பிலிப்பி திருச்சபை - Church of Philippi

                 

                              பிலிப்பி - மாற்றுருவாக்கத்தின் திருச்சபை


தூய பவுலார் தனது இரண்டாவது மிஷெனரி பயணத்தின் போது, மக்கதோனியா மாகாணத்தின் முக்கிய நகரமான பிலிப்பியில் ஒரு தேவாலயத்தை நிறுவினார் (அப்: 16:11-40). அதுவே பிலிப்பி திருச்சபை என்றழைக்கப்படுகிறது. இயல்பாக, பவுல் தான் நிறுவிய திருச்சபைகளோடு   தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தும் யுக்திகளில் ஒன்று “கடிதப் பரிமாற்றம்.” அந்த வரிசையில் பிலிப்பியர் நிருபம் பவுலின் கடிதங்களில் ஒன்றாகும். இந்த நிருபம் “சிறைப்பிடிப்பு கடிதம்” (Captivity Letter), பவுலின் மகிழ்ச்சிக் கடிதம்  என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கடிதம் பிலிப்பி திருச்சபை மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும், அந்த திருச்சபை கொண்டிருந்த மாற்றுருவாக்கத்தின் பண்பு நிலைகளையும் தெளிவுர எடுத்துரைக்கிறது.

பிலிப்பி நகரமும், மாற்றுருவாக்கத்தின் அவசியமும்:

பிலிப்பி நகரம் வடக்கு கிரேக்கத்தில், மக்கதோனியா மற்றும் திரேஸின் (Thrace) கிழக்கு எல்லையில் அமையப் பெற்றிருந்தது. அதன் பண்டைய பெயர் krenides” (கிரேக்கத்தில் நீரூற்றுகள்Springs). பிலிப்பி நகரம் மக்கதோனியாவின் மன்னராயிருந்த இரண்டாம் பிலிப்புவால் (Philip II of Macedon) நிறுவப்பட்டது (இவர் மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை). கிமு 42 முதல் இது ஒரு உயர்தர பாதுகாப்புகள் நிறைந்த ரோமானிய இராணுவக் காலனியாக விளங்கியது. ரோமிலிருந்து வெகு தொலைவில் இருந்தபோதிலும் இந்த நகரிலிருந்த ரோமர்களின் ஆளுமை, ஆதிக்க அதிகாரம், ரோமிலிருந்த அதே சீதோஷ்ண நிலை, குடிமக்களின் வாழ்வியல் பழக்கவழக்கம் மற்றும் சமூக கட்டமைப்புகளால்  இது "சிறிய ரோம்" (Little Rome) என்றே கருதப்பட்டது. இந்த நகரம் ஒரு மேலாதிக்க கலாச்சாரத்தைக் (Hellenistical) கொண்டிருந்தது, மேலும் அங்கு கிரேக்க-ரோம கடவுள்கள், திரேசிய தெய்வங்கள் (Thracian deities) மற்றும் ஓரியண்டல் வழிபாட்டு முறைகள் (Oriental cults) மிகுதியாய் காணப்பட்டது. மேலாதிக்க ஏகாதிபத்திய முறை (Imperial religion) மற்றும் பேரரசர் வழிபாட்டு முறையும் (Emperor Cult) பின்பற்றப்பட்டு வந்தது. இத்தகைய செயல்பாடுகளை கொண்டிருந்த பிலிப்பியில்  மாற்றுருவாக்கத்தின் அவசியத்தை பவுல் உணர்ந்தார்.

 

மாற்றுருவாக்கத்தின் அடித்தளம்- திருச்சபை:

