சிலுவை மொழி 4 - Sermon on the Cross Verse 4 என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?

 

சிலுவை மொழி 4

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?


ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27:46)

இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மாற்கு 15:34)

இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை இரண்டாக வகைப்படுத்துவார்கள். முதல் மூன்று வார்த்தைகளும் பிறருக்காகவும், ஏனைய நான்கு வார்த்தைகள் தனக்கானதாகவும் என சொல்லப்படுவது உண்டு. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தனக்கென்று ஆண்டவர் பயன்படுத்திய சிலுவை மொழிகளில் முதல் வார்த்தை இந்த நான்காம் திருமொழி.

இந்த வார்த்தைக்கான சிறப்பியல்புகள்:

v வேறு எந்த வார்த்தைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த நான்காம் திருமொழிக்கு உண்டு. அதாவது திருமறை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட போது இந்த வார்த்தை மட்டுமே அதனுடைய மூல மொழிகளான எபிரேயம் (Hebrew) மற்றும் அரேமி (Aramaic) சொற்களை எல்லாம் மொழிபெயர்ப்புகளிலும் கொண்டுள்ளது.

v  ஏலீ (எபிரேயம்), லோயீ  (அரேமிய) வார்த்தைகள். இந்த இரண்டும் இஸ்ரவேலின் பேச்சு மொழிகள். இஸ்ரவேல் தங்கள் கடவுளை தொழுதிட இம்மொழிகளையே பயன்படுத்தினார்கள்.

v  இந்த நான்காம் வார்த்தை மட்டுமே இரண்டு நற்செய்தி நூல்களில் இடம் பெறுகிறது. (மத்தேயு 27:46, மாற்கு 15:34)

v  இந்த நான்காம் திருவார்த்தை சங்கீதம் 22:1-இல் வருகிற மேசியாவை குறித்ததான தீர்க்கதரிசன இறைவேண்டல். அந்த இறைவேண்டலையே இயேசு கிறிஸ்து சிலுவையில் நான்காம் திருமொழியாய் பயன்படுத்தினார்.

v  இந்த நான்காம் திருமொழியைத் தவிர ஏனைய வார்த்தைகளெல்லாம் மிக வேகமாக அல்லது தொடர்ச்சியாக சிலுவையிலிருந்து சொல்லப்பட்டவைகள். ஆனால் இந்த நான்காம் வார்த்தை சிலுவையிலிருந்து புறப்பட சுமார் மூன்று மணி நேரம் இடைவெளி ஏற்பட்டது.  

இந்த திருவார்த்தையை குறித்த கருத்துக்கள்:

Øஇயேசுகிறிஸ்து கடவுள் இல்லை சாதாரண மனிதர் என்கிற விவாதத்திற்கு முன்வைக்கப்படும் திருமறை வசனங்களில் இந்த நான்காம் திருமொழியும் ஒன்று.

Ø வேதனையின் வெளிப்பாட்டால் சொல்லப்பட்ட வார்த்தை.

Ø பிதாவின் முகம் மறைக்கப்பட்டதால் சொல்லப்பட்ட வார்த்தை.

Ø பிதாவினால் கைவிடப்பட்டதின் வெளிப்பாடு.

Ø பாவமானதால் மனிதத் தன்மை வெளிப்பட்ட தருணம்.

Øபடைப்புகள் அனைத்தும் தன்னை படைத்தவரின் வேதனையை பார்க்கக்கூடாது கண்களை அடைத்து கொண்டன.

