ELOCUTION 2024- TEACHER விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் (மத்தேயு 18:3)
விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் (மத்தேயு 18:3)

விண்ணரசின் மாதிரிகளாக்க விண்ணக
வாழ்வை துறந்து மண்ணுலக வாழ்வை ஏற்ற இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய
நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்குவதற்கு மாதிரியாக
அமர்ந்திருக்கும் நடுவர்களை வணங்கி, என்னைப்
போன்ற போட்டியாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும் வணக்கம் சொல்லி விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் என்ற தலைப்பில் மத்தேயு 18:3-யை ஆதாரமாகக் கொண்டு என் சிந்தையில்
எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
இயேசுவின் சீடர்கள் அவர் வழியாக
விண்ணரசின் தகவுகளை அநேகமுறை கேட்டிருக்கிறார்கள். அதோடு மட்டும் நின்று விடாமல் பரலோக ராஜ்யத்தை
குறித்து பல நிலைகளில் பிரசங்கிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் மத்தேயு 18:1-இல் “பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்” என்கிற சீடர்களின் கேள்வியிலிருந்து
விண்ணரசைக் குறித்த காரியங்களில் அவர்களுக்கு இருந்த தெளிவின்மையை புரிந்துக்கொள்ள
முடிகிறது. மத்தேயு 18-ஆம் அதிகாரத்தில் இயேசுவுக்கும்
அவரது சீடர்களுக்குமான உரையாடலின் போது எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு, “சிறார்கள்” பதிலாகவும், மாதிரிகளாகவும் முன் வைக்கப்படுகிறார்கள்.
காரணம் யூத மரபிலோ, வாழ்வியலிலோ, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவங்கள்
கொடுக்கப்படுவதில்லை. ஆனால்
இங்கு இயேசு கிறிஸ்து
யூத இயல்புக்கு மாறாக புறக்கணிக்கப்பட்ட சிறார்களை
முதன்மைப்படுத்துகிறார்.
பொதுவாகவே சிறார்களுக்குரிய குணாதிசயங்கள்
மிகவும் மென்மையானவைகள். எந்தவொரு
வஞ்சகமோ, குறுகிய எண்ணங்களோ, கபடோ இன்றி மனதிலிருந்து மகிழ்வை
வெளிப்படுத்தும் மலர் போன்றோர். கண்மூடித்தனமாக தனது பெற்றோரை நம்பக்கூடியவர்கள், இயல்பாகவே பகிர்ந்து உண்ணும்
பழக்கம் கொண்டவர்கள்,
அன்பிற்கு மாதிரியானவர்கள்,
களங்கமில்லா ஞானப்பாலின் மேல் வாஞ்சைக் கொண்டவர்கள் சிறார்கள். இத்தகைய நற்குணங்களுக்கு
சொந்தமானவர்களே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவர்கள் என்று அழைக்கிறார் இயேசு கிறிஸ்து. மத்தேயு 18 2,3-இல் அவர் ஒரு சிறு பிள்ளையைத் தன்னிடமாக அழைத்து,
அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச்
சொல்கின்றேன், உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொண்டவர்களாக, சிறு பிள்ளைகளைப்
போல் மாறாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்ல மாட்டீர்கள் என்று சொல்லி சிறார்களை மையத்தில் நிற்க வைக்கிறார். இதையே இன்றைய திருச்சபைகள் செய்ய
வேண்டும். ஆனால் அநேக நேரங்களில் திருச்சபைகள் தவறி விடுகிறது.
