பதால் பல்வேறு இடங்களிலிருந்தும் வணிகர்களும், வியாபாரிகளும் இந்த பட்டணத்தில் முகாமிட்டனர். மக்கள் கூட்டம் மிகுதியானதோடு அநேக கேளிக்கைகளும் பெருக ஆரம்பித்தன. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ பாரம்பரியத்தையோ மக்கள் கொண்டிருக்கவில்லை, மாறாக மனம் போன போக்கில் வாழ்ந்தனர். ரோம அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இந்த பட்டணத்தை வெகுவாக பயன்படுத்திக்கொண்டனர். இதன் விளைவாக சுயஒழுக்கம், சுயகட்டுப்பாடு இல்லாத வாழ்வினை கொரிந்து மக்கள் கொண்டிருந்தனர்.

தூய பவுலார் இங்கு திருச்சபையை ஆரம்பித்தபோது இதே நிலைதான் தொடர்ந்தது. சமுதாய வாழ்வில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைப்போன்றுதான் திருச்சபையிலும் செயல்பட்டனர். வீண்வாக்குவாதம், சண்டையிடுதல், பழிவாங்குதல் போன்ற நிலை தான் கொரிந்து திருச்சபையில் இருந்து வந்தது. எனவேதான் பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில் ஒப்புரவின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். 2 கொரிந்தியர் 5:18-இல் இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என்பதின் வாயிலாக ஒப்புரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருச்சபை அவர் இவ்வுலகில் வந்ததற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதாய் அமைய வேண்டும் என்பதே பவுலாரின் போதனை. பழைய தீய வாழ்விலிருந்து விடுபட்டு  கிறிஸ்துவுடனான ஒப்புரவின் வாழ்வினையே பவுலார் தனது நிருபத்தின் வாயிலாக வலியுறுத்துகிறார். எனவே தான் ரோமர் 4:7,8-இல் எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்பதன் வாயிலாக பாவங்களை மன்னித்து மீட்டெடுக்கும் இரட்சகர் கிறிஸ்து என்பதை தெளிவுடன் எடுத்துரைக்கிறார்.

இக்கால திருச்சபைகளுக்கு பவுலின் அறைகூவல் பெரிதும் ஒத்துப்போகிறது. இதற்கு காரணம் திருச்சபைகளின் இன்றைய அவல நிலையினை இது காட்சிப்படுத்துகிறது. பதவி ஆசையினாலும், சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும் பலர் இன்று திருச்சபைகளை தங்கள் சுயலாபத்திற்கென்று பயன்படுத்திக் கொள்கின்றனர். கிறிஸ்துவின் ஒப்புரவு வாழ்விற்கு சான்றாக வாழ வேண்டிய கிறிஸ்தவர்கள் அநேகர் தங்கள் சுய இலாபத்திற்காக திருச்சபையை பிளவுப்படுத்துகிறார்கள். திருச்சபை என்பது ஆண்டவரின் திருவுடல். திருச்சபைகளில் நாம் செய்யும் அத்தனை அக்கிரமங்களும், தீமையான காரியங்களும் கிறிஸ்துவின் காயப்பட்ட உடலில் மேலும் மேலும் காயத்தை ஏற்படுத்துகிறது என்னும் உணர்வு நம்மில் இருக்க வேண்டும். தூய பவுலாரின் அறைக்கூவலுக்கு செவிமடுத்து திருச்சையில் ஒப்புரவின் பணிவிடையினை செய்வோம், வருங்கால சந்ததியர் சான்று பகிரும் வாழ்வை வெளிப்படுத்துவோம் எனக் கூறி என் உரைக்குத் திரையிடுறேன். ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)