உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு ENCOUNTER WITH THE RISEN LORD
உயிர்த்த ஆண்டவருடன் சந்திப்பு
(யோவான் 20:24-29)
தற்கால
உலகில் பூட்டிய அறைக்குள் இருந்த அனுபவத்தினை 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று
நமக்கு தந்தது. இந்தப் பெருந்தொற்று நம்மில் பலருக்கு அவநம்பிக்கையையும், தெளிவின்மையையும்
அதிக அளவில் ஏற்படுத்தியது. யாரிடத்தில் போவது? யாரை நம்புவது? என்ன செய்வது? என்கிற
தெளிவில்லாதபடி பூட்டிய அறைக்குள்ளாய் முடங்கி போன அனுபவத்தை இந்த நேரத்தில் நாம் நினைவு
கூறுவோம். இதேபோன்று இயேசு கிறிஸ்துவின் பாடு மரணத்தின் போது பூட்டியறைக்குள்ளாய் அவநம்பிக்கையிலும்,
தெளிவின்மையிலும் இருந்த சீடர்கள், அதிலும் குறிப்பாக தோமாவின் அனுபவத்திற்கு மிகவும் பொருந்தி
செல்வதாய் அமைகிறது.
இந்தியாவின்
திருத்தூதர் என அழைக்கப்படுபவர் தூய தோமா. திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின்
முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என
நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும்
இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு தூய தோமா. நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக,
அதுவும் காணாமலே நம்புவதற்கான பாடமாக நம்முன் நிற்கிறார் தோமா.
இயேசுவின்
இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று நிலைகளில் செயல்படுகின்றனர்:
v யூதர்களுக்குப் பயந்து,
அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று பயந்து
பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும் எருசலேமில் உள்ள சீடர்களின்
செயல்பாடாக இருந்திருக்கும்.
v எருசலேமை விட்டு வெளியே
சென்றவர்கள், தங்கள்
சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும்
பணிக்குச் சென்றனர்.
v புனித தோமாவோ மக்களோடு
மக்களாக நடமாடிக் கொண்டிருக்கின்றார்.
இத்தகைய
வாழ்வியலை கொண்டிருந்த தோமாவின் உயிர்த்த ஆண்டவரை சந்தித்த அனுபவதின் மகத்துவம் நம்
வாழ்விற்கு கற்றுத் தரும் பாடத்தினை மூன்று நிலைகளில் சிந்திப்போம்.
1. நம்பிக்கை பெற தெளிவு பெற்றார்
புனித
தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான குறிப்புகளைத் தருகின்றார். லாசருவின் இறப்பு
செய்தி கேட்டு இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய சீஷர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா,
'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்'
(யோவா 11:16) என்று துணிகின்றார். இயேசுவின்
இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை
நமக்கு எடுத்துரைக்கிறது.
ஆண்டவரோடு
இறக்கவும் துணிந்த தோவமா இங்கே (யோவா 20:25) ஆண்டவர் உயிர்த்தார் என்று சீடர்கள் சொல்லும்
போது நம்ப மறுக்கின்றார். உயிர்த்தெழுதல் மீது தனது நம்பிக்கை இல்லாமையினை வெளிப்படுத்துகிறார்.
இதற்கு காரணம் தோமா உட்பட மற்ற சீடர்கள் யூதர்களுக்கு பயந்து மேல்வீட்டறையில் பூட்டிய
அறைக்குள்ளாய் முடங்கியிருந்த சூழல் சீடர்களுக்கு தெளிவின்மையை ஏற்படுத்தியது. தங்களுக்கு
முன்மாதிரியாகவும், நம்பிக்கையாகவும் நினைத்திருந்த இயேசுவுக்கு ஏற்பட்ட நிலை சீடர்களின்
வாழ்வில் மாபெரும் தாக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். “பச்ச
மரத்திற்கு இந்த பாடு என்றால் பட்ட மரத்திற்கு என்ன பாடு” என்கிற முன்னோர் சொல்லுக்கு
ஏற்ப அங்கலாய்ப்பு நிலை சீடர்களின் மனதை ஆக்கிரமித்து கொண்டது. இந்த நிலையில் தான்
எட்டு நாட்களுக்கு முன்பு தோமாவை தவிர மற்ற சீடர்களுக்கு காட்சி கொடுத்த ஆண்டவரின்
அனுபவத்தை சீடர்கள் தோமாவிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதை நம்புவதற்கு அவர் முன் வரவுவில்லை,
முற்படவுவில்லை. அதற்கு பதிலாக ஆதாரத்தை சீடர்களிடம் கேட்கிறார் தோமா. பழைய ஏற்பாட்டில்,
தொடக்க நூல் 32:22-32 யாக்கோபும் இதே நிலையை தான் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டவராகிய கடவுளுடன் ஆதாரத்தை வேண்டுகிறார், கடவுளின் நாமத்தை கேட்கிறார். கடவுளின் நாமத்தை
கேட்கும்போது, நீ என் நாமத்தை
கேட்பானேன் (தொடக்க நூல் 32:29) என்று ஆண்டவராகிய கடவுள் யாக்கோபுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
கடவுள் தமது மக்களின் தெளிவின்மையை தனது திருக்காட்சி வழியாக தெளிவுப்படுத்துகிறார்
என்பது இதன் வாயிலாக உறுதி பெறுகிறது.
