SAVE GREEN BE GREEN

 

பசுமை வளம் காப்போம்



அன்று, வெட்டப்பட்ட மரங்களை டன் கணக்கில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்காய் ஏற்றி சென்ற கன்டெய்னர்கள் எல்லாம் இன்று, வெளிநாட்டிலிருந்து கொரோனா நிவாரண உதவியாய் இந்தியாவிற்கு இறக்குமதியாகியிருக்கும் ஆக்சிஜன் உருளைகளை (Oxygen Cylinder) சுமந்த வண்ணம் சாலைகளில் காட்சி தருகின்றன. இதைத்தான் காலங்கள் மாறினால் காட்சிகளும் மாறும் என்பார்களோ! என்னவோ!. இயற்கையை நேசிப்பதையும், சுற்றுச்சூழல் மாசுயின்றி பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்ல வீதிகள் தோறும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகைகளை எட்டிக் கூடப் பார்க்காதவர்கள், இன்று தங்கள் உயிர்கள் காக்கப்பட எங்கேயாவது ஆக்சிஜன் உருளை கிடைக்குமா? என்கிற விவரத்தை விளம்பர சுவர்களிலும், வலைத்தள திரைகளிலும் தேடி அலைகிறார்கள். தற்கால சூழலை கவனிக்கும்போது, பசுமை வளங்களின் பயனையும், முக்கியத்துவத்தையும் மனிதனுக்கு பாடமாய் கற்பிக்க இயற்கை முற்படுகிறதோ? என்று எண்ணும் அளவிற்கு இன்றைய நிலை பரிதாப நிலையாய் அமையப் பெற்றிருக்கிறது. இயற்கையின் மகத்துவத்தை அறியாது, சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு, நாம் வாழும் இதே இந்திய திருநாட்டில் பசுமை வளங்களை பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்து, மடிந்தார்கள் என்கிற வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை!!

இந்திய நாட்டின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1485-ஆம் ஆண்டு தோன்றிய ஒரு சமய மரபு தான் பிஷ்னோய்(Bishnoi). இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் பிஷ்னோய்கள் (The Bishnois) என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் சூழலியல் பாதுகாப்பை மையமாக கொண்டிருந்தன. பசுமையான மரத்தை வெட்டுவதும், பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுவதும் மானிட வாழ்வின் பிரதான தீச்செயலாக கொண்டிருந்தனர். 1730-ஆம் ஆண்டில் இவர்களை ஆட்சி செய்து வந்த ஜோத்பூரின் மகாராஜாவான அபய் சிங் தனக்கு என்று விசாலமான அரண்மனை ஒன்றை கட்ட முடிவு செய்தார். அதற்கான செங்கற்களை உற்பத்தி செய்வதற்கு செங்கல் சூளைக்கு தேவையான விறகுகளை வெட்ட முனைந்தார். எனவே இந்தப் பிஷ்னோய்கள் வாழ்ந்து வந்த ஜேக்னாட் என்கிற கிராமப்புற காட்டுப்பகுதிக்கு அரசனின் படைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் பசுமை மரங்களை வெட்ட முனைந்தபோது பிஷ்னோய்கள் அவர்களை கடுமையாக எதிர்த்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு தாயும், அவருடைய மகளும் அந்த மரங்களை பாதுகாக்க அவற்றை கட்டித்தழுவிக் கொண்டனர். “வெட்டப்படும் ஒரு தலையை விட, வெட்டப்படும் ஒரு மரம் அதிக மதிப்பு உடையது என்று சத்தமிட்டு முழங்கினர். இதற்கு காரணம் அவர்களின் மரபு படி ஒருவர் உயிரே போனாலும், பச்சை மரத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற அடிப்படை நெறிமுறையே. அந்தத் தாயின் முழக்கத்தைக் கேட்ட மற்ற கிராம மக்களும் அவ்வாறே மரங்களை கட்டித்தழுவிக் கொண்டனர். இதன் விளைவாக அன்றையதினம் 363 பிஷ்னோய்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை அறிந்த ஜோத்பூர் அரசர் அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்று இந்த தீயச் செயலுக்கு மனம் வருந்தி, கிராமத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உத்தரவிட்டார். அந்தச் சட்டம் இன்று வரை அந்தப் பகுதியில் நடைமுறையில் உள்ளது.

வாழ்வியல் நெறிமுறைகளை வார்த்தைகளோடு முடித்துக் கொள்ளாமல், அதற்கு செயல் வடிவம் கொடுத்த பிஷ்னோய் பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிற அதே நாட்டில் தான் நாமும் வாழ்ந்து வருகிறோம். இயற்கை மீது நாம் கொண்டிருக்கும் பற்றையும், அக்கறையையும் பேஸ்புக் மற்றும் பிற வலைதளங்களில் பதிவிட்டு, வெற்றுப் பதிவுகளாகவே முடித்துக் கொள்ளாமல், அதை செயல்களாய் நாம் வாழும் சமுதாயத்தில் பரவச் செய்வோம். முடிந்த வரை சிறப்பு நிகழ்வுகளுக்கு பரிசு பொருள்கள் கொடுக்க முனையும் போது, மரக்கன்றுகளையோ, மர விதைகளையோ பரிசுகளாய் கொடுக்க முடிந்த மட்டும் முன்வருவோம். இயற்கையை படைத்த இறைவன் அவற்றை நல்லது என கண்டார் (ஆதியாகமம்: 1:31). எனவே இயற்கை வளமாம் மண்ணிலிருந்து உருவான மனிதன் இயற்கைக்கு நல்லதையே செய்வான் என்று நம்பி, அதைப் பண்படுத்தி, பாதுகாக்கும் உன்னதப் பொறுப்பை, நமக்கு தந்திருக்கிறார். இப்பூமி நம்மை சுகமாய் சுமக்கும் காலம் வரை, பசுமை வளத்திற்கு எந்த விதத்திலும் நாம் பெரும் சுமையாய் இருந்துவிடாமல்! பசுமை நமது வாழ்வுரிமை என்கிற சிந்தை கொண்டு, இறைவனின் உன்னத படைப்பாம்  இயற்க்கையை வளப்படுத்துவோம், வாழ்வடைவோம்

ஆ. ஜெனில் தாஸ்

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)