ELOCUTION 2024- POST ADULT பணிவை கற்பிக்கும் பணியாளர் (யோவான் 13:3-15)
பணிவை கற்பிக்கும் பணியாளர் (யோவான் 13:3-15)

பணிவின் மாதிரியாய் இப்பாரில்
அவதரித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுவர் பணிப்புரிய பணிவுடன் அமர்ந்திருக்கும் நடுவர்களையும்
என்னைப் போன்று போட்டியாளர்களையும் சபையோரையும் அவையோரையும் அன்போடு வாழ்த்தி
வணங்குகிறேன். எனக்கு
இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பணிவை கற்பிக்கும் பணியாளர்
என்பதாகும். இதற்கு
ஆதாரமான திருமறைப்பகுதி யோவான் 13: 3-15 வரை, இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில்
எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச விரும்புகிறேன்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்திப்பணி ஆரம்பித்தக்காலம் தொடங்கி இதுவரையிலும் தன் சீடர்களோடு இணைந்து பிறருக்கு
உபதேசித்து வந்த ஆண்டவர் யோவான் 13 3 முதல் 15 வரையிலான திருமறைப்பகுதியில் தன்னோடு பயணித்து வந்த சீடர்களுக்கு
உபதேசம் பண்ணுகிறார். இது ஒரு
வகையான உரையாடல் முறையில் அமைந்துள்ளது. இந்த உரையாடலின் பின்னணியத்தை சிந்திக்கும்போது இவ்வுலகில் தனது திருப்பணி நிறைவடையப்போகிறது என்றறிந்த இயேசு கிறிஸ்து தனது செயலின் வழியாக வாழ்வியல்
பாடத்தினை தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அதற்கான கருவியாக கால்களை கழுவும் செயலினை கைக்கொள்ளுகிறார். பொதுவாக இயேசு கிறிஸ்து வாழ்ந்து வந்த காலக்கட்டத்தில் கால்களை கழுவதற்கு என்று வசதி படைத்த யூதர்கள் தங்கள் இல்லங்களில்
அடிமைகளை வைத்திருந்தார்கள். தங்கள்
விருந்தினர்களை உபசரிக்கும் விதமாக அதிலும் குறிப்பாக யூத விருந்தோம்பலுக்கு
அடையாளமாக தங்கள் அடிமைகளை கொண்டு விருந்தினர்களின் கால்களை கழுவினர். இதற்கு ஒப்பான நிகழ்வை ஆதியாகமம் 24:32-இல் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக யூத தொழுகைக் கூடங்களில் கடவுளுக்கு பலி செலுத்துவதற்கு
முன்பு ஆசாரியர்கள் தங்கள் கைகள் மற்றும் கால்களை கழுவும் பழக்கம் கொண்டிருந்தனர்
என்பதை யாத்திராகமம் 30: 17-21 விளக்குகிறது. இவை அனைத்தையும் செய்து நிறைவேற்றுவதற்கு என்று யூதர் அல்லாத அடிமைகளை யூதர்கள் பயன்படுத்தினர். இப்படி அடிமைகளுக்கே உரித்தான இப்பணியை இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு செய்கிறார்.
இப்படி செய்வதின் வாயிலாக உயர்ந்தோர்
தாழ்ந்தோர் தீண்டத்தகுந்தோர் தீண்டத்தகாதோர்
என்றிருந்த சமுக கட்டமைப்பின் சங்கிலியை உடைக்கும் முகமாக இது அமையப்பெற்றிருந்தது. யோவான் 13:6-இல் அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி:
ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்கிறார். பேதுரு இவ்வாறு கூறுவதற்கு காரணம் சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும்
எந்த ஒரு மனிதரும் இச்செயலை செய்ய முன் வருவதில்லை என்பதை பேதுரு நன்றாக
அறிந்திருந்தார். இயேசுவின் இச்செயலுக்கு சில நாட்களுக்கு முன்பு மகதலேனா
மரியாள் மூலம் இயேசுவின் பாதங்கள் சுத்திகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இயேசுவுக்கு சேவகம் அல்லது உதவிகள்
செய்யும் நபர்கள் இருந்தார்கள் என்பதையும், இயேசு பிறரால் மரியாதை செலுத்தப்படும் உயரத்தில் இருந்தார்
என்பதையும் நிரூபிக்கிறது. இத்தகைய
நிலையில் இயேசு கிறிஸ்துவின் இந்த திடீர் செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது. தனது தெய்வத்துவம், அதிகாரம், சர்வ
வல்லவர், உலகை ஆளும் பிரபு போன்ற தீர்க்கர்களின் வார்த்தைகளை எல்லாம் கடந்து
தன்னை தாழ்த்தும் விதமாக அடிமை ரூபத்தை எடுக்கிறார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
சீடர்களின் கால்களை கழுவுவதன் மூலமாக அவர்களும் தம்மை போலவே தங்களை விட
தாழ்ந்தவர்களிடத்தில் அன்பு கூற வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்து
காண்பிக்கிறார். இந்த
செயல் இயேசு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், மற்றவர்கள் தம்மை தாழ்மை உள்ளவர் என்று புகழ
வேண்டும் என்பதற்காகவும் இச்செயலை செய்யவில்லை, மாறாக உண்மையான மனத்தாழ்மைக்கு அடையாளமாக இதை செய்கிறார். எனவே தான் மத்தேயு
20:28-இல்
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை
மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் எனப்பார்க்கிறோம்.
தற்காலச் சூழலில் வாழ்ந்து வரும்
அநேகர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும் சுய விளம்பரம் தேடிக் கொள்ளவும் தாழ்மையுள்ளவர்களைப் போன்று தங்களை
காட்டிக் கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோரிடத்தில் உண்மை தாழ்மை இருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் தாழ்மை
சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரின் மேன்மையை மையம் கொண்டிருந்தது. புறம்பே இருந்தோரை ஆலயத்திற்குள் கொண்டு வந்தது, மரண விளிம்பில் தவிப்போருக்கு
சுகவாழ்வை கொடுத்தது, காணாமல்
போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் மேய்ப்பன் பணியாய் அது அமைந்திருந்தது. இயேசுவின் பணியில் முதன்மை காரியமாய் அமையப் பெற்றிருந்தவைகளை இன்று உண்மை தாழ்மையோடு பணியாற்ற வேண்டிய நாம் நமக்கு கீழாகப் பணிபுரிவோரிடத்தில் மரியாதையுடனும்
அவர்களுக்கு செலுத்த வேண்டிய கனத்துடனும் செயல்படுவதில்லை. பிறருடையதை வஞ்சிப்பதும், ஏழைகளை ஒடுக்குவதும், அதிகாரத்தை பலவீனமானர்கள் மேல் திணிப்பதையுமே பலர்
தங்கள் அன்றாட பணியாய் அமைத்திருக்கிறார்கள். எனவே கிறிஸ்துவின் மாதிரியை
பின்பற்றி நடக்கும் நாம் கடவுள் விரும்பும் வாழ்வை வாழ்வோம். அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரோடு நம்மை
அடையாளப்படுத்திக் கொண்டு கடவுளின் நல்பணியாளர்களாய்
நற்சான்று பகிர்வோம் எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன் ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
Comments
Post a Comment