இப்படியாக பல விளக்கங்கள் இந்த நான்காம் வார்த்தைக்கு தரப்பட்டாலும், புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் ஆசிரியர்களோ, வரலாற்றிலோ இந்த வார்த்தைக்கான தெளிவான விளக்கம் தரப்படவில்லை. இந்த வார்த்தையினை புரிந்துக் கொள்ள, சிலுவை நிழலிலே அமர்ந்து தியானிப்பதின் வழியாக மட்டுமே நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனாலும் இந்த வார்த்தை புறப்படுவதற்கு முன்பு ஏற்பட்ட நிகழ்வான காரிருளை மையப்படுத்தி, இஸ்ரவேல் வரலாற்றுக்கும் காரிருளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை திருமறை பின்னணியத்தோடு சிந்தித்கும்போது இந்த நான்காம் திருமொழி தோல்வியின் வார்த்தை அல்ல இது வெற்றியின் வார்த்தை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

காரிருள்:

திருமறையில் இஸ்ரவேலரோடு தொடர்புடைய நிகழ்வுகளில் எங்கெல்லாம் காரிருள் சூழ்ந்ததோ, அங்கெல்லாம் வெற்றியின் தொனி ஒலித்தது. இஸ்ரவேலர் தங்கள் கடவுள் மேகங்களின் நடுவே வீற்றிருக்கிறார்  என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். அதற்கான காரணமும் இருந்தது அவை என்ன என்பதை தொடர்ந்து தியானிப்போம்.

நிகழ்வு 1: (Symbol of Peace)

ஆதியாகமம் 15: 12-21 வரையிலான திருவசனங்களில்  இஸ்ரவேலரின் முற்பிதாக்களின் ஒருவரான ஆபிரகாமோடு கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கை சொல்லப்பட்டுள்ளது. இது ஒருவகையான  Brief Account of Abraham’s Entire Life எனலாம். இங்கே கடவுள் ஆபிரகாமோடு செய்துகொள்ளும் உடன்படிக்கையில் அவருடைய வாழ்வின் தொடக்கம் முதல் அவருடைய மறுமைக்கு பின் நடைபெறும் நிகழ்வுகளையும் கடவுள் ஆபிரகாமுக்கு  வெளிப்படுத்துகிறார். சுமார் 400 ஆண்டுகள் இஸ்ரவேலர் அனுபவிக்க இருக்கும் உபத்திரவத்தையும், அவர்களின் எதிர்கால வாழ்வை குறித்த தெளிவும் இங்கு சொல்லப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் போது ஆதியாகமம் 15:17,18-  வசனங்களில் சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்புஅந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணிஎன்பதிலிருந்து அங்கு காரிருள் சூழ்ந்து கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இந்த நிகழ்வின் வழியாய் கடவுள் தன் மக்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும்போது காரிருள் அடையாளமாய் தரப்படுகிறது. இந்த காரிருள் முடிந்து வெளிச்சம் எழுகிற போது அது மகிழ்ச்சிக்கு ஏதுவானதாக அமைகிறது என்பதை ஆபிரகாமோடு கடவுள் கொண்ட உடன்படிக்கை நமக்கு கற்றுத் தருகிறது. அந்தப் பார்வையில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சூழ்ந்த  காரிருள் இயேசுநாதரோடு பிதா செய்து கொண்ட உடன்படிக்கையாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த பாடுகளின் ஊடாய் எதிர்காலத்தில் நிகழப்போகும் மாற்றத்தையும், இந்த உலகம் திருச்சபைகளாலும், விசுவாச கூட்டத்தாராலும் நிறைந்து இருப்பதையும் தன் குமாரனுக்கு காட்சியாக காண்பித்திருக்கலாம்.

நிகழ்வு 2: (Symbol of Liberation)

இஸ்ரவேல் வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது காரிருள் கடவுள் ஆபிரகாமுக்கு அறிவித்த 400 ஆண்டுகால இஸ்ரவேலரின் உபத்திரவத்தின் நிறைவில் எகிப்திலே ஏற்படுகிறது. இதனை யாத்திராகமம் 10:22,23 ஆகிய திருவசனங்கள் குறிப்பிட்டுள்ளன. மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.

மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது. இந்த காரிருள் எகிப்திலே மூன்று நாட்கள் தொடர்ச்சியாக காணப்பட்டது. இது எகிப்திய அடிமைத்தனத்தின் நுகத்தை இஸ்ரவேலர் அனுபவித்து வந்த போது இந்த காரிருளை அனுபவித்தார்கள். அந்தக் காரிருள் கடவுளின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது காரிருளில் இஸ்ரவேலின் நேசர் தீபமானவர் என்னும் புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இது விடுதலை பயணத்திற்கான அடையாளங்களில் ஒன்றாக இஸ்ரவேலருக்கு அமைந்தது. அதைப்போலவே சிலுவையில் வெளிப்பட்ட காரிருள் இயேசுவின் விண்ணக பயணத்திற்கு அடையாளமாக அமைந்திருக்கலாம். அதே சமயம் முழு மனுக்குலமும் பாவ இருளிலிருந்து விடுபட்டு பேரொளியை அனுபவிப்பதற்கான பயணத்தின் துவக்கமாக (It is a beginning of liberation from sin) இந்த காரிருள் காட்சி தருகிறது.

நிகழ்வு 3: (Symbol of Care)

இஸ்ரவேல் வரலாற்றில் மூன்றாவது காரிருள் இஸ்ரவேலரின் விடுதலைப் பயணத்தின் போது ஏற்பட்டது. இதனை உபாகமம் 5:4-22 வரையிலான வசனங்களில் நாம் பார்க்க முடிகிறது. இங்கே விடுதலைப் பயணத்தின் போது நித்திய காலமும் இஸ்ரவேலர் பின்பற்றவேண்டிய பத்து கற்பனைகள்/ கட்டளைகள்  மோசே வழியாக கடவுள் இஸ்ரவேலருக்கு கொடுக்கின்றார். அந்தச் சூழலில் காரிருள் சூழ்ந்து கொண்டது என்பதனை உபாகமம் 5:22-இல் இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார் என பார்க்கிறோம். பத்து கற்பனைகள் என்று சொல்வது இஸ்ரவேலர் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று, தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டாயமாய் சொல்லப்பட்டவைகள். இவை இஸ்ரவேலருக்கு உயிரும், உணர்வும் போன்றது. இப்படி நித்திய காலமும் பின்பற்றப்பட வேண்டிய ஆண்டவரின் வார்த்தைகள் வெளிப்பட்ட போது அங்கு காரிருள் சூழ்ந்து கொண்டது. அதைப் போலவே இங்கு சிலுவையில் ஏற்பட்ட காரிருள் இந்த உலகம் இயங்கும் வரை ஆண்டவருடைய சிலுவை மொழிகளை உலக திருச்சபைகள் பேசும் என்று சொல்லுகிற நிலையை ஏற்படுத்துகிறது. அன்று இஸ்ரவேலர் ஆண்டவருடைய கட்டளைகளை எப்படி உணர்வாக, உயிராக எண்ணினார்களோ, அதைப் போலவே இன்று உலக கிறிஸ்தவமும், திருச்சபையும் அவருடைய 7 பொன் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.

நிகழ்வு 4: (Symbol of Holiness)

இஸ்ரவேல் வரலாற்றில் நான்காவது காரிருள் 1இராஜாக்கள் 8:10-14 வரையிலான திருமறை வசனங்களில் வெளிப்படுகிறது. இங்கே இஸ்ரவேலரின் வாழ்வாகவும், உறைவிடமாகவும் கொடுக்கப்பட்ட எருசலேம் தேவாலயத்தை சாலமோன் பிரதிஷ்டை செய்த போது அங்கே காரிருள் சூழ்ந்து கொண்டது. கடவுள் தங்களை உயரமான இடத்திலிருந்து ஆசீர்வதிக்கிறார், எருசலேம் தங்களுக்குரிய வாழ்விடம் என்று இஸ்ரவேலர் நம்பினர். எருசலேம் தேவாலயம் கடவுளுடைய பிரசன்னத்தின் இருப்பிடமாய் பார்க்கப்பட்டது. ஆண்டு முழுவதும் எருசலேம் விழாக்களாலும், பண்டிகைகளாலும் நிறைந்திருக்கும். குறிப்பாக பஸ்கா பண்டிகையின்போது மிக விமர்சையாக இஸ்ரவேலின் கொண்டாட்டங்கள் அமையப் பெற்றிருக்கும். அப்படி இஸ்ரவேல் வாழ்வில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒன்றான எருசலேம் தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அங்கே காரிருள் சூழ்ந்து கொண்டது.