      பிலிப்பி திருச்சபை ஐரோப்பிய கண்டத்தில் நிறுவப்பட்ட முதல் தேவாலயமாகும். உள்ளூர் அமைப்புக்கள் (local associates), வழிபாட்டு கூட்டுறவுகள் (cultic fellowships), "பேராயர்கள்" (Bishops) மற்றும் "டீக்கன்கள்" (deacons) போன்ற சிறப்பு அலுவலர்களின் கீழ் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பை பிலிப்பி திருச்சபை கொண்டிருந்தது. பவுல் நிறுவிய திருச்சபைகளில் பிலிப்பி சபையார் அவரின் கடின சமயங்களில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தனர். இந்த பிலிப்பி திருச்சபை என்னும் கூட்டமைப்பு மன, உடல், பொருளாதார ரீதியில் பவுலுக்கு பெரும் ஊக்கமாக இருந்துவந்தது. சமய, சமூக சிக்கல்கள் திருச்சபைகளில் பிரச்சனைகளாய் உருவெடுப்பதையும், இவைகளை பிரச்சனைகளாய் உருமாற்றுபவர்களுக்கும் எச்சரிக்கையாய் இருக்கும்படி பிலிப்பியர்களை தூய பவுலார்  எச்சரிக்கிறார். அதேசமயம் கிறிஸ்துவை மையமாய் கொண்டிருந்த பிலிப்பி திருச்சபையில் யூதமயமாக்கும் போக்கைக் கொண்டிருந்த பிலிப்பியர்களையும் கடிந்துக் கொள்கிறார்.

 

மாற்றுருவாக்கத்தின் பிரதிபலிப்புகள்:

பவுலின் நற்செய்தியால் மனம் மாறிய லீதியாளின்  முக்கியத்துவம் பிலிப்பி திருச்சபையில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதரவுக்கும், உரிமைக்குமான எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. அதேசமயம், அவரது குடும்பம் முழுமையும் மனமாற்றத்திற்குள் வந்தது (அப்: 16: 16-34), மாற்றுருவாக்கத்தின் முதன்மை நிலையாய் கருதப்படுகிறது. பிலிப்பியர்கள், பவுலின் கடின சூழலில் அவரது  ஊழியத்திற்கு ஒரு பெரும் நிதியை ஆதரவாய்  கொடுத்தது,  அவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயல்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி சொல்ல தான் சிறையில் துன்பம் அனுபவித்த போதிலும் பவுல் இந்த கடிதத்தை பிலிப்பி சபையாரிடத்தில் கொண்டு சேர்க்க விரும்பினார், அதற்கான பெரும் முயற்சியையும் எடுத்துக் கொள்கிறார் (பிலிப்:4: 10-18).

மாற்றுருவாக்கப்பட்ட திருச்சபையின் இலக்குகள்"

v    மகிழ்ச்சி: 

             பிலிப்பியர் நிருபம் மகிழ்ச்சிஎன்பது எந்தச் சூழலிலும் அவசியமானது மற்றும் சிறந்தது என்கிற கருத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. இந்த நிருபத்தில் “மகிழ்ச்சியின் அவசியத்தை” பதினாறு முறை பவுல் எடுத்துரைக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் மகிழ்ச்சியுடன் ஜெபிப்பதை (பிலிப்:1: 4) நற்செய்தியைப் பிரசங்கிக்கும் அறிவில் மகிழ்ச்சியடைகிறதை (பிலிப்:1:18). பவுல் மரண சூழல் மற்றும் கடின துன்பத்தில் மகிழ்ச்சியடைகிறதை (பிலிப்:1:21) நற்செய்தி அறிவிக்கப்படும் போதெல்லாம், தனது உழைப்பின் பலனை பார்த்து மகிழ்ச்சியடைவதை (பிலிப்:4:1) நிருப வாக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. மறுபுறம்,  தன்னைப் போலவே பிலிப்பி திருச்சபை மக்களும் தங்கள் சோதனை மற்றும் துன்ப சமயங்களில் கிறிஸ்துவில்  மகிழ்ச்சி  கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் (பிலிப்:1:29). ​​ஒவ்வொரு முறை கிறிஸ்துவில் மையம் கொண்ட வாழ்வை மக்களில் பார்த்தப்போதெல்லாம் மகிழ்ச்சியடைந்தார் பவுல். எல்லாச் சமயங்களிலும், சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியை   கிறிஸ்துவால் மாத்திரமே கொடுக்க முடியும் என்ற தெளிவையும் ஏற்படுத்துகிறார்.

