சிமிர்னா சபை (வெளிப்: 2:8-11) SMYRNA CHURCH
சிமிர்னா சபை (வெளிப்: 2:8-11)

வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு
சபைகளில் இரண்டாவது சபை சிமிர்னா. இந்த ஏழு சபைகளில் கடவுளின் நற்சாட்சி பெற்ற இரண்டு சபைகளில்
ஒன்று தான் சிமிர்னா சபை. இந்த சபை எபேசுவுக்கு வடக்கே முப்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது. சிமிர்னா
என்பதற்கு “கசப்பு” அல்லது “வெள்ளைப்போளம்” என்பது பொருள். தன் பெயரின் பொருளுக்கு ஏற்றார்போல் இந்த சபை கிபி 150 முதல் 312 வரையிலான
காலகட்டத்தில் மிகுந்த உபத்திரவத்தை கசப்பான அனுபவமாய் கொண்டிருந்தும், கடவுளின் அன்பிற்கு சான்றாய் நறுமணம்
வீசியது.
இந்த சபை அமைந்துள்ள சிமிர்னா ஒரு துறைமுக
பட்டணம். செழிப்பும், வாணிபமும், மருத்துவமும்,
அறிவியலும் இங்கு மிகுதியாய் காணப்பட்டன. இந்த சிமிர்னாவை
தான் மேற்கத்திய நாடுகளின் நுழைவு வாயில் என்பர். மேலும் இதனை
ஆசியாவின் அணிகலன், மணிமுடி, கிரீடம் எனவும் அழைத்தனர். கிரேக்க நாகரீக
காலத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட நகரம் இதுதான். இது ரோமர்களின்
காலகட்டத்தில் உலகப் புகழ்பெற்றது. இதற்கு காரணம் இப்பட்டணத்தில் கிடைக்க பெறும்
வெள்ளைப்போளம் மிகுந்த வாசனை கொண்டதாய் இருந்தது. இன்று இந்தப்
பட்டணம் துருக்கி (Turkey) நாட்டில் இஸ்மிர் (Ishmir) என்னும் பெயரால்
அழைக்கப்படுகிறது. இன்றளவும் இந்த
பட்டணம் நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் முன்னிலை
வகிக்கிறது. இந்த சிமிர்னா சபையை பவுலின் ஆலோசனையின்படி Polycarp என்பவர் நிறுவினார் என்னும்
கருத்து வரலாற்று
ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது.
தன் பெயரின் பொருளுக்கு ஏற்ப சிமிர்னா சபை ஆன்மீக வாழ்விலும் நறுமணம் வீசியது. எனவேதான் கடவுளின் ஆசியையும், ஆலோசனையையும் பெற்றுக் கொண்டது. வெளிப் 2:8-11 வரையிலான வசனங்களில் சிமிர்னா திருச்சபையை
குறித்த கடவுளின் நற்சான்றை காண முடிகிறது. கடவுளிடமே
மிகுந்த நன்மதிப்பை பெரும் அளவிற்கு இத்த திருச்சபை நல்வாழ்வை கொண்டிருந்தது. பொதுவாகவே முதலாம் நூற்றாண்டில் வாணிபத்தில் செழிக்கும் பட்டணங்கள் சிற்றின்ப
கேளிக்கைகளில் செழித்து காணப்படும். கடவுள் பயம்
இல்லாதபடி ஏனோ தானோ என்கிற வாழ்வியல் அனுபவங்கள் நிறைந்திருக்கும். இதனால் பல பட்டணங்கள் கடவுளின் கடும் சினத்திற்கு ஆளாகி தரைமட்டமாக்கப்பட்ட
அனுபவங்களையும் திருமறையில் காண முடியும். ஆனால் இந்த சிமிர்னா
சபையோ கடவுளை அறியும் அறிவில் செழித்து ஓங்கியது. இதன் விளைவாக
தான் வெளிப் 2:10-இல் மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் என்னும் கடவுளின்
ஆலோசனைகளுக்கு ஏற்ப இந்த சிமிர்னா சபையின் பொறுப்பாளராக இருந்த Polycarp கிபி 155 -இல் இரத்த
சாட்சியாய் மரித்தார். எத்தகைய கடின
சூழலிலும் கடவுளுக்காய் வாழ்வதே திருச்சபையின் தலையாயக் கடமை என்பதற்கு சான்றாய் வாழ்ந்த
சிமிர்னா திருச்சபை, இந்த 21-ஆம் நூற்றாண்டின்
திருச்சபைகளுக்கு சான்றாய் அமையப் பெற்றிருக்கிறது.
இத்தகைய தியாகத்தாலும், பல மிஷனரிகளின் கடின உழைப்பாலும் இன்று நாம் பெற்றிருக்கும் திருச்சபைகளில் பதவிக்காகவும், வீண் பெருமைக்காகவும் எத்தனை போட்டிகளும், பொறாமைகளும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுளின் வாக்குத்தத்தங்களை பெறவேண்டிய இடத்தில், எத்தகைய வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம் என்கிற தற்பரிசோதனை நமக்கு தேவை. தாழ்மையோடு கடவுளைப் பணிந்து கொள்ள வேண்டிய இடத்தில், தற்பெருமை பேசி மகிழ்கிறோம். அன்று சிமிர்னா சபையின் நல்வாழ்வினை கண்டு நற்சான்று கொடுத்த கடவுள், இன்றைய திருச்சபைகளின் நிலை கண்டு மகிழ்வாரோ!! வருந்துவாரோ!!
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment