எங்கும் எதிலும் பெண்கள்- WOMENS' SUNDAY 2025
எங்கும் எதிலும் பெண்கள்
எண்ணாகமம் 27:1-11 2தீமோத்தேயு.1:1-8
லூக்கா 2:40-52

மண்
தொடங்கி விண் வரையிலும் பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து உயர்ந்து நிறைந்து இருக்கிறார்கள். தாய் திருநாடு, தாய் திருச்சபை, பூமித்தாய், கடல்
தாய், நீதியரசி, மணவாட்டி சபை என சமூக, சமய, அரசியலிலும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள், முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். அன்றாட வாழ்வில் பெண்களை
மையப்படுத்தி பல சட்டங்களும் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. பெண்கள் உரிமைக்கான பல குழுக்ககளும், அமைப்புகளும் உலகம் முழுவதும்
நிறைந்துள்ளன. அதேசமயம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும்
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காலங்காலமாகத்
தொடரும் அவலம்தான் என்றாலும், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டிருக்கும்
இன்றைய நவீன நாட்களில் இன்னும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், குற்றங்களும்,
பாதுகாப்பின்மையும் அதிகரித்துவருவது பெரும் பதற்றத்தையும் கவலையையும்
உண்டாக்குகிறது. பெண்களுக்கான உரிமைகளும் சட்டங்களும் பெரும்பாலும்
காகிதங்களில் தான் இருக்கிறதே தவிர காரியத்தில் (நடைமுறையில்) இல்லை என்பது வேதனை தருவதாய் அமைகிறது. இத்தகைய
சூழலில் திருமறை பெண்களை எவ்வாறு பார்க்கிறது? பெண்களுக்கான
உரிமைகள் எந்த நிலையில் வழங்கப்பட்டன? என்பதை பெண்கள் ஞாயிறு
தொழுகையில் சிந்திப்பது ஏற்புடையதாக இருக்கும்.
1. பெண்கள்: உயிர் கொடுப்பவர்கள்
பிள்ளைகளைப்
பெற்றெடுத்தால் மட்டும் தான் தாய்மை பெண்களுக்குரியது என்பதில் இல்லாதபடி,
இயல்பாகவே தாய்மை குணம் என்பது பெண்களுக்கு கடவுளால் அருளப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 3:16-இல் உயிர் கொடுக்கும்
அல்லது உயிரை சுமக்கும் பாக்கியம் பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆணாதிக்கம் மிகுந்த பழைய ஏற்பாட்டு காலகட்டத்தில் வரலாற்று
நிகழ்வுகளை தொகுத்து எழுதியபோது பெண்களை பலவீனமானவர்களாகவும், இப்பூவுலகின் சாபங்களாகவும்
அடையாளப்படுத்தினர். இதற்குக் காரணமாய் அமைவது ஆதியாகமம் 3:6 மற்றும் 17 ஆகிய வசனங்களில் இவ்வுலகில் பாவம் தோன்ற ஏவாளின் செயல்
காரணமாகிற்று அதை கடவுளே தன் வாயினால் சொன்னார் என்பதன் அடிப்படையில் பெண்கள்
சாபத்தின் சின்னமாகவும், ஒடுக்கப்பட வேண்டியவர்களாகவும் எண்ணப்பட்டார்கள். ஆதி திருச்சபை தந்தையர்கள் ஏவாள் என்னும் பெண்ணால் தான் பாவம் இந்த
பூமியில் வந்தது எனவே இவர்களுக்கு திருச்சபையில் இடமில்லை என பெண்களை
திருச்சபைக்கு புறம்பே வைத்தார்கள். சபையில் பேச்சுரிமை, சமயுரிமை,
சுயயுரிமை என எல்லாம் மறுக்கப்பட்டது. பெண்களை பிள்ளைகளைப்
பெற்றெடுக்கும் இயந்திரங்கள் என வர்ணித்த சபை தந்தையர்களும் இருந்தனர்.