மற்ற யூதர்களின் கண்ணோட்டத்தில்
இயேசு சிறார்களை பார்க்கவில்லை, மாறாக
அவர்களை மன தாழ்மையின்
ரூபமாக பார்க்கிறார். இதை
தான் ரோமர் 12:16-இல் ஒருவரோடொருவர்
ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல்,
தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள் என குறிப்பிடுகிறது. சிறு பருவம் என்பது கற்றுக்கொள்ள
வேண்டும் என்னும் துடிப்பைக் கொண்டிருக்கும் பருவம். இதைப்போலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் திருமறை
வழியாக கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சீடர்களுக்கு பரலோகத்தில் பிரவேசித்து விடுவோம்
என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது, அது நிச்சயமாகவே போற்றுதலுக்குரியது. ஆனால் அங்கு யார் பெரியவர் என்கிற போட்டி மனப்பான்மையும்
அவர்களிடத்தில் காணப்பட்டது. அந்த
மனப்பான்மையும் எண்ணமும் தவறானது என்பதற்காக தான் இயேசு கிறிஸ்து சிறார்களை
மாதிரியாக சீடர்களுக்கு காட்டுகிறார். காரணம் சிறார்கள் மற்றவர்களின் வெற்றியை அவர்களோடு இணைந்தும் கொண்டாடி
மகிழக்கூடியவர்கள். அத்தகைய
சிறார்களிடத்தில் போட்டி மனப்பான்மையோ, எரிச்சலோ,
வெறுப்போ, கசந்த உணர்வோ இருப்பதில்லை.
இதை சிறார்களிடமிருந்து கற்றுக்கொள்ள
வேண்டும் என்பதற்காகவே சிறார்களை முன்னிறுத்துகிறார் இயேசு கிறிஸ்து. இதனை மத்தேயு 18:4-இல் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ,
அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என காண முடிகிறது. அன்று
தங்கள் நடுவில் நிறுத்தப்பட்ட சிறார்கள் சீடர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு
வந்தார்கள்.
அதுவரையிலும் சீடர்களுக்கு சிறார்கள் மீது இருந்த பார்வை முற்றிலுமாக மாறியது.
இந்த நிகழ்வின் வாயிலாக சிறார்கள்
கற்றுக் கொள்பவர்கள் மாத்திரம் அல்ல பிறருக்கு கற்றுக் கொடுப்பவர்கள் என்பதும்
நிரூபணமாகிறது. ஆனால்
இவை அனைத்தையும் ஏற்றுக் கொள்ள பெரியோராகிய நமக்கு ஏனோ மனம் மறுக்கிறது.
விஞ்ஞானத்திலும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும்
வளர்ந்து வரும் தற்கால உலகில் மனிதர்களில் அன்பு சகோதரத்துவம் விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மை விருந்தோம்பல் போன்றவை குறைந்து கொண்டே வருகிறது. நான், எனது, என்னுடையவைகள் போன்ற சுயநல சிந்தனை கொண்டே மனிதர்கள் வாழ்ந்து
வருகிறார்கள். அதிலும்
குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் இல்லத்திற்கு அருகில்
வசிப்பவர்கள் யார் என்கிற அறிமுகம் இல்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். பிறரோடு
நட்புணர்வுடன் வாழும் மனப்பான்மை பெரிதும் மாறிவிட்டது. இத்தகையோருக்கு சிறார்களை மாதிரியாக கொண்டு கற்றுக்
கொடுக்கிறார் இயேசு
கிறிஸ்து. இயல்பாகவே
சிறார்கள் இடத்தில் இருக்கும் நற்குணங்கள் கடவுளின் குணாதிசயங்களை பிரதிபலிப்பதாய்
அமைய பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் நம் நடுவில் கடவுள் நிறுத்தியிருக்கும் சிறார்களிடமிருந்து நாம் கற்றுக்
கொள்ள வேண்டிய நற்குணங்கள் பல உண்டு. அன்பே உருவாய் கொண்டவர்கள் மழலை செல்வங்கள் அவர்களிடமிருந்து அன்பை
மாதிரியாய் கொள்வோம். கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் முதுமொழிக்கு சான்றாளர்கள் சிறார்கள். இன மொழி பேதம் இன்றி கூடி ஆடி
விளையாட கூடியவர்கள்,
அவர்களிடத்திலிருந்து ஒன்றிப்பின் வாழ்வை கற்றுக் கொள்வோம். தர்மத்தின் ஒரு பகுதி தான் பகிர்தல் அறம்
என்பார்கள் அந்த தர்மத்தின் வடிவம் கொண்டவர்கள் சிறார்கள், அவர்களிடமிருந்து பகிர்ந்தலை கற்றுக் கொள்வோம் என
கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
Thank you
ReplyDeleteWelcome
DeleteVery nice
ReplyDeleteThank you
Deleteதாலித்தக்கூமி topic பேச்சு போட்டி
ReplyDeleteIt is available please check the blog. Thank you
Delete