இங்கு சிலுவையில் ஏற்பட்ட காரிருளால், அதுவரையிலும் சாபத்தின் சின்னமாய் பார்க்கப்பட்ட சிலுவை, இயேசு சிலுவை மரணத்தை தழுவியதால் புனித சின்னமாக மாறியது. சிலுவை, சாபத்திற்குரியதாய் இல்லாதபடி அது பக்திக்கு ஏற்றதாய் அடையாளப்படுத்தப்பட்டது. எனவே இங்கு சிலுவையில் ஏற்பட்ட காரிருள் சிலுவையை புனிதத்தின் அடையாளங்களில் ஒன்றாகப் பார்க்க வழி வகுத்தது. இப்படி இஸ்ரவேல் வரலாற்றில் வெற்றியின் மையமாய் இருந்த காரிருள், இயேசுவின் சிலுவைப் பாடுகளின் போதும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

இயேசுவின் தன்மையை குறித்து திருமறை சொல்லும் போது 1 யோவான் 1:5-இல் தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லைஎன்கிறது. ஆனால் இங்கோ, சிலுவையில் தோன்றிய காரிருள் தன்னிகரில்லா ஒளியானவரை ஒளியில்லாத இருளிலே மும்மணி நேரம் தவிக்க செய்தது. இதன் வழியாக   இஸ்ரவேலர் காலகாலமாக தங்கள் பாவம் போக்க பின்பற்றும் ஒரு மரபு நிகழ்வும் நிறைவேறுகிறது.

போக்கு ஆடு”: அது என்னவென்றால் யூத மரபிலே ஒரு பழக்கம் இருந்தது அதாவது தங்கள் பாவம் மன்னிக்கப்பட இஸ்ரயேலர் போக்கு ஆடு என்று சொல்லுகிற ஒரு முறையை பின்பற்றுவார்கள். தங்களுடைய பாவம் போக்க ஒரு ஆட்டின் தலைமீது தங்கள் கைகளை வைத்து அதை வனாந்திரத்தில் கொண்டு சென்று விட்டு விடுவார்கள். அது வனாந்தரத்தின் பாலைவனங்களில் சென்று மடிந்துவிடும். இதன் மூலம் தங்கள் பாவம் இந்தப் போக்கு ஆட்டோடே போய் விட்டது, தங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது, அது முடிந்து போயிற்று என்று சொல்லுகிற நம்பிக்கையை இஸ்ரவேலருக்கு கொடுத்தது. இங்கு இயேசு கிறிஸ்துவும் சிலுவையிலே உலகத்தின் பாவத்தை சுமந்து நிற்கும் ஒரு போக்கு ஆடாக தன்னை ஒப்புக் கொடுக்கிறார். இந்த பணியை சிறப்பாக செய்து முடித்தின் மூலம், இருளில் தவித்த ஜனங்கள்  பேரொளியை காண, ஒளியாய் இவ்வுலகில் தோன்றியவர் இருளானார்.

வெற்றி முழக்கம்  

எனவேதான் அந்த காரிருளுக்கு பிறகு தோன்றிய வார்த்தை சத்தமாய் வெற்றியின் முழக்கமாய் சொல்லப்பட்டது, (மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்).  புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இந்த சத்தத்தை குறிப்பதற்கு கிரேக்க பதமான Tetelestai” என்னும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். இது “it is completed or finished” என்கிற பொருளைத் தருகிறது.  கிரேக்கர்கள் இந்த வார்த்தையை வெற்றியை “Sound of Victory” குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனடிப்படையில் சிந்திக்கிற போது இந்த வார்த்தை தோல்வியின் வார்த்தை அல்ல இது வெற்றியின் வார்த்தை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாய் இயேசுவின் சிலுவை மொழிகளில் இந்த நான்காம் வார்த்தை தோல்வியின் வார்த்தை அல்ல அது வெற்றியின் கம்பீர தொனி என்னும் புரிதல் நமக்கு மிக அவசியமானது.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊

 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)