திருமறையை
ஆழமாக அலசி பார்த்தால் ஆதியாகமம் 2:23-இல் மனுஷி என்று ஆதாமால் பெயரிடப்பட்டார்,
அந்த மனுஷியை பாதுகாக்க வேண்டியது ஒரு ஆணின் பொறுப்பு. இதைத் தொடர்ந்து வரும் ஆதி. 3-ஆம் அதிகாரத்தில்
சர்ப்பத்தோடு ஏவாள் உரையாடும் நிகழ்வு தரப்படுகிறது, ஏவாள்
சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படுகிறாள். இங்கே கவனிக்கப்பட
வேண்டிய மிக முக்கியமான காரியம் மனுஷனுக்காக படைக்கப்பட்ட மனுஷியை ஆதாம் தனித்து
விடுகிறார். ஏவாளை பாதுகாத்து கண்காணிக்க வேண்டிய ஆதாம் தன்னுடைய
கடமையில் தவறுகிறார் எனவே தான் ஏவாள் பாவத்தில் விழ காரணமாகிறாள்.
பழைய
ஏற்பாட்டில் எண்ணாகமம் 27:1-11 வரைவிலான திருமறைப்பகுதியில் செலோப்பியாத் என்கிற மனிதனின் ஐந்து
குமாரத்திகள் தங்கள் தந்தையின் வாரிசு உரிமைக்காக குரல் கொடுக்கும் நிகழ்வு
தரப்பட்டிருக்கிறது. அவர்களுடைய தந்தை மரித்து போக
திருமணமாகாத இந்த ஐந்து பெண்களும் தன் தகப்பனின் வாரிசு உரிமைகளை பெற்றுக் கொள்ள
முடியாதபடி அன்றைய யூத சட்டம் பெண்களுக்கு எதிராக அமையப் பெற்றிருந்தது. இவர்கள் மோசேயிடம் முறையிட்டு எண். 27:7-படி கடவுளிடத்திலிருந்து நீதியை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களுடைய நீதி போராட்டம் பெண்களுக்கான புதிய சட்டத்தை பெற்று தந்தது. உரிமையை மீட்டு எடுப்பதும் ஒரு வகை உயிர் கொடுப்பது தான்.
தற்கால
உலகில் அநேக இல்லங்களில் பெண்களின் உரிமைக் குரல் ஒடுக்கப்படுகிறது. உயிரோடு இருந்து
அனுதினமும் மரண வேதனை அனுபவிக்கும் பெண்கள் இன்று அநேகர். பெரும்பாலும்
ஆண்கள் பெண்களை தவறான கோணத்திலேயே புரிந்து கொள்கிறோம்.
பெண்கள் குழந்தையை போல குணத்தை உடையவர்கள். திருமணத்திற்கு பிறகு கணவன் மட்டுமே அவளின் உலகம் ஆகிறான். ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்புடன் கணவனிடம் ஒன்றை கேட்கும்பொழுது கணவன்
அன்பான கொஞ்சலுடன் சரி என்ற வார்த்தையை கூற வேண்டும் என்றுதான் அவள் வீம்புடன்
எதிர்பார்ப்பாளே தவிர அவள் எதிர்பார்ப்பது பொருளை அல்ல, இது
பலருக்கு புரிவதே இல்லை. ஒரு பெண்ணின் உணர்வை மதித்து ஒரு
படி, ஒரே ஒரு படி ஆண் கீழிறங்கினாலே போதும் அவள் நமக்காக ஓராயிரம் படிகள்
கீழிறங்கி வருவாள். எந்த பெண்ணையும் அன்பான வார்த்தையால்
மட்டும் தான் கட்டுப்படுத்த இயலுமே தவிர வசதியாலோ பணத்தாலோ கட்டுப்படுத்த இயலாது. காரணம் பெண்கள் அதை விரும்புவதே இல்லை. உன்னை நம்பி
வரும் பெண்ணை குழந்தையைப்போல் பார்த்துக் கொண்டாலே போதும் உன்னைவிட சந்தோஷமாக
உலகத்தில் யாருமே இருக்க முடியாது.
