ELOCUTION 2024- ADULT காத்திருந்து கருணை பெற்றவர் (யோவான் 5: 1-12)
காத்திருந்து கருணை பெற்றவர் (யோவான் 5: 1-12)

கருணைக்கடலாம் இறைமகன் இயேசு
கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலைத் தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும்
நடுவர்களுக்கும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும்
அன்பின் நல்வாழ்த்துக்கள் எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டிருக்கும்
தலைப்பு காத்திருந்து கருணை பெற்றவர் என்பதாகும் இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி யோவான் 5:1-12 இதனை
அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த
கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
யோவான் 5:1-12
வரையிலான திருமறைப்பகுதியில் சுமார் 38 வருட காலம்
திமிர்வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு
மனிதனின் வாழ்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வினை யோவான் நற்செய்தியாளரை தவிர வேறு எந்த நற்செய்தி
ஆசிரியர்களும் குறிப்பிடவில்லை. இந்த
நிகழ்வில் சொல்லப்படும் மனிதர் ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல சுமார்
38 வருடமாக காத்திருந்து கடவுளின் கருணையை பெற்றுக் கொண்டார். இந்த மனிதன் எந்த இடத்தில் இருந்தார் என்பதை
நற்செய்தியாளர் சொல்லும்போது யோவான் 5:2-இல் எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு
குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது என குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வு நடைபெற்ற சமயத்தை குறிப்பிடும்
போது யூத பண்டிகை காலம் என சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இது பஸ்கா பண்டிகையாக
இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இங்கே
குறிப்பிடப்பட்டுள்ள பெதஸ்தா என்னும் வார்த்தையின் பொருள் இரக்கத்தின் வீடு என்பதாகும். ஆனால் இந்த இடத்தில் இருந்தோருக்கு
யாரிடத்திலும் இரக்கம் கிடைக்கவில்லை என்பதே
நிதர்சனமான உண்மை. இதற்கு காரணம் அங்கு இருந்தோர் அனைவரும் யோவான்:5:3-படி
மாற்றுத்திறனாளிகளாய் இருந்தார்கள், அதிலும்
குறிப்பாக இந்த மனிதன் சுமார் 38 வருடமாக அங்கே இருந்தார்.
ஏன் இத்தகையோர் இங்கு பெரும்
எண்ணிக்கையில் இருந்தார்கள் என்றால் யோவான் 5:4-இல் ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன்
ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு
யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும்
சொஸ்தமாவான் என சொல்லப்பட்டிருக்கிற நம்பிக்கையே காரணமாகும். இந்த 38
வருடத்தில் பலமுறை இந்த குளத்தின் தண்ணீர் தேவதூதனால்
கலக்கப்பட்டதையும் ஆனால் இந்த மனிதனைக் கொண்டு போய் விடுவதற்கு ஒருவரும் இல்லை
என்பதையும் அவரது அறிக்கை வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இவை சமுதாயத்தால் முற்றிலும் மறக்கப்பட்ட அல்லது
மறுக்கப்பட்ட வாழ்வையே இந்த மனிதன் 38 வருடமாக வாழ்ந்து வந்தார் என்பதை உரக்க அறிவிக்கிறது.
இத்தனை வருடங்களும் இவரது சரீரமே இவருக்கு பாரமாக மாறிப்போனது. மரணம் ஏற்பட்டால் நலமாக இருக்குமே என்கிற
புலம்பல் தான் அவரது அனுதின அனுபவமாய் அமைந்திருக்க வேண்டும். இனி இவர் வாழ்வு பெற துளியும்
வாய்ப்பில்லை என்பதே அனைவரது எண்ணமாக இருந்திருக்கும், எருசலேம் ஆலயம் வருவோர் கூட இந்த மனநிலையிலேயே இவரை பார்த்திருப்பார்கள்.
மேலும் யோவான் 5:2-இல் ஆட்டுவாசல் என்னும் சொல் இங்கு முக்கிய
இடம் பெறுகிறது. இதற்கு
காரணம் இந்த வாசல் வழியாக தான் பஸ்கா ஆசரிக்க எருசலேம் வரும் யூதர்கள் தங்கள் பாவம் போக்க
கொண்டு வரும் பலி பொருட்களை கொண்டு வருவார்கள். அவைகள் ஆசாரியர்களால் பரிசோதிக்கப்பட்டு பழுதற்றது
என்றால் பெதஸ்தா குளத்திலே சுத்திகரிக்கப்பட்டு அதன்பிறகே
கடவுளுக்கு பலி செலுத்த உகந்தது என்று அங்கீகரிக்கப்படும். அத்தகைய பொருட்கள் ஆட்டுவாசல் வழியாக எருசலேம் ஆலய வளாகத்திற்குள்ளாக
அனுமதிக்கப்படும். இந்த
வாசலருகே தான் இந்த மனிதன் 38 வருடமாக தன் பலவீனத்தோடு போராடிக் கொண்டிருந்தார்
ஒவ்வொரு முறை மக்கள் பலி பொருட்களோடு ஆலயம் செல்லும் போதும் இந்த மனிதர் மனம்
உடைந்திருப்பார். காரணம் பலிப்பொருட்களாய் கொண்டு செல்லப்படுகிற
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்நடைகளுக்கும் இருக்கும் ஆரோக்கியம் தனக்கு
இல்லையே என்கிற ஏக்கம் நிச்சயமாக இந்த மனிதனுடைய மனதில் ஆழமாய் பதிந்திருக்கும். அது அவருடைய அங்கலாய்ப்பின் அனுபவமாகவும் இருந்திருக்கக்கூடும்.
இத்தகைய கடினத்தின் மத்தியில்தான்
இயேசுவின் வருகை அவருக்கு கிடைத்தது. இயேசுவின் வருகை காத்திருந்த திமிர்வாதக்காரனுக்கு கடவுளின் கருணையை கொண்டு வந்தது. இதுவரையிலும் இருந்து வந்த நடைமுறையில் மாற்றம்
ஏற்பட்டது என்பதை யோவான் 5:8-இல் இயேசுவின் கட்டளை மூலமாக புரிந்து கொள்ள
முடிகிறது. இனி
தேவதூதன் வந்து தண்ணீரை கலக்க வேண்டியதில்லை, முதலில் இறங்கினால் தான் சுகம் என்பதில்லை, இதையெல்லாம் நிறைவேறினால் தான்
வாழ்வு பெற முடியும் என்று நம்பி இருந்த திமிர்வாதக்காரனுக்கு இயேசுவின் மூலம் வேறு வழியில் வாழ்வு வந்தது. எனவே தான் திருமறை சொல்லும்போது என் நினைவுகள் உங்கள் நினைவுகள்
அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறது.
நம்முடைய வாழ்வில் கூட பல நிலைகளில்
உரிமைகள் மறுக்கப்படுவதுண்டு, கிடைக்க
வேண்டிய அங்கீகாரம் கிடைக்க கால தாமதமாவதுண்டு இத்தனை சூழலில் இந்த நிகழ்வு நமக்கு
உணர்த்தும் பாடம் ஒன்றே அது என்னவென்றால் 1
பேதுரு 5:6-7-இன்
படி ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள்
அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம்
அவர்மேல் வைத்துவிடுங்கள் என்பதே. எனவே நாம் இந்த அறைக்கூவலுக்கு செவிமடித்து கிறிஸ்து விரும்பும் வழியில் நடந்து இந்த சமூக கட்டமைப்பில்
தவிப்போருக்கு கைக் கொடுப்போம், அவர்களோடு நம்மை அடையாளப்படுத்தி அவர்களுக்கான
குரலாகவும் நம்பிக்கையாகவும் மாறுவோம் என கூறி என் உரைக்கு திரையிடுகிறேன் ஆமென்.
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
Comments
Post a Comment