சிலுவை மொழி 5 தாகமாயிருக்கிறேன்- SERMON ON THE CROSS VERSE 5 "I am Thirsty"

 

சிலுவை மொழி 5

தாகமாயிருக்கிறேன்

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான்: 19:28)


இயேசுநாதர் சிலுவையில் மொழித்த ஐந்தாம் திருவார்த்தை “தாகமாயிருக்கிறேன். இல்வுலகில் உயிருள்ள எல்லா படைப்புகளுக்கும் தாகம் இயல்பான ஒன்று. தாகம் என்றாலே ஒருவகையான அவஸ்தை தான். DON CARSON என்கிற இறையியலாளர் சொல்லும் போது. “THIRST OF JESUS CHRIST ON THE CROSS WOULD BE A PART OF THE TORTURE” என்கிறார். இயேசு கிறிஸ்துவின் “தாகமாயிருக்கிறேன்” திருவார்த்தை கி.பி.முதலாம் நூற்றான்டில் ஒரு தோல்வியின் வார்த்தையாகவே பார்க்கப்பட்டது.

v  கடவுளின் தன்மை இயேசுவில் இருந்திருத்தால் அவரின் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்காது. காரணம் இவர் கிணற்றின் அருகே சமாரியா பெண்மணிக்கு என்றும் தாகம் எடுக்காத வாழ்வை கொடுத்தவராயிற்றே என்று ஒரு பிரிவார் சொல்லிக் கொண்டிருந்தனர்.

v  Docetism (டொசட்டிசம்): தோற்ற காட்சிக் கொள்கையுடையவர்கள், இவர்கள் கடவுள் பிதாவில் மறைந்திருந்தார், இந்த கடவுள் பாடு மரணத்தின் போது இயேசுவிலிருந்து சென்று விட்டார் என்று போதித்தனர்.

v  Gnosis: அறிவுடைமை கொள்கை கூட்டத்தார் இவர்கள் இயேசுவுக்கு உண்மை சரீரம் கிடையாது, அவரால் சிலுவையில் துன்பம் அனுபவிக்க இயலாது, இயேசு நடந்தால் பூமியில் பாத தடயம் பதியாது என்பன போன்று உண்மைக்கு புறம்பான பல போதனைகளை மக்களிடம் தினித்துக் கொண்டிருந்தனர்.

இந்தகையோரின் போதனைகளால் இயேசுவின் இந்த ஐந்தாம் பொன்மொழி தோல்வியின் வார்த்தை என்றே போதிக்கப்பட்டு வந்தது. இத்தகைய திரிபு கொள்கைகளை மக்கள் எதிர் கொள்ளவும், இயேசுவுக்கு கடவுளின் தன்மையும், மனித தன்மையும் ஒன்றாகவே அவரில் இருந்தது என்பதை தன் நற்செய்தி நூலின் வழியாக யோவான் நற்செய்தியாளர் வெளிப்படுத்துகிறார். எனவே தான் தன்னுடைய நற்செய்தி நூலில் இயேசு செய்த அற்புதங்கள் (கடவுள் தன்மை), அதே சமயம்,

Ø  (யோவான் 4:6) இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் கிணற்றினருகே உட்கார்த்தார்.

Ø  (யோவான் : 11:35) இயேசு கண்னீர் விட்டார் (லாசரு மரண நிகழ்வு). (மனித தன்மை)

இதன் வழியாக இயேசுவில் இரு தன்மைகள் அல்லது சுபாவங்கள் இருந்ததை யோவான் எடுத்துரைக்கிறார். இயேசுவின் தாகமாயிருக்கிறேன் பொன்மொழி உண்மையாகவே வெற்றியின் வார்த்தை தானா?  அல்லது பிரிவினைவாதிகள் போதித்ததை போன்று  தோல்வியின் வார்த்தையா? என்பதை இயேசுவின் இரு தன்மைகளை (கடவுள் / மனிதன்) அடிப்படையாகக் கொண்டு சிந்திப்போம்.

1. தாகம் வெளிப்படுத்திய இயேசுவின் மனித தன்மை

§      வியாழன் மாலை 6:00 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணி வரை சுமார் 20 மணிநேரம் தண்ணீர் எதுவும் உட்கொள்ளவில்லை.