 

v       தியாகம்: 

        “கிறிஸ்துவின் தியாகம்இந்த நிருபத்தில் முக்கிய கவனம் பெறுகிறது. பிறருக்காக மனத்தாழ்மையுடனும், மனமுகந்தும் தியாகம் செய்ய வேண்டும் (பிலிப்:2:3-8) என்று அறிவுறுத்துகிறார். இயேசு கிறிஸ்துவின் வாழ்வியல் அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி மக்களை ஊக்கப்படுத்துகிறார், தியாக வாழ்க்கைக்கான உதாரணமாக கிறிஸ்துவை மையப் படுத்துகிறார். கிறிஸ்துவை அடித்தளமாய் கொண்டு கட்டப்பட்ட திருச்சபை கிறிஸ்துவுக்கு மேன்மை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற தெளிவையும் எடுத்துரைக்கிறார்.

v       கிறிஸ்தவ வாழ்க்கை: 

        பிலிப்பியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதால், அவர்கள் நம்பிக்கையில் தளர்ந்து விடாமல் இருக்க, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு தகுதியான அவர்களின் நடத்தைகளை பாராட்டி, பரலோகத்தின் குடிமக்களாக வாழ பவுல் அவர்களை ஊக்குவிக்கிறார் (பிலிப்:1: 27-30). ஒற்றுமையாக வாழவும், சுயநல இலட்சியங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு சேவை செய்யவும், தற்கும் கவலைப்படாமலும், குறை கூறாமலும் எல்லாவற்றையும் செய்ய, முதிர்ச்சியின் இலக்கை நோக்கி, கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற பவுல் அவர்களை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவில் அவர் கொண்டிருந்த வாழ்வை முன்மாதிரியாய் பின்பற்றும்படி பவுல் ஆலோசனை வழங்குகிறார் (பிலிப்:3:17). கிறிஸ்துவை மாதிரியாய் கொண்ட வாழ்வே பாடுகள் நிறைந்த இவ்வுலகில் சிறந்த வாழ்வு என்பதை பவுல் உறுதிப்பட எடுத்துரைக்கிறார்.

v       கிறிஸ்துவை மையமாக: 

            பிலிப்பியருக்கான முழு கடிதத்தில், இயேசு கிறிஸ்துவை மகிழ்ச்சி, வலி ​​மற்றும் துன்பத்தின் மையமாக பவுல் சித்தரிப்பதை காண முடிகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவில் அடையும் வளர்ச்சி. கிறிஸ்துவின் மனத்தாழ்மை கிறிஸ்துவை பின்பற்றுவோரை ஊக்குவிப்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்ததுள்ளது, அதேசமயம் கிறிஸ்துவை உண்மையாக அறிந்து கொள்வது என்பது அவரின் போதனைகளின் படி நம் வாழ்க்கையை வடிவமைப்பது, கிறிஸ்து நமது துன்பங்களில் பங்குபெறவும், அவருடைய வாக்குறுதிகளால் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மனுக்குலம் பெறவும் உதவுகிறார்.  இங்கு கிறிஸ்துவில் மையம் கொண்ட வாழ்வின் அவசியத்தை பவுல்  குறிப்பிடுகிறார் (பிலிப்:2: 5-11).

       பலவகை சமூக, சமய கட்டமைப்புகளோடு இருந்த பிலிப்பி பட்டண மக்கள், பவுலின் வழியாக கிறிஸ்துவின் நற்செய்தி பறைசாற்றப் பட்டபோது அதை மாற்றுருவாக்கத்திற்கான அடித்தளமாய் ஏற்றுக் கொண்டதைப் போன்று, நாமும் நம்முடைய வாழ்வில் மாற்றுருவாக்கத்திற்கான வாய்ப்பை திருமறை வழி அமைத்துக் கொள்வோம். கிறிஸ்துவின் அவயவங்களாய் இருப்பதே திருச்சபை, அந்த திருச்சபையில் நம்முடைய பங்களிப்பை கிறிஸ்துவை மையமாக கொண்ட வாழ்வால் அலங்கரிப்போம்! திருச்சபை வாழ்வில் நறுமணம் வீசுவோம்!!. 

ஆ. ஜெனில் தாஸ்


Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)