இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர்


இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர்

(மத்தேயு 21:16)

இறையரசுக்குரியோரால் தாவீதின் மைந்தன் என போற்றப்படும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நல்நாமத்தை போற்றி, நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களை வணங்கி, என் போன்ற போட்டியாளர்களை வாழ்த்தி, அவையோருக்கும், சபையோருக்கும் வணக்கம் சொல்லி,இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் என்னும் தலைப்பில், என் சிந்தையில் எழுந்த கருத்துகளை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள திருமுறைப்பகுதி தூயமத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 21-ஆம் அதிகாரம் 16-ஆம் திருவசனம்.

இந்த திருமறை பகுதியில் இறையரசுக்குரியோராய் அடையாளப்படுத்தப் படுகிறவர்கள் பாலகரும், குழந்தைகளுமே. ஆம்! இவர்களே இறைவனின் பிரதிநிதிகள், குழந்தைகள் இறைவன் கொடுக்கும் வரம், இவர்களே இறையரசின் பங்காளர்கள் என்பதை மாற்கு 10:14-இல் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி ஆண்டவர் இயேசு கிறிஸ்து உறுதிபடுத்தியுள்ளார். ஒவ்வொரு குடும்பத்தின் உயிர்நாடி, ஆணிவேர் குழந்தைகள்தான். இவ்வுலகில் எத்தனையோ பேறுகள் இருக்கலாம் பொன், பொருள், போகம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும், இவை யாவற்றிலும் சிறந்தது மக்கட்பேறு தான். எனவேதான் திருமறை பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்கிறது. இத்தகைய சிறப்புமிக்க சிறார்களை ஆலயத்தில் வளரச் செய்வதே இன்றைய திருச்சபை, பெற்றோர், ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். இப்படி வளரும் பிள்ளைகளே வாழ்வில் ஆண்டவரின் அதிசயங்களையும், தங்கள் வாயில் ஆண்டவரின் துதிகளையும் கொண்டிருப்பார்கள் என்பதை  மத்தேயு:21:16- ஆம் வசனம் தெளிவுப்படுத்துகிறது.

ஆனால் இன்றைய நவீன உலகின் பெற்றோர் திருமறை போதிக்கும் நெறிமுறைகளை மறந்து கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிற திருமுறை சத்தியத்தை புறம்தள்ளி, திருமறை வெளிச்சத்தை நாடாமல், குழந்தைகள் தவழ்ந்து, நகர ஆரம்பித்ததுமே KINDERGARTEN கல்வி முறையை பின்பற்ற ஆரம்பித்து விடுகின்றனர். உலகக் கல்வி மானுட வாழ்வில் அவசியம்தான், அதேசமயம் இறைமாட்சியை வெளிப்படுத்தும் திருமறை கல்வியும் மிக மிக அவசியமானது. இதுதான் வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான ஒழுக்கம், மதித்தல், பகிர்தல், கீழ்படிதல் போன்ற நெறி முறைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றது. இத்தகைய வாழ்வியல் அடிப்படையை மறந்து ஓய்வுநாளில் TUTION, EXTRA CLASSES, SPECIAL ACTIVITIES என உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைமாட்சியை  வெளிப்படுத்த வேண்டிய இறையரசுகுரியோரை ஆலயத்தில் வளரச் செய்ய தடைக் கற்களாய் இருக்கின்றனர் அநேக கிறிஸ்தவ பெற்றோர்களும், அவர்களின் வாழ்க்கை முறைகளும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் ஞானம் கடவுளால் அருளப்படுகிறது என்கிற புரிதல் தற்காலச் சூழலில் கிறிஸ்தவ பெற்றோருக்கு அடிப்படை தேவை. எனவேதான் இஸ்ரவேலின் தலைசிறந்த அரசர்களில் ஒருவராக விளங்கிய சாலொமோன் கடவுளிடம் ஞானத்தை வேண்டினார்.

மத்தேயு: 21:15-இல் பிள்ளைகளின் ஆர்ப்பரிப்பு கண்டு பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கோபம் கொண்டதை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்திருக்கிறார். பிள்ளைகளுக்கு கடவுளைக் குறித்த தெளிவை கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே இங்கு எரிச்சல் கொள்கிறார்கள். குழந்தைகளின் இத்தகைய ஞானத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தேவாலய பிரதிநிதிகள் அதற்கு எதிர்மறையான செயலை வெளிக்காட்டுகிறார்கள். எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்கிற திருவார்த்தையை முற்றிலும் அசட்டை செய்கிறார்கள் இந்த இரண்டு பிரிவினரும். இத்தகைய தலைமைத்துவ பண்புகள் சமூகத்தின் எதிர்காலமான குழந்தைகளுக்கு தவறான மாதிரியாய் அமைந்துவிடுகிறது.

திருச்சபைகளில் இளையோருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதும், அவர்கள் ஒடுக்கப்பட்டு, ஓரம்கட்டப்படுவதும் எதிர்காலத்தில் தங்கள் இடத்திற்கு இளையோர் போட்டியாக வந்துவிடுவார்களோ என்கிற திருச்சபை தலைவர்களின் அச்சமே காரணம். ஆனால் இதற்கு மாறாக இளையோரோடு இணைந்து பயணிக்கும் திருச்சபைகள் உயர்ந்தும், கிறிஸ்துவை மாதிரியாகவும் காண்பிக்க தவறுவதில்லை. இயேசுவின் காலத்தில் இறையரசுக்குரியவர்களை அசட்டை செய்த எருசலேம் தேவாலய பிரதிநிதிகளாய் நாம் இருந்து விடாதபடி இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோரை உருவாக்கும் காரணிகளாய் நாம் இருக்க வேண்டும்.

இன்றைய உலகில் மனிதராகிய நாம் விளம்பரத்திற்கு அடிமைப்பட்டு இருக்கிறோம். விளம்பர நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்திற்காக சொல்லும் அனைத்தையும் நம் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு என்று வாங்கிக் கொடுக்கிறோம். அவைகள் உண்மையாகவே ஆரோக்கியம் நிறைந்தது தானா? என்கிற தெளிவை பெற தவறிவிடுகின்றோம். பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிள்ளைகளின் ஆன்மீக வளர்ச்சிக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். குழந்தைகளின் உடல் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அவர்களின் ஆன்மீக வளர்ச்சியும் மிக முக்கியமானது. ஆன்மீக வளர்ச்சி கடவுளோடு நல்லுறவில் பிள்ளைகள் வளர செய்யும். சிலுவையின் நிழலிலும், திருமறை வெளிச்சத்திலும் வளரும் பிள்ளைகள் சமய, சமூக நல்லிணக்கத்திற்கு காரணிகளாய் எதிர்காலத்தில் விளங்குவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோராய் கடவுளால் அங்கீகரிக்கப் படுவார்கள் என்கிற தெளிவு கொண்டு, அதற்குரிய நல்வழியை திருமறை மற்றும் திருச்சபை சார்ந்து பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்போம், கிறிஸ்துவின் இறையாட்சியின் பங்காளர்களாய் உயர்வோம்!! எனக் கூறி என் உரைக்கு திரையிடுகிறேன்ஆமென்.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.  😊

 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)