சிலுவை- சுமை அல்ல சுகம்!! - Cross is not a Burden but a Pleasure!!

 

சிலுவை- சுமை அல்ல சுகம்!!


வரலாற்றில் சிலுவை:

சிலுவை ஒரு தூக்கு மரம். அது முதன் முதலில் பொனீசியா (Phoenicia) நாட்டின் தீரு மாநகரில் கிமு 325-இல் பயன்படுத்தப்பட்டது. பிறகு எகிப்து (Egypt), பாரசீகம் (Persia), கார்த்தேஜ் (Carthage), கிரேக்கம் (Greece), உரோமை (Rome) போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. உரோமை அரசில் குற்றம் செய்த அடிமைகளும், அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களும் சிலுவையில் தூக்கிலிடப்பட்டனர். சிலுவையில் தூக்கப்படுதல் மிகவும் இழிவான தண்டனை என்று உரோமை அரசில் கருதப்பட்டது. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிலுவையில் அறையப்பட்டு பொதுமக்கள் பார்வையில் சாகும் வரை தொங்க விடப்பட வேண்டும், பார்ப்பவர்கள் அந்த நபர் செய்த குற்றத்தையும், அவரையும் நிந்தித்து துஷிப்பார்கள்.  வரலாற்றில் T X போன்ற வடிவங்களிலான சிலுவைகளில் இயேசுவின் சீஷர்கள் உட்பட பல தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறையப்பட்டார்கள். இத்தகைய கொடிய சிலுவை மரணத்தை ஒழித்தவர் உரோமை கிறிஸ்தவ மன்னன் கான்ஸ்டன்டைன் (Constantine the Great). அவர் முதன்முதலில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிலுவையை தமது மணிமுடியிலும், செங்கோலிலும் பதித்தார்.

 

திருமறையில் சிலுவை:

சிலுவை என்னும் சொல் புதிய ஏற்பாட்டில் 83 முறை இடம் பெறுகிறது. சிலுவை, கிறிஸ்து தம்முடைய சிறந்த தன்மையை பொன் மொழிகளால் வெளிப்படுத்துவதற்கு ஒரு புதிய வாய்ப்பளித்தது, அதன் மூலம் சிலுவை சிறந்த அருளுரை மேடையாகவும் காட்சி தருகிறது. இயேசு, சிலுவையை உவமை பொருளாகவும் பயன்படுத்தினார்  (லூக்கா: 9:23; 14:27). புதிய ஏற்பாட்டு காலத்தில் சிலுவை சுமத்தல் என்பது ஒரு வழக்குச் சொல்லாக இருந்தது. அச்சொல் அவமானம், பெருந்துன்பம் என்ற இரு பொருள்களை உணர்த்துகிறது. எனவேதான் தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் கிறிஸ்துவுக்காக துன்பத்தை ஏற்க விருப்பமற்றவர்கள் கிறிஸ்தவராய் இருக்க முடியாது என்கிறார். சிலுவை போதனை யூதர்களுக்கு ஒரு இடறல், கிரேக்கர்களுக்கு பைத்தியம், உரோமயருக்கு அருவருப்பு இவ்வாறு அக்காலத்தில் இருந்த அனைத்து மக்களும் மகா அருவருப்பாய் நினைத்த சிலுவையை பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் மேன்மையாக எண்ணினார். அவர் தனது மேன்மையெல்லாம் சிலுவையே என்று அறிக்கையிடுகிறார் (கலா: 6:14). முன்னே அவருக்கு கொடிய வெறுப்பும், அவமானமுமாய் தோன்றின சிலுவை இப்போது ஒப்பிடக்கூடாத மகிமையாய் விளங்கியது.

