ELOCUTION 2024 SUPER SENIOR- கிறிஸ்துவின் நல்ல படைவீரர் (2 தீமோத்தேயு 2:3)

 கிறிஸ்துவின் நல்ல படைவீரர் (2 தீமோத்தேயு 2:3)

படைகளின் ஆண்டவராம் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நீதி தவறாது மதிப்பிட வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என்னைப்போன்ற போட்டியாளர்களுக்கும் அவையோருக்கும் சபையோருக்கும் சான்றோர் அனைவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு கிறிஸ்துவின் நல்ல படைவீரர் என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி 2தீமோத்தேயு 2:3, இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பேச விரும்புகிறேன்.

தூய பவுலார் தீமோத்தேயுக்கு இரண்டு நிருபங்கள் எழுதினார். குறிப்பாக இந்த இரண்டாம் நிருபத்தினை கிபி 68-இல் ரோமபுரியில் சிறையில் இருந்தபோது எழுதினார். இந்த நிருபத்தினை போதக நிருபங்களில் ஒன்று என அழைத்தனர். இதுவே பவுலால் எழுதப்பட்ட கடைசி நிருபம் என நம்பப்படுகிறது. திருச்சபைகளில் காணப்பட வேண்டிய ஒழுங்கு, உபதேசம் ஆகியவற்றை குறித்து பவுல் இந்த நிருபத்தில் எழுதுகிறார். இதில் தீமோத்தேயுவை வாழ்த்தும் பவுல், ஊழியத்தை குறித்தும் அவற்றில் இருக்கும் கடினங்களையும் சவால்களையும் விவரித்து சொல்கிறார். தன்னுடைய வாழ்வினை மாதிரியாக காட்டும் பவுல் தன் திருப்பணியின் அனுபவத்தினைக் கொண்டு தீமோத்தேயு தன் ஊழியப் பாதையில் சந்திக்கவிருக்கும் சோதனைகளையும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார், இவற்றின் வழியாக தீமோத்தேயுவை உற்சாகப்படுத்துகிறார் .

குறிப்பாக 2 தீமோத். 2:3-இல் நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி என்பதின் மூலமாக திருப்பணிகளின் மேன்மை கிறிஸ்துவுக்காக தீங்கு அனுபவிப்பது என்னும் தெளிவை ஏற்படுத்துகிறார் பவுல். படைவீரர்கள் அல்லது சேவகர்கள் என்கிற வார்த்தை இங்கு கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வார்த்தையாகும். பொதுவாக பவுலும் அவரை சார்ந்தவர்களும் வாழ்ந்த காலகட்டம் ரோம அரசின் ஆதிக்கங்களும் அநீதிகளும் நிறைந்த காலகட்டம். கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டனர் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்து வந்தவர்கள் பல்வேறு வகைகளில் துன்பங்களுக்குள்ளானார்கள், பலர் கொலையும் செய்யப்பட்டனர். பாமர மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாத்து அவர்களுக்கான நீதியை வழங்க வேண்டியவர்கள் அவர்கள் மேல் வீண்பழியையும் அநீதியையும் விளைவித்தனர். ஒன்றுமறியாத அப்பாவி கிறிஸ்தவர்களை சிலுவை மரணத்திற்கு ஒப்புவிப்பதும், ஏழைகள் மீது அதிக வரி சுமத்துவதையுமே தினசரி வாடிக்கையாக கொண்டிருந்தனர் ரோம அதிகாரிகளும் அவர்களை சார்ந்த படைவீரர்களும். எனவே ஜனங்களுக்கு ரோம அரசாங்கம் என்றாலே தீராத வெறுப்பும், பகை உணர்வும் மிகுதியாக இருந்தது. எனவே இங்கு பவுலார் தீமோத்தேயுக்கு இயேசு கிறிஸ்துவின் நல்ல சேவகராய் இரு என சொல்லுவதின் மூலம் கடவுளின் அரசாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் படைவீரர் என்று குறிப்பிடுவதின் வாயிலாக வெகு சீக்கிரத்தில் ரோம அரசாட்சிக்கு முடிவு வரப்போகிறது என்பதை மக்களுக்கு மறைமுகமாக அறிவிக்கும் நற்செய்தியாகவும் இங்கு வெளிப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் சேவகர்கள் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கட்டியெழுப்ப தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட ஆயத்தமாய் இருப்பவர்கள். எச்சூழலிலும் அன்பையும் மன்னிப்பையும் வழங்க தயங்காதவர்கள். அடிமைகளோடு தங்களை அடையாளப்படுத்த கூடியவர்கள். மேலும் ஏசாயா தீர்க்கதரிசியின் தரிசனத்தின்படி ஏசாயா 58:7-இல் சொல்லப்பட்டுள்ளதைப் போன்று பசியுள்ளவனுக்கு உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உறவினனுக்கு மறைக்காமலிருக்கிறதும்போன்ற நற்செயல்களை சிறப்பாக செய்து நிறைவேற்றக்கூடியவர்களே இயேசு கிறிஸ்துவின் நல்ல படைவீரர்கள். இத்தகைய குணத்தினை கொண்டிருக்க பவுல் தீமோத்தேயுவை அழைக்கிறார். இதன் மூலம் ரோம ஆட்சிக்கும் இறையாச்சிக்குமான வித்தியாசத்தை உலகம் அறிய செய்ய முனைகிறார்.

அன்றைய ரோம ஆட்சியைப் போன்றுதான். இன்றைய சமூகம் அநீதிகளின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள் பெரிதும் ஒடுக்கப்படுகிறார்கள், நீதி பணத்திற்காக அநேக இடங்களில் மறுக்கப்படுகிறது. அப்பாவி மக்கள் பல இடங்களில் தினம்தோறும் கொலை செய்யப்படுகிறார்கள், நில அபகரிப்பு, சமூக கட்டமைப்பில் நிராகரிப்பு, மனித உரிமை மறுப்பு போன்ற அநீதியால் பாதிப்புக்குள்ளாவோர் அநேகர். இத்தகையோரின் நல்வாழ்வுக்காக இயேசுவின் படைவீரர்கள் போராட வேண்டும் என்கிறார் தூய பவுலார். இதற்கு காரணம் பவுலின் இறுதி நாட்கள் சிறையில் கழிந்தபோது அவரால் வாழ்வு பெற்ற எளியவர்களும் சமூக கட்டமைப்பின் கடைநிலையில் தவித்தோறும் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார்கள். பவுலின் பெருந்துன்பத்தில் ஏழை எளிய மக்களின் ஆறுதலான வார்த்தைகள் அவருக்கு பெரும் நம்பிக்கையும் ஆறுதலையும் அளித்தது. எனவேதான் இளமை வயதை கொண்டிருந்த தீமோத்தேயுவின் திருப்பணிக்கான ஆலோசனை வழங்குகிற போது அவர் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் தளர்ந்துவிடாது இருக்கும்படி நல்ல சேவகனாய் கிறிஸ்துவுக்கு பணியாற்ற வேண்டும் என்றும், தீங்கு அனுபவிக்க எச்சமயத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்னும் அறைக்கூவலை பவுல் விடுக்கிறார். எனவே நாமும் இச்சமுதாயத்தில் தீமை அனுபவிப்போருக்கு நன்மையும், அநீதி இழைக்கப்படுவோருக்கு நீதியையும் பெற்று தரும் கிறிஸ்துவின் நல்ல படைவீரர்களாய் மாறுவோம் எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.

 A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)