2. நம்பிக்கையில் உறுதி கொள்ளல்
'ஆண்டவரைக் கண்டோம்' என சீஷர்கள் தோமாவிடம் சொல்கின்றனர். அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான
காயத்தை நான் கண்டு, அந்தக்
காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றார் தோமா
(யோவா 20:25). ஆனால், எட்டு நாட்களுக்கு பிறகு இரண்டாவது திருகாட்சியினை
சீடர்களுக்கு வெளிப்படுத்தும் போது இங்கு தோமாவும் இணைந்து கொள்கிறார்.
கதவுகள்
தாளிடப்பட்டிருக்கிறது அந்த கதவுகள் தட்டப்படவில்லை, காரணம் சீடர்களுடைய தெளிவின்மையும், அவர்களது பதட்டமான சூழலின் மனநிலையையும் ஆண்டவர் நன்கு அறிந்திருந்தார்.
எனவே அவர்கள் நடுவில் வந்து நின்று அவர்களுக்கு திருக்காட்சி வழங்குகிறார். ஆனால் தோமாவிற்கோ
இது முதல் திருக்காட்சி, முதல் அனுபவம் மற்ற சீஷர்கள் முன்பே இயேசுவை கண்டார்கள். அவர்களுக்குள்
தெளிவிருந்தது, ஆனால் தோமாவின் தெளிவின்மை இந்த திருக்காட்சி வழியாக தெளிவு பெறுகிறது,
அவரை நம்பிக்கையில் உறுதி கொள்ள செய்தது. இயேசு தோன்றி, 'இதோ! என் கைகள்!'… (யோவா 20:27) என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. 'நான் சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?'
என அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். தோமா இந்த இடத்தில்
செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும் மேலானது: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!'
என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா. 'ஆண்டவர்' என்ற வார்த்தையை
மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது.
புதிய
ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை “ஆண்டவரே” என்று அறிக்கை செய்த முதல் நபர் தோமா. இந்த
அறிக்கை அவருக்கு ஏற்பட்ட தெளிவையும் அந்த அறிக்கையின் மீது அவரது உறுதிக்கும் சான்றாகவும்
விளங்குகிறது. யோவான் 20:26 “சமாதானம்” என்னும் வார்த்தையின் வாயிலாக தெளிவற்ற நிலையில் இருந்த அவருக்கு நிலையான பதிலை ஆண்டவர்
வழங்குகிறார். சீடர்களிடத்தில் ஆதாரத்தை கேட்ட தோமா, இப்போது தன் கண்களால் அவர் கேட்ட
ஆதாரத்தை ஆண்டவரில் காண்கிறார். யோவான் 20:27-இல் பூட்டிய அறைக்குள் தோமாவிற்கு ஆண்டவரின்
திருக்காட்சி அவரை நம்பிக்கையில் உறுதி கொள்ள வாய்ப்புகள் வழங்கியது, இது தோமாவை நம்பிக்கையில்
உறுதி பெறவும் செய்தது. நிருப பாடத்தில் திப 9:1-18-யில் உயிர்த்தெழுந்த ஆண்டவருடன்
சந்திப்பு சவுலை பவுலாக மாற்றியது. தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும், எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவையும் பவுலுக்கு வழங்கியது.
உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் மீது அளவு கடந்த அன்பையும் அவரில் கொண்டிருக்க வேண்டிய
நம்பிக்கைக்கு மாதிரியாகவும் பவுலை உயர்த்தியது.
3. நம்பிக்கைக்கு சான்றாக வாழ்ந்தார்
யோவான்
நற்செய்தி இவரை திதிமு என்னும் தோமா என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா என்றும்
அழைக்கின்றது. 'திதிமு' என்றால் “இரட்டை” என்று அர்த்தம். இந்த சொல்லைப் பற்றி நிறைய
ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில் ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு.
'திதிமு' என்பது தோமாவிடமிருந்த
இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது. இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச்
செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார்
(யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற சீடர்களுக்குத்
தோன்றியபோது, 'நான் நம்பமாட்டேன்' (யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில் துணிவும்,
அவநம்பிக்கையும் கொண்டவர் இவர்.
ஆண்டவராகிய
கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது. இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட
அனுபவம். நம் தந்தை மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது. இறையனுபவம்
பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால்
அது இல்லை என்று ஆகிவிடுவதில்லை. பூட்டிய அறைக்குள்ளாய் ஆண்டவரின் திருக்காட்சியை கண்டு
நம்பிக்கையின் சிறகுகளோடு வெளியேறிய தோமா, கடல் கடந்து இந்தியாவை வந்தடைந்தார். அந்த நல்ல செய்தியை இந்திய
மண்ணிலும் பறைசாற்றினார் தோமா.
புனித
தோமா நம் மண்ணில் அறிவித்த செய்தி நமக்கு நல்வாழ்வையும், விடுதலையையும் கொண்டு வந்தது.
இன்று நாம் ஒருவர் மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வையே
நற்செய்தியாக அமைத்துக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறார் தோமா. அதேசமயம் குழுமம்
இன்றியமையாதது, உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (யோவா 20:24). குழுமம்
இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது. இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப்
பற்றிச் சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது. 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்ற சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால் எத்துணை நலம்! இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Please publish this year Sunday school speech contents
ReplyDeleteUPLOADED PLEASE CHECK
Delete