§       (லூக்கா: 22:44)- அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவருடைய உடல் கெத்செமனேயில் இருந்தே தன் பெலனை இழக்க ஆரம்பித்தது.

§      திகில், பயம், வியாகுலம், யூதாசின் துரோகம், தூக்கமின்மை, ஓயாத ஓட்டம், அலைச்சல், பொய்க் குற்றச்சாட்டுகள், பிலாத்து, ஏரோது விசாரனை என்று அவரின் உடல் மிகவும் களைத்து போய் இருந்தது.

§      கோலினால் அடி, பகைவர்களின் பரியாசம், முகத்தில் துப்பினார்கள், கன்னத்தில் அறைந்தார்கள், வாரினாலும், கையினாலும் அடித்தார்கள், தூஷண வார்த்தைகள் சொன்னார்கள். இத்தகைய செயல்களினால் இயேசுவின் சரீரமும், உள்ளமும் உடைந்து போய் இருந்தது.

§      கோடை வெயில், எருசலேம் முதல் கொல்கொதா (கபாலஸ்தலம்\ கல்வாரி) வரை முள்முடி சூட்டப்பட்டு, பார சிலுவையை சுமந்துக் கொண்டு சுமார் 2 KM  பயணம் செய்த களைப்பு அவருக்கு இருந்தது.

§      சற்று முன்பு மூன்று மணி நேரம் பிதாவின் முகம் மறைவு, மன போராட்டம், கடும் இருள் போன்றவை மனதளவில் சோர்வை கொடுத்திருந்தது.

சிலுவை பாடுகள் முன் குறிக்கப்பட்டவை, அது நிறைவேற மனித தன்மையில் இருந்த ஆண்டவர் பிதாவிற்கு தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார் (சங்: 22:15, சங் 69:3). “தாகமாயிருக்கிறேன் இது இயேசுவின் சுயநலமற்ற குணத்தின் உன்னத வெளிப்பாடு. ஆயிரமாயிரம் மக்களின் பசியை தீர்த்தவர் Without any Prestige issues சொல்கிறார் தாகம் என்று. பல அற்புதங்களுக்கு சொந்தக்காரர், அவர் நினைத்து இருந்தால் தனக்கு தானே அற்புதம் செய்திருக்கலாம், ஆனால் அவர் சிலுவையில் தன் மனித தன்மையை வெளிப்படுத்துகிறார்.

2. தாகம் வெளிப்படுத்திய இயேசுவின் கடவுள் தன்மை

இஸ்ரவேலரின் வாழ்வில் எப்போது எல்லாம் தாகம் ஏற்பட்டதோ அப்போது எல்லாம் கடவுளின் மகிமையை அவர்கள் கண்டார்கள். அவர்களின் தாகம் புதுவாழ்விற்கு நேராகவே ஒவ்வொரு முறையும் அவர்களை வழிநடத்தியது. எனவே சிலுவையில் இயேசு வெளிப்படுத்திய தாகம் அது அழிவிற்குரிய கூக்குரலல்ல, புதுவாழ்விற்குரிய ஆரவாரம் என்பதை இஸ்ரவேலரின் சில நிகழ்வுகளைக் கொண்டு நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

ஆகாரின் தாகம்

தன் பிள்ளையின் எதிர்கால வாழ்விற்குரிய தாகம் அவளுக்கு புதுவாழ்வை பெற்று தந்தது. ஆபிரகாமால் அனுப்பப்படுகிற ஆகார் (ஆதி 21:14) ஆபிரகாம் துருத்தியில் கொடுத்து அனுப்பிய தண்ணீர் தீர்ந்து போகவே, இனி பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது என கூறி சத்தமிட்டு அழுதாள். அவளின் அழுகைக்கு பலன், கடவுள் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் ஆதியாகமம் 21:17. மேலும், தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள் (ஆதி 21:19). வனாந்தரத்தில் எங்கிருந்து துறவு வந்தது ஆகாரின் தாகம் தீர்க்க கடவுளே துரவானார். அந்த துரவு சிலுவையில் தாகம் என்கிறது.

இஸ்ரவேலரின் தாகம்

எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலரின் வாழ்வில் ஏற்பட்ட சுதந்திர தாகம் \விடுதலை தாகம் அவர்கள் பாலும், தேனும் ஓடுகிற சிறந்த தேசமான கானானை சுதந்தரித்துக் கொள்ள காரணமானது.

வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் தாகம்

இஸ்ரவேலரின் விடுதலைப் பயணத்தின் போது ஏற்பட்ட தாகம் எண் 20:11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. இந்த இடத்தில் கிறிஸ்துவாம் கன்மலை நீரூற்றாய் வெளிப்பட்டு அவர்கள் தாகம் தீர்த்தார். அதே நீரூற்று சிலுவையில் தாகம் என்கிறது.

தாவீதுக்கு ஏற்பட்ட தாகம்

(2சாமு 23:15) தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். இந்த சமயத்தில் பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது. ஆனாலும் தாவீதின் மூன்று பராக்கிரமசாலிகள் சென்று தண்ணீர் கொண்டு வந்தனர். பெலிஸ்தர் சாதாரண படை அல்ல, தலைசிறந்த ராணுவ கட்டமைப்பை கொண்டு இருந்தது. ஆனாலும் தாவீதின் தாகம் அவன் படை வீரர்களுக்கு மன உறுதியையும், தைரியத்தையும், எதிரிகளின் முகாமுக்குள் செல்லும் துணிவையும் கொடுத்தது. அன்று வீரத்தை கொடுத்த தாகம் இதோ வலிமை இழந்து சிலுவையில் தாகம் என்கிறது.

சிம்சோனின் தாகம்

நியாயாதிபதிகள் 15:18-20 சிம்சோன் ஆயிரம் பேரை கழுதையின் தாடை எலும்பினால் கொன்று போட்டு விட்டு களைத்துப்போய் தாகம் அடைந்தான். பெலிஸ்தியர் கையிலே சாக வேண்டுமா என்று கேட்ட மாத்திரத்தில், (நியா 15:19) அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான். அன்று சிம்சோனின் தாகம் தீர்த்த எந்க்கோரி இன்று நிற்கதியாய் தாகம் என்கிறது.

கானாவூர் விருந்தினர்களின் தாகம்

கானாவூர் திருமண வீட்டில் விருந்தினர்களின் தாகம் இயேசுவின் முதலாம் அற்புதம் நிகழ காரணமாய் அமைந்தது. சுவை நிறைந்த திராட்சரசம் பரிமாறப்பட்டது சுவை நிறைந்த ரசத்தை கொடுத்தவர் இன்று ரத்தம் சிந்திக் கொண்டே கசந்த காடி பெற தாகம் என்கிறார்.

சமாரிய பெண்மணியின் தாகம்

கிணற்றின் அருகே அன்று சமாரியா பெண்ணிற்கு ஏற்பட்ட தாகம் இயேசுவை நகரெங்கும் பிரசங்கிக்கும் கருவியாக மாற செய்தது. அவளின் அன்றைய தாகம் இன்று வரை அவள் சிறப்பை நாம் சிந்திக்க காரணமாய் அமைந்தது.

இப்படியாக தாகம் இஸ்ரவேலரின் வாழ்வில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்ரவேலருக்கு எங்கெல்லாம் தாகம் ஏற்பட்டதோ அங்கெல்லாம் கடவுளின் மாட்சிமையை அவர்கள் கண்டார்கள். சிலுவையில் அறையப்பட்டு, இத்தகைய வேதனையின் மத்தியிலும்,

ü  உலகிற்கு பொதுமன்னிப்பு

ü  கள்வனுக்கு புது வாழ்வு

ü  தாய்க்கு நல்லுறவு

என தன் துன்பத்திலும் பிறர் தாகம் தீர்த்தவர் தாகமாயிருக்கிறேன் என்றார். இஸ்ரவேலரின் அனுபவத்தில் தாகம் வந்தாலே கடவுள் செயல்படுகிறார் என்று தான் அர்த்தம். அப்படியானால் இயேசுவின் தாகம் கூட புதுவாழ்வை, வெற்றியை தந்திருக்க வேண்டும் அல்லவா? ஆம்! அது என்ன? என்பதை சிந்திப்போம்.