2. பெண்கள்: உடன் உழைப்பவர்கள்
எபேசியர்
5:22-24 வரையிலான
திருமறைப்பகுதியில் “கீழ்ப்படிதல்” என்னும் ஒற்றை வார்த்தையை பிடித்து வைத்துக்
கொண்டு பெண்களை அடிமைப்படுத்தியது தொடக்காலத் திருச்சபை. ஆணின்
விலா எலும்பிலிருந்து வந்தவளானபடியினால் அவள் ஆணுக்கு அடிமை என்று சொல்லுகிற
சிந்தனை ஆதி திருச்சபையில் காணப்பட்டது. குடும்ப
பொறுப்புகளில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன எந்தவொரு முடிவையும் பெண்கள்
எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சபையிலும், குடும்பத்திலும்,
சமூகத்திலும் பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். அதிகமான
ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த சமயத்தில்தான் தூய
பவுலர் எபேசு திருச்சபையாருக்கு அறிவுரை வழங்கும் போது எபேசியர் 5:28-இல் புருஷன் மனைவியில் அன்புகூற வேண்டும் அவர்கள்
இணையானவர்கள் இணைந்து உழைக்கக் கூடியவர்கள் குடும்பத்திற்காக அரும்பாடு
படக்கூடியவர்கள் அவர்கள் இணைந்து இருப்பதே ஒரு குடும்பத்தின் முழுமையான வளர்ச்சி
என்பதை எடுத்துக் கூறுகிறார்.
கடவுள்
மனுஷியை படைத்ததின் நோக்கமே மனுஷி இல்லாத உலகில் மனிதன் மனிதனாய் வாழ முடியாது
என்பதற்காக தான். ஆதாம் தனிமையில் இந்த உலகில் வாழ்வது சவால் நிறைந்ததாய் அமைந்திருக்கும்
அதை நன்கு அறிந்திருந்த ஆண்டவர் ஏவாளை ஆதாமுக்கு கொடுத்தார்.
2தீமோத்தேயு 1:1-8 வரையிலான திருமறைப்பகுதியில்
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயு வளர்க்கப்பட்ட விதத்தை எண்ணி அவரது பாட்டி லோவிசாள்
மற்றும் தாய் ஐனிக்கேயாள் ஆகியோரின் வளர்ப்பை பாராட்டி இந்த பகுதியில் எழுதுகிறார்.
இந்த நிகழ்வு தூய பவுலார் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு குடும்பத்தைக்
கட்டி எழுப்புவதிலும், அந்த குடும்பத்திற்காய் உழைப்பதிலும் பெண்களின் பங்களிப்பு
எந்த நிலையில் இருந்தது என்பதை எடுத்துக் கூறுகிறது.
பெண்களின் பங்களிப்பு தொடக்க காலத் திருச்சபை வளர்வதற்கும், நற்செய்தி வேகமாய் பரவுவதற்கும்,
கிறிஸ்தவம் விரைவாக வளர்வதற்கும் காரணமாய் அமைந்தது. இன்றைய உலகில் மனைவியை இழந்து
தவிக்கும் ஆண்களின் வாழ்வை நாம் உற்றுப் பார்க்கும்போது அவர்கள் சந்திக்கும்
இழப்பும் தனிமை உணர்வும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. ஆய்வு ஒன்று சொல்கிறது
கணவனை இழந்த பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மனதைரியத்தை
வளர்த்துக் கொள்கிறார்கள். சவால்களை சந்திக்கும் துணிவை ஏற்படுத்திக்
கொள்கிறார்கள். அதே சமயம் ஆண்கள் மனைவியை இழந்த பிறகு முற்றிலும் உடைந்து
போகிறார்கள், பலவீனமாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முடிவில் குறைவுடனே
முடிவடைகிறது என்று அந்த ஆய்வின் முடிவில் கூறுகிறார்கள்.
தற்கால
உலகில் பெண்கள் அவர்களின் உரிமைக்காக அதிகம் குரல் கொடுக்கிறார்கள். Dowry வாங்கிக்கொண்டு தான் பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்கிறார்கள்.
Dowry என்பது இது ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவது போல அப்படி
பார்த்தோமானால் பெண்கள் தான் ஆண்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். “வரதட்சணை” என்னும் கொடுமையால் பல இளம் பெண்கள் இன்றளவும் திருமண
பந்தத்தில் இணைய முடியாத சூழல்கள் நிலவி வருகிறது. இதுவும்
பெண்களுக்கு இழைக்கப்படுகிற ஒருவகை அநீதி தான்.
எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி
ஒரு ஆண் ஜெயிக்கிறானோ அங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது என்று பொருள்.
