குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? APPROACH TOWARDS CHILDREN

 

குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்?


எதிர்பார்ப்பதை குழந்தைகள் செய்யாதபோதோ! கோபம் ஏற்ப்படுத்தும் செயல்களை செய்யும்போதோ! சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு எதிராய் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் வாயாடி, பிடிவாதக்காரன், முட்டாள், யோகம் இல்லாதவன், திருடன் போன்றவை. அதிலும் குறிப்பாக முட்டாள் என்ற வார்த்தையை ஒருமுறையாவது பிறரிடத்திலிருந்து கேட்காமல் வாழ்வில் கடந்து வந்தவர்கள் ஒருவருமே இருக்க முடியாது. இத்தகைய வார்த்தை முத்திரைகள் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் ஒரு வகையான வன்முறை கலந்த தவறாகும். இத்தகைய வார்த்தைகள் குழந்தைகளை காயப்படுத்துவதோடு நின்றுவிடாமல், பிறர் சொல்வதை போன்றுதான் நான் இருக்கிறேனோ! என்கிற மன சோர்வையும், மன குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. தங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் அவல நிலைக்கு குழந்தைகளை கொண்டு சென்றுவிடுகிறது. சமீபகாலமாக, நீட் (NEET) தேர்வுக்கு பயந்து தற்கொலை போன்ற செய்திகள் சுலபமாக கடந்து செல்லக்கூடிய ஒன்றாக இல்லை. இது குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்த அச்சத்தை தான் ஏற்படுத்துகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று குழந்தைகளின் மீது சுமத்தப்படும் அதீத சுமை.‌ அதிலும் குறிப்பாக பெற்றோர் தங்கள் சுய ஆசைகளை பிள்ளைகளை குறித்த சரியான புரிதல் இல்லாமல் அவர்களின் தனித்திறன், தகுதி, மனநிலை, குழந்தைகளின் வெறுப்பு, விருப்பங்களை அறிந்துக் கொள்ளாமல் அவர்கள் மீது திணிப்பதும் ஒருவிதத்தில் காரணமாகிவிடுகிறது. ஒருவேளை போட்டித் தேர்வுகளில் தோற்றுப்போனால் சமுதாயத்தில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்பன போன்ற பிம்பங்கள் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவதும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகிறது. பெற்றோருக்கு அவமானம் வந்து விடுமோ! என்கிற அச்சத்திலேயே சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும், இன்னும் சிலர் தங்களுக்கு விருப்பம் இல்லாது, பெற்றோரின் விருப்பத்திற்காக எதையும் ஏற்றுக் கொள்வதுமாக வாழ்வில் நகர்ந்து செல்கின்றனர். எந்த ஒரு செயலிலும் முழு ஈடுபாட்டுடனும், சுய விருப்பத்துடன் செய்யாவிடில் செய்யும் செயலில் திருப்தியும் மன நிறைவும் பெறுவது இயலாத ஒன்று. இப்படி குழந்தைகளின் விருப்பமும், எதிர்பார்ப்பும் மறுக்கப்பட்டு விருப்பம் இல்லாத செயலை பிறரை திருப்திப்படுத்துவதற்காக செய்ய குழந்தைகள் சிறு பருவம் முதலே பழக்குவிக்கப்படும்போது பல தருணங்களில் தனக்கான சுயமரியாதையையும் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்க நேரிடுகிறது. இதற்காக குழந்தைகள் விரும்பும் எல்லாவற்றையும் செய்ய அப்படியே விட்டுவிட முடியுமா என்றால்? இல்லை நிச்சயமாக இல்லை!! இந்த நிலையை மாற்ற நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் தான் என்ன?

v  குழந்தைகளின் தவறுகளை சொல்லி சொல்லி குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக கொள்ளாமல், முதலில் அவர்கள் இத்தகைய பழக்கவழக்கங்கள் உருவாக என்ன காரணம்? என்பதை கண்டறிய முயற்சிக்க வேண்டும். இரண்டாவது அதில் இருந்து குழந்தையை மீட்டெடுக்க வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கு தகுந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தவறுகளையே சொல்லிக்கொண்டிருந்தால் இது குழந்தைகளின் எதிர்காலத்தை தான் கடுமையாக பாதிக்கக் கூடும்.