சிலுவையில் வெளிப்பட்ட தேவன்பு:

யூதர், ரோமர், கிரேக்கர் முதலியோர் சிலுவையை தொட்டாலே தீட்டு என எண்ணினர். பொதுவாக அடிமைகள் மற்றும் சமுதாயத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் சிலுவை மரணம் வழங்கப்பட்டது. திருமுறையில் உபாகமம் 21: 23 இல் தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன் என்று சொல்லப்படும் சாபத்தின் கூற்றை, உலகின் மீது தான் வைத்திருந்த தூய அன்பால் மேன்மையாக மாற்றினார் இயேசு கிறிஸ்து. தன் மரண வேளையின் சமயத்தில் உலகின் மீது அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்த தவறவில்லை. அவைகளே சிலுவை மொழிகளாக வெளிப்பட்டு இன்றும் போற்றப்படுகின்றன. அன்று அருவருப்பின் அடையாளமாய் கருதப்பட்ட சிலுவை இன்று கிறிஸ்தவ சமயத்தின் புனித சின்னமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சாபமாய் கருதப்பட்டதை தொட்டு, தூக்கி தோளில் சுமந்து அதில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவின் பாடு மரணமே. இன்று கிறிஸ்தவ ஆலயங்களிலும், இல்லங்களிலும், நிறுவனங்களிலும் சிலுவை காட்சி தருகிறது. அதை அணிகலன்களாகவும், அடையாளங்களாகவும் அணிந்துக் கொள்கிறோம். வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல உள்மனதில் சிலுவையை சுமந்த இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ முயல்வதும், வாழ்ந்து காட்டுவதுமே இயேசுகிறிஸ்துவிற்கு நாம் செலுத்தும் மனப்பூர்வமான காணிக்கையும், மரியாதையுமாகும்.

தற்கால வாழ்வில் சிலுவை:

நியாயமின்றி துன்புறுத்தப்படும் போது அத்துன்பத்தை பொறுமையோடு சகித்தலும் சிலுவை சுமத்தலே. தற்காலச் சூழலில் தேசங்களுக்கு நடுவே நடைபெறும் போர்,  எல்லைப் பிரச்சினைகள், தீவிரவாதம், மதவாதம், சொந்த நாட்டில் மொழி, மதம், இனம் போன்ற பாகுபாட்டால் பாதிக்கப்படுதல், இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம், புலம்பெயரும் தொழிலாளர்கள் (Migrants), மனித உரிமை மீறல்கள், கருத்து சுதந்திரம் பறிப்பு, அரசியல் மற்றும் ஆணவ கொலைகள் போன்ற இயற்கைக்கும், மானுட வாழ்விற்கும் பெரும் துன்பம் விளைவிக்கும் அனைத்தும் தற்கால வாழ்வில் சிலுவைகளே. இயேசுகிறிஸ்து மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையை மட்டும் சுமக்கவில்லை தன்னைப் பகைத்த மனிதர்களின் கூர்மையான வார்த்தைகள், பழிச் சொற்கள், நிந்தைகள், பரியாசங்கள், மனதாலும், சரீரத்தையும் காயங்கள் என பல சிலுவைகளை சுமந்தார். கிறிஸ்து வாழ்ந்து காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்பட்டிருக்கும் நாமும் சமூகத்தின் கடைநிலையில் தவித்து கொண்டிருப்போருடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு அவர்கள் சுமக்கும் சிலுவையின் தன்மைகள் மற்றும்  அதற்கான காரணங்களை உணர்ந்து அறிந்து அத்தகையோருக்கு தோள் கொடுப்போமானால் நாமும் இயேசுவின் சிலுவைப் பாதையில் பயணிக்க முடியும். எனவே பிறர் சிலுவை சுமக்க நாமே காரணமாகாமல் அனைவரும் கடவுளின் படைப்பில் சமம் என்கிற சகோதர உணர்வு கொண்டு நம்மை போன்று அயலகத்தாரையும் நேசித்து பிறருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையும் சுயநலமின்றி கொடுப்போம், கிறிஸ்துவின் சாயலை சமூகத்தில் பிரதிபலிக்கச் செய்வோம், இதன்மூலம் மானுட வாழ்வில் சிலுவை சுமை அல்ல சுகமென உணர வழிவகுப்போம்.

                                                                                                                        ஜெனில் தாஸ்


Thank you for visiting my blog. Feel free to give your comments. Don't forget to follow my blog page.😊 Have a good time.

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)