UNITY IN DIVERSITY TOKYO 2020 I வேற்றுமையில் ஒற்றுமை டோக்கியோ ஒலிம்பிக் 2020

 

வேற்றுமைகளை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான டோக்கியோ ஒலிம்பிக் 2020

விளையாட்டு உலகின் திருவிழா என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தான். இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை “TOKYO 2020” என்ற தலைப்பில் நடைபெற்றது. இது மாடர்ன் ஒலிம்பிக்கின் 32-வது விளையாட்டுப் போட்டியாகும். ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பெரும் ஒவ்வொரு வெற்றியும் நாட்டின் வெற்றியாக பங்குபெறும் நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளில் 205 உலக நாடுகள் சார்பாக சுமார் 11300-க்கும் அதிகமான வீரர்கள் 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். இந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் வேற்றுமைகளை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறியது.‌

 

அகதிகள் ஒலிம்பிக் அணி: (Refugee Olympic Team)



வறுமை, வன்முறை, போர், பயங்கரவாதம், என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே அகதிகள். அப்படி தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடி செல்பவர்கள், அவர்களது அடையாளம் தொடங்கி அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது உண்டு.  இந்த நிலையில் அகதிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் அகதிகள் ஒலிம்பிக் அணி(Refugee Olympic Team). இதைக் குறித்து கடந்த 2015-ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach) அறிவித்திருந்தார்.  அவர் சொன்னபடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் 12 விளையாட்டுகளில்  அகதிகள் ஒலிம்பிக் அணியை சார்ந்த 29 வீரர்கள்  பங்கேற்று விளையாடினர். விளையாடுவதற்கான திறன் இருந்தும், அதற்கு முறையான பயிற்சியும், நிதி ஆதாரமும் இல்லாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, Olympic Scholarships for Refugee Athletes program என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதில் எந்தவித நாட்டையும் சாராமல் அகதிகளாக உள்ள தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தடம் பதித்த அகதிகள் அணி வீரர்கள் எந்தவொரு நாட்டையும் சார்ந்தவர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை, இவர்கள் எந்த நாட்டையும் சாரந்திடாத Independent வீரர்களாக பங்கேற்றனர். அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள 82.4 மில்லியன் அகதிகளின் குரலாக அவர்களது பங்கேற்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது. அகதிகள் அணி சார்பாக எந்தவொரு வீரரும் ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை. இருப்பினும், அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடுவதே சிறப்பான தருணம். கலாச்சார, பொருளாதார, வாழ்வியல் சிதைவுகளை கடந்து செயல்படுத்தப்படும் இத்தகைய அங்கீகாரங்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும், வரும் நாட்களில் இந்த அணி வீரர்கள் வெல்கின்ற ஒலிம்பிக் பதக்கம் பல தாக்கங்களை ஏற்படுத்தும்  என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

 

கத்தார் வீரர் பார்ஷிமின் செயல்:

 

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் கத்தாரின் பார்ஷிம் (Mutaz Essa Barshim) என்பவரும் இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரியும் (Gianmarco Tamberi) தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள்.  இருவரும் 2.37 மீ உயரம் தாண்டினர். இருவரும் சம நிலையில் இருந்ததால் இருவருக்கும், அவர்கள் தாண்டிய அளவை விட உயரம் அதிகம் வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது.  அதிலும் சமநிலையே தொடர்ந்தது. இறுதியில் இத்தாலி வீரர் தம்பேரி காயம் காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.  அதன்பின் கத்தார் வீரர் செய்த செயல்தான் நெகிழ்ச்சியானது.  தனக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டி அமைப்பாளர்களிடம் "நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்க இருவருக்கும் பகிர்ந்தளிப்போம் என்று பதிலளிக்கப்பட்டது. உடனே கத்தார் வீரர் பார்ஷிம், எதிர் நாட்டு வீரரின் திறமையையும், விடாமுயற்சியையும் மதித்து அவரும் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக அறிவித்தார், இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  இந்த செயல் இனம், மொழி, நிறம் போன்ற பாகுபாடுகளைக் கடந்து மனிதநேயமும், மனசான்றும், தனிமனித மரியாதையும், மனித குலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை பறைசாற்றும் நிகழ்வாக அமையப் பெற்றிருக்கிறது.

 

வேற்றுமைகளை களைந்து தேசமே கொண்டாடிய வெற்றி:



டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 127 பேர் கொண்ட மிகப்பெரிய அணியை இந்தியா அனுப்பியது. இந்த எண்ணிக்கை எந்த ஒலிம்பிக்கிலும் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் எண்ணிக்கையைவிட அதிகம். இதற்காக Target Olympic Podium Scheme என்ற திட்டத்தை அமைத்து வீரர், வீராங்கனைகளுக்கு வெளிநாட்டு பயிற்சி மையங்களிலும், வெளிநாட்டு பயிற்சியாளர்களிடமும் பயிற்சி பெறும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது.  இதன் விளைவாக பல வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை நம் நாட்டு வீரர்கள் நிறைவேற்றினார்கள். எந்த ஒலிம்பிக்கிலும் பெறாத அதிக பதக்கங்களை, மொத்தம் 7 பதக்கங்கள் இந்த ஆண்டு பெற்றுக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக 41 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விளையாட்டாகிய ஹாக்கியில் (Hockey) பதக்கம் பெற்றது தேசத்தின் உணர்வுபூர்வமாக தருணம். ஈட்டி எறிதல் (Javelin throw) போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற Neeraj Chopra-வின் வெற்றி வேற்றுமைகளைக் கடந்து, சமூக ஏற்றத் தாழ்வுகளை மறந்து, நாடே கொண்டாடிய ஒவ்வொரு இந்தியர்களின் வெற்றியாக பார்க்கப்பட்டது. இது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிற முதுமொழியை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

                 TOKYO 2020” ஒலிம்பிக்கின் இத்தகைய நிகழ்வுகள் வேற்றுமைகளை ஒப்புக் கொள்வதும், ஒற்றுமைக்கு வழிவகுப்பதும் தனி மட்டும் சமூக வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பிரதிபலிப்பதாய் அமையப் பெற்றிருக்கிறது. திருமுறையில் ஆதியாகமம்-1:31 “…தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது…” என்று குறிப்பிடுகிறது. கடவுளின் உன்னதப் படைப்பில் துளியளவும் வேற்றுமை இல்லை, கடவுளின் படைப்பில் அனைத்தும் சமம், படைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வுலகில் கிறிஸ்துவின் திட்டமும், நோக்கமும், வருகையும் தனிப்பட்ட இனத்துக்கோ, சமூகத்திற்கோ உடையது அல்ல மாறாக ஒட்டுமொத்த உலகிற்கும் விடுதலை வாழ்வை வழங்கி, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமைகளை ஏற்படுத்தும் நோக்கமாகவே அமையப் பெற்றிருக்கிறது. எனவே கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நாம், நம்மில் இருக்கின்ற வேற்றுமைகளை ஒப்புக்கொண்டு, கிறிஸ்துவில் ஒன்றுப்படும் வாழ்வை வெளிப்படுத்தி, பிறர் வாழ்வில் ஒளியேற்றி, சமுதாயத்திற்கு மாதிரிகளாகுவோம், ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்திற்கு விதைகளாவோம்.


ஆ. ஜெனில் தாஸ்

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)