எந்த வீட்டில் ஓர் ஆணை அடக்கி ஒரு
பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஓர் அடங்காப் பிடாரி ஜெயிக்கிறாள் என்று பொருள்.
எந்த வீட்டில் கணவன் மனைவியிடமும்
மனைவி கணவனிடமும் தோற்றுப்போகிறார்களோ அங்கே ஒரு குடும்பம் ஜெயிக்கிறது
என்று பொருள்.
குடும்பம் வளர பெண்கள் மதிக்கப்பட
வேண்டும் அவர்களும் ஆண்களோடு இணைந்து உழைக்க வேண்டும், அப்படியானால் தான் சிறந்த
குடும்பங்கள் உருவாகும்.
3. பெண்கள்: உடன் பயணிப்பவர்கள்
லூக்கா 2:40-52
வரையிலான திருமறைப்பகுதியில் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர் எப்படி வாழ்க்கை பயணத்தில்
இணைந்து பயணித்தார்கள், அதன் வழியாக ஒரு குடும்பம் எந்த நிலைமைகளில் கட்டி
எழுப்பப்பட்டது, சவால் நிறைந்த அவர்களுடைய வாழ்க்கை
போராட்டத்தில் அவர்களின் இசைந்த வாழ்வு எப்படி எல்லா நிலைகளிலும் வெற்றி பெற்று
தந்தது என்பதை காண முடிகிறது. இந்த நிகழ்வில் இயேசு கிறிஸ்து
12 வயதில் எருசலேம் ஆலய பண்டிகைக்கு வருகிற போது காணாமல் போகிறார். மூன்று நாட்களுக்கு பிறகு அவருடைய பெற்றோர் வந்து அவரை கண்டுப்பிடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நாம் கவனித்து பார்க்கிறபோது இயேசுவின் பெற்றோர்
ஒருவருக்கொருவர் குறை சொல்லாத வண்ணம் அவர்கள் இணைந்து இந்த சோதனை நேரத்தில்
செயல்படுவதை பார்க்க முடிகிறது. வாழ்க்கை நடைமுறையில் இளமையை
விட முதுமையில் தான் கணவன் மனைவி இணைந்து சேர்ந்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் தான் ஒருவர் துணை ஒருவருக்கு அதிகம் தேவைப்படுகிறது. இந்த முதுமை பருவத்தில் அவர்கள் இணைந்து இசைந்து இருக்க வேண்டும் என்று
சொன்னால் இளமை பருவம் சரியான அடித்தளமிடப்பட்டிருக்க வேண்டும்.
புருஷன் என்பது காங்கிரீட்
சிமெண்ட் மாதிரி… கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது. நல்லா ‘செட்டாக’ விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது...!
பொண்டாட்டிங்க மண்பாண்டம் மாதிரி ஆரம்பத்துலயே
நமக்கு வேணுங்கறமாதிரி மாத்திடணும், இல்லாட்டி செட் ஆயிடிச்சின்னா அப்பறம் ஒன்னும்
பண்ண முடியாது...!
குடும்ப வாழ்வுக்குள் யார்
பெரியவர்கள் என்கிற போட்டி இல்லாத வண்ணம் நாம் இணைந்த இசைந்த வாழ்வு வாழ்வோம். பெண்கள் உயிர்
கொடுப்பவர்கள், உடன் உழைப்பவர்கள், கடைசி வரை உடன் பயணிப்பவர்கள் என்கிற சிந்தைக்
கொண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுக்கவும்,
அவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளவும் முயற்சிப்போம்.
அவர்கள் விருப்பம் நிறைவேற்றும் வாழ்வை வாழ்வோம் கடவுள் விரும்பும் குடும்ப வாழ்வு
நம்மில் அமையட்டும் இந்த தவக்காலம் குடும்ப வாழ்வில் இருக்கிற வெறுப்புகளையும்
பிரிவினைகளையும் அகற்றும் நற்காலமாய் நம் குடும்பங்களில் அமையட்டும் என
வாழ்த்துகிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
MSg super.
ReplyDelete2025 ம் வருடத்தின் திருமறை பள்ளியின் பேச்சு போட்டிகள் அனுப்பி தரவும்.
ReplyDeletePlease send the Speech Competitions of the year 2025
ReplyDelete