ONLINE EDUCATION - A CHAIN

 

ஆன்லைன் வகுப்பு (online class) என்னும் சங்கிலி




பெரும்பாலானோருக்கு பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இணையதள பயன்பாடு, தற்காலச் சூழலில் பொழுது விடிந்ததும்  தவிர்க்க முடியாத அவசியமாய் மாறிவிட்டது. covid-19 பெருந்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வி தொடர்ச்சியை பெரும் பொருட்டு அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் கல்வியை ஊக்குவித்து வருகின்றன. Zoom, Google classroom, Microsoft teams, போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகள் (applications) இதற்கு பெரிதும் உதவுகின்றன.  ஆன்லைன் கல்வியின் சவால்கள் பன்முகத்தன்மை கொண்டவை, அதேசமயம் ஆன்லைன் கல்வி விதிமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றை கற்றுக் கொள்ள அனுமதிக்கிறது. எங்கும் செல்லாமல் ஒருவர் வசிக்கும் இடத்திற்கே கல்வியை இது அழைத்து வந்திருக்கிறது. கடுமையான கால அட்டவணைகள் (time table) மாற்றம் பெற்றுள்ளன. கல்வி பயில பேருந்துகளிலும், வாகனங்களிலும் பயணித்த மாணவர்கள் தினசரி பயணங்களிலிருந்து சற்று ஓய்ந்து இருக்கிறார்கள்.  இவை ஆன்லைன் கல்வியின் நன்மைகளாய் சொல்லப்பட்டாலும் இதிலிருக்கிற தீமைகளும், அவல நிலைகளும் சிந்தித்து பார்க்க வேண்டியவைகளே.

தீமைகள்:

வகுப்பறையில் உடல் மொழி (body language) மற்றும் கண் தொடர்பு (eye contact) ஆசிரியருக்கு முக்கியமானவை. இவ்விரண்டு அடிப்படை அவசியங்களும் ஆன்லைன் வகுப்பறையில் பெற கடினமானவை. இத்தகைய டிஜிட்டல் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான உன்னதமான உறவை இயந்திரமயமாக (mechanism) மாற்றிவிட்டன. மாணவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள்? மனச்சோர்வும், உடல் சோர்வும் மாணவ-மாணவிகளுக்கு இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வது இணையவழி ஆசிரியருக்கு மிகுந்த சவால் தரக்கூடியவை. குறிப்பாக தொடக்க கல்வியை பெறும் மாணவர்களை கையாள்வதும், பருவத்திற்கேற்ற கல்விகளை கொடுப்பதும் இன்றைய பெற்றோர்,  ஆசிரியர்களுக்கான மிகப்பெரிய சவாலும் எதிர்கால அச்சுறுத்தலுமாகும். அடிப்படைக் கல்வியை ஆன்லைன் வகுப்புகளால் சரிவர செயல்படுத்த முடிவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை. அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த ஆசிரியர்களில் சிலர் Smart phones, Laptops போன்ற கருவிகளை கையாளுவதில் அனுபவமும், பிரியமும் இல்லாதவர்களே! இவர்களில் பலருக்கு ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் கற்று தருவது கால சோதனையாக இருந்து வருகிறது.  வகுப்பறைகளில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் பாடங்களை கற்று தரும் பல திறமையான ஆசிரியர்கள் இணையதள   பயன்பாடுகளை கையாளுவதில் திணறுவதை பார்க்கிற மாணவர்கள், ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்கின்ற அவலநிலைகளையும் இந்த ஆன்லைன் வகுப்புகள் ஏற்படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே சிறார்களுக்கு கவனிக்கும் திறன் (concentration Span) மிகக் குறுகிய நிமிடங்களே இருக்கும். வகுப்பறைகளில்  இவர்களை கையாளுவதே சவால் நிறைந்தது. அப்படி இருக்க தொடுதிரை (touch screen) முன்பு அமர்ந்து கல்வி பயிலும் சிறார்களுக்கு ஏற்படும் பல கவன சிதறல்களை கட்டுப்படுத்துவது கடினமே. அதிக நேர மொபைல் பயன்பாடு பதின்வயது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் காரணிகளாக மாறி இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அவல நிலைகள்:

நகர்ப்புறங்களில் இருக்கிற மாணவர்கள் ஆன்லைன் கல்வியை சிறந்த முறையில் பயன்படுத்தும் அத்தனை வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அதேசமயம் மலை பிரதேசங்களிலும் (hill stations) பின்தங்கிய கிராமப் பகுதிகளிலும் (backward rural areas),  இருக்கிற மாணவர்கள் சிறந்த Mobile network, மின் இணைப்புகள், இணையக் கல்வி கற்பதற்கான கருவிகள் மற்றும் சாதனங்கள் வாங்குவதற்கு இயலாத சூழலில் இந்த கல்வியை தொடர முடியாத அவலநிலைகளும் இருக்க தான் செய்கிறது. கருத்துகணிப்பு ஒன்றின் முடிவில் இந்தியாவின் 27% மாணவ, மாணவிகள் கல்வி தொடர்பை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்கள் என் கசப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.  இதிலும் குறிப்பாக கற்றல் கோளாறுகள் (Learning disorders), மன இறுக்கம் (autism) மற்றும் பார்வைக் குறைபாடு (visual impairment) கொண்ட மாணவர்களுக்கு கல்வியை கொடுப்பது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று. இத்தகைய மாணவர்கள் கல்வியை பெற முடியாமல் தவிப்பது ஆன்லைன் கல்வியின் தோல்வியே. குறிப்பாக ஆன்லைன் கல்வியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பெண்பிள்ளைகளே. பொதுவாகவே, இந்தியாவின் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகள் Internet, mobile phones பயன்படுத்துவதை மிகுந்த கட்டுப்பாடுடன் கையாளும் சூழலில், அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண் பிள்ளைகள் இணையக் கல்வி பெறுவது பெரும் சவாலாகவே இருக்கிறது.  சிறந்த கல்வியைப் கற்று வந்த பெண் பிள்ளைகள் பலர் இன்று இல்லங்களிலும், தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் குடும்ப வருவாய் ஈட்டுவதற்காக அமர்த்தப் படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்களை (child labours) பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சிகளை நம்முடைய அரசாங்கம் கடந்த நாட்களில் எடுத்து அதில் வெற்றி கண்ட சூழலில், இந்தப் பெருந்தொற்று காலங்கள் மீண்டும் சிறார்களை தொழிலாளர்களாய் மாற்றி விட்டன என்பது வேதனையின் உச்சம்.  

சில மாணவர்களுக்கு இன்றைய இணைய கல்வி பொழுதுபோக்காக அமையப் பெற்றிருக்கிறது. அதேசமயம் பலர் இந்த கல்வியை பெற இயலாதபடி ஏதோ ஒரு சூழலில் தடைபட்டும் இருக்கிறார்கள். ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஆன்லைன் கல்வியின் பயன்பாட்டை பெற இரு பிரிவினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூக பொருளாதார சூழலில் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க முடியுமா? என்று சொன்னால் அது கேள்விக்குறியானதே! தொழில்நுட்பமும், தொழில் திட்டங்களும் பெருகி வருகிற சூழலில் தேசத்தின் கடைமுனை வரையிலும் இந்த இணைய கல்வி வசதிகளை கொண்டு சேர்க்க முடியவில்லை என்றால் இதுவும் ஒருவகை அடிமைத்தன சங்கிலியே.

ஆ. ஜெனில் தாஸ்


Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)