v  ஆரோக்கியமான சமுதாயத்திற்கு தேவையான பண்பு நிலைகள் குழந்தைகளுக்கு இல்லத்திலிருந்தே கிடைக்கச் செய்வது அடிப்படை அவசியமானது. “பகிர்தல் இல்லத்திலிருந்து ஆரம்பம் ஆகட்டும். பகிர்ந்து உண்ணும் பழக்கம் குடும்பத்திற்குள்ளேயே தொடங்க வேண்டும். அதுவே சமுதாயத்திலும் பிரதிபலிக்கும், அது சுயநலம் அகன்று, பொதுநல சிந்தனையோடு பிள்ளைகள் வளர பெரிதும் வழிவகுக்கும்.

v  COVID-19, LOCKDOWN போன்றவற்றை காரணமாக பயன்படுத்தி வரும் நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும், சக குழந்தைகளுடன் பழகவும், விளையாடவும், பொழுது போக்கவும் தடை போடாமல் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளுக்கு பொதுநலன் என்னவென்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பும், சூழலும் உருவாகும்.

v  பதின்வயது பிள்ளைகளிடம் சில நடத்தை சிக்கல்கள் தோன்றுவது இயல்பு. அது மானுட இயற்கை அப்படி மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால் தான் எங்கோ தவறு நடக்கிறது. எனவே இந்த மாற்றங்களை உணர்ந்து வார்த்தைகளால் பிள்ளைகளை காயப்படுத்தாமல் அவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர் முயற்சிக்க வேண்டும். எனவேதான் சாலொமோன் ஞானி பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி: 22:6)  என்று குறிப்பிடுகிறார்.

v  தயக்கமும், பயமும் இன்றி திறந்த மனதுடன் பதின்வயது பிள்ளைகள் பெற்றோரிடம் சகஜமாகப் பேசும் சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றோர் இல்லத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது தான், பிள்ளைகள் குடும்ப வட்டத்தை தாண்டிய அரவணைப்பையும், ஆதரவையும் நாடுகிறார்கள் என்கிற எச்சரிக்கையோடு சிறுபருவம் முதலே பிள்ளைகளை கையாளவேண்டும்நட்பும், தோழமையும், உரிமையும் இல்லத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு கிடைத்துவிட்டால் மண்ணுலகில் இல்லம் தான் பிள்ளைகளுக்கு பரலோகம்.

பிள்ளைகளோடு செலவிட "நேரம் இல்லைஎன்று சாக்குபோக்கு சொன்னவர்கள் எல்லாம், இந்த Lockdown நாட்களில் நேரம் போகவில்லை என்றனர். நேரத்தை உருவாக்குவதும், வலுவான குடும்ப உறவை ஏற்படுத்துவதும் நம்மகத்தே உள்ளது என்கிற உணர்வோடு செயல்பட வேண்டும். திருமறையில் (மாற்கு 10: 13-16) இயேசு கிறிஸ்து எவ்விடத்திலும், எத்தகைய சூழலிலும் மழலைகள் முதன்மையான இடத்திற்கு சொந்தகாரர்கள் என்கிற தெளிவை தன் செயலால் உலகிற்கு எடுத்துரைத்தார். மீட்பராம் கிறிஸ்துவிடம் முதன்மை இடம் பெற்றவர்கள், நம்முடைய  இல்லத்தில் உரிமை இழந்து பின் தள்ளப்பட காரணமாய் நாமே அமைந்து விடாமல், குழந்தைகளின் வாழ்வில் அவர்கள் ஏறிச்செல்லும் ஏணிகளாய் மாறுவோம்! பிறரை மாற்றுவோம்!! ஒளிமயமான எதிர்காலம் சிறக்க வழிவகுப்போம்!!! 


ஆ. ஜெனில் தாஸ்

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)