இயேசுவின் தாகம் ஏற்படுத்திய மாற்றம்

      இஸ்ரவேலர்கள் இயல்பிலேயே மேய்ப்பர்கள், நாடோடி கூட்டத்தார். எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்குமோ அங்கெல்லாம் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் காட்டி வந்தனர். இயேசுவுக்கு கல்வாரியில் ஏற்பட்ட தாகம், அவரைப் பின்பற்றுவோரும் இந்த இடத்தை மேய்ச்சலில் இடமாக மாற்றியது.

      இதுவரையிலும் கொல்கொதா மனித வாழ்வினை முடிவுக்கு கொண்டு வரும் இடமாக இருந்து வந்தது. இயேசுவின் தாகத்திற்கு பிறகு இந்த இடம் மானிட வாழ்வில் புது வாழ்வினை அருளும் புண்ணிய இடமாக மாறியது.

      கல்வாரிக்கு அசுத்தத்துடன் வந்தவர்கள், இயேசுவில் பரிசுத்தத்தை கண்டார்கள்.

      மன கசப்புடன் வந்தவர்கள், இயேசுவில் இனிமையை கண்டார்கள்.

      சந்தேகத்துடன் வந்தவர்கள் இயேசுவின் சாட்சிகளாய் திரும்பி சென்றார்கள்.

      இதுவரையிலும் கல்வாரிக்கு வந்தவர்கள் பாவிகள், சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர் என்று முத்திரை குத்தப்பட்டு சிலுவையை அவமானத்தின் சின்னமாக சுமந்து வந்தவர்கள். இனிமேல் கல்வாரிக்கு வருபவர் தன்னைத்தான் வெறுத்து இயேசுவுக்காய் தன் சிலுவையை சுமந்து வருவார்கள்.

      இதுவரை பயத்தோடும், நடுக்கத்தோடும் கல்வாரிக்கு வந்தவர்கள் இனி அர்ப்பணிப்புடனும், கெம்பீர சத்தத்தோடும் கல்வாரிக்கு வருவார்கள்.

      வாழ்வின் முடிவுக்காக கல்வாரிக்கு வந்தவர்கள், இனி புதுவாழ்வை தொடங்குவதற்காக கல்வாரிக்கு வருவார்கள்.

சிலுவையில் அருளப்பெற்ற மன்னிப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடம்

இயேசு முதல் திருமொழியாய் கொடுத்த மன்னிப்பு, இங்குதான் உயிர்பெற்றது. காரணம் இங்கு இயேசுவின் தாய், தனக்கு அன்பான சீடன், ஏன் பிதாவின் பிரசன்னமும் இருந்தது. ஆனால் இவர்கள் யாரிடமும் இயேசு தண்ணீர் கேட்கவில்லை. மாறாக, தாகமாயிருக்கிறேன் என்று பொதுவாகச் சொல்லுகிறார் உடனே மத் 27:48, யோ 19:29,30- இயேசுவை பகைத்தவன் ஓடிச்சென்று காடியை கொடுத்தான். இயேசு பகைவனிடம் தண்ணீர் குடித்தார், அப்படியானால் அவருக்கு இனி பகைமையே இவ்வுலகில் இல்லை, இயேசுவின் மன்னிப்பு இங்கு உறுதிப்படுத்தப்பட்டு உயிர் பெறுகிறது.

இயேசு ஒரு முறை தன் சீடர்களிடம் (லூக்கா 9:5)- உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். இத்தகைய போதனையை தன் சீடர்களுக்கு கொடுத்தவர் இந்தக் கூட்டத்தார் அவரை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்றால் நிச்சயம் காடியை ஏற்றிருக்க மாட்டார். (மத் 27:34)- கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். இதைப் போன்று இந்த முறையும் மறுப்பு தெரிவித்து இருப்பார். ஆனால் பிதா இவர்களுக்கு மன்னித்ததால் இந்த காடியை அவர் ஏற்றுக்கொண்டார்.


ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊


Comments

  1. மிக நன்று நண்பரே கடவுளின் தூய திருப்பெயர் மாட்சியுறட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)