மோசே வழியாய் பத்து கற்பனைகள் - The Ten Commandments Through Moses

 மோசே வழியாய் பத்து கற்பனைகள்

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். (கலாத்தியர் 6:9)

இஸ்ரவேலர்களின் 40 வருட வனாந்திரப் பயணம் கடவுளின் உடன் இருத்தலையும், இக்கட்டான சூழலில் ஆண்டவர் தங்களை விடுதலையாக்குவார் என்கிற ஆழமான நம்பிக்கையும், கடவுளின் சமூகம் தங்கள் முன்பாக செல்கிறது என்கிற உறுதிப்பாட்டையும் இஸ்ரவேல் வாழ்வில் ஏற்படுத்தியது. அதன் ஒரு நிகழ்வாகவே கடவுள், மோசே வழியாய் இஸ்ரவேலருக்கு கொடுத்த நித்திய காலத்திற்குமான பத்து கற்பனைகள் விளங்குகிறது. அவைகளை பெறுவதற்கான முயற்சிகளில் மோசையின் செயல்பாடு எத்தகையதாக இருந்தது? அது இஸ்ரேல் வரலாற்றில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதனை திருமறை பின்னணியத்தோடு சிந்திப்போம்.

புதிய பாதையை உருவாக்குகிறார் மோசே

மோசேயை குறித்து சிந்திக்கிற போது, அடிமைத்தன நுகத்தில் தவித்து வந்த இஸ்ரவேலருக்கான நம்பிக்கை தான் மோசே. அவருடைய அழைப்பே இயற்கைக்கும், மனித எண்ணங்களுக்கும் முற்றிலும் எதிர்மறையானது. பொதுவாக நெருப்பில் எரிந்து சாம்பலாகாத அல்லது சேதமடையாத எந்த ஒரு பொருளுமே இருக்க முடியாது. நெருப்பு தீண்டினால் அதற்கான ஒரு சிறு அறிகுறியாவது ஏற்படுவது இயற்கை. ஆனால் மோசேயின் அழைப்பின் போதோ முட்செடி எரிகிறது, ஆனால் சேதமடைந்து போகவில்லை. சுட்டெரிக்கும் நெருப்பு அந்தச் செடியை சீண்டியதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தென்படவில்லை. இது இஸ்ரவேலரின் வாழ்வில் கடவுள் செயலாற்றுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும். இது இஸ்ரவேலருக்கான விடுதலையின் அடையாளமாகும், எப்படியெனில் மோசேயின் முன்பு இருந்த முட்செடி எப்படி கருகாமல் இருந்ததோ அல்லது சாகாமல் இருந்ததோ, அதைப் போலவே இஸ்ரவேலர் அழிந்து போவது இல்லை என்பதை மோசேயின் எரியும் முட்செடி அடையாளப்படுத்துகிறது. இஸ்ரவேலர் எகிப்திலே அழிந்து விடுவார்கள் என்ற எண்ணம் சுமார் 430 ஆண்டுகளாக பிறநாட்டவரிடம் இருந்தது அந்த எண்ணங்கள் இங்கு பொய்த்து விடுகின்றன. கடவுள் மோசேக்கு தரிசனமான அந்த நொடியில் இருந்தே புதிய பாதையை மோசே வழியாக கடவுள் இஸ்ரவேலருக்கு என்று ஏற்படுத்துகிறார்.

ஆங்கிலத்தில் Do not be afraid to travel a new path, it may be the way to find what you have been looking for all long” என்று சொல்வார்கள். அதாவது புதிய பாதையில் பயணிப்பதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது அவை நீண்ட நாட்களாக நமக்குள் இருக்கும் தேடலுக்கான வழியை அல்லது பாதையை அமைத்து தரும் என்பதே இதன் பொருள். இதைப் போலவே திருமறையில் உபாகமம் 5:2,3 ஆகிய திருமறை வசனங்களில் நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார். இங்கு புதிய உடன்படிக்கையை இஸ்ரவேலர் கடவுளோடு ஒரேப் அல்லது சீனாய் எனப்படுகிற மலையில் செய்து கொண்டதை அறிவிக்கிறார் மோசே. நித்திய காலமும் இஸ்ரயேலர் பின்பற்றவேண்டிய பத்து கற்பனைகளை மோசே இங்கு விவரிக்கிறார்.

இஸ்ரவேலருக்காய் மோசை மலையின் மீது ஏறிச் செல்கிறார் இந்த நிகழ்வு அவர்களது விடுதலைப் பயணத்தின் போது நடைபெறுகிறது. இந்தச் சூழல் அமைதியானதாய் இல்லாமல் பல குழப்பங்களை கொண்டிருந்தது காரணம் அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் மறுபடியும் எகிப்துக்கு திரும்பி போக விரும்பினர், சிலர் மோசே மீது கோபமடைந்து முறுமுறுத்தார்கள், கடவுள் வனாந்தரத்தில் எங்களை சாகவா கொண்டு வந்தீர்? என்கிற கேள்வியோடு ஒரு கூட்டத்தார் அங்கிருந்தனர். இப்படி பல மோதல்கள், போராட்டங்கள் அங்கு காணப்பட்டன, அதே சமயம் கானானை நிச்சயமாய் சென்றடைய முடியுமா? என்கிற சந்தேகத்தின் கேள்விகளும் அங்கு சூழ்ந்திருந்த நிலையில்தான் மோசே மலையின் மீது ஏறிச் செல்கிறார். இது இஸ்ரவேலருக்கு பழக்கமில்லாத புதிய பாதை, ஏனென்றால் 430 ஆண்டுகள் அடிமை வாழ்விற்குப் பிறகு வெளிவந்த அவர்களுக்கு இந்த ஒரேப் சிகரம் புதிய அனுபவமாக இருந்திருக்கும், இஸ்ரேலருக்கு மட்டுமல்ல மோசேக்கும் தான். ஆனால் மோசே இந்த இடத்தில் இஸ்ரவேலரின் எதிர்கால நலனுக்காகவும் வாழ்விற்காகவும் புதிய பாதையை அமைத்தார், புதிய உடன்படிக்கையை இஸ்ரவேலருக்கு பெற்று தந்தார். ஒருவர் எடுக்கும் risk ஒட்டுமொத்த சமூகத்தையும் பயன் அடைய செய்கிறது.

 

கடினங்களை கடந்து செல்கிறார் மோசே

சீனாய் அல்லது ஒரேப் மலை சிகரத்தில் கடவுளிடமிருந்து இஸ்ரவேலருக்கான கற்பனைகளை பெறும்வரை மோசேக்கு எந்த ஒரு தொடர்பும் இருந்ததாக திருமுறை குறிப்பிடவில்லை. இதன் வழியாக இது இஸ்ரவேலருக்கான மோசேயின் புதிய அனுபவமாக பார்க்க முடியும். எனவேதான் உபாகமம் 5:4,5 இப்படி குறிப்பிடுகிறது  மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார். ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். தன் சுயத்திற்காக அல்ல மக்களின் நலனுக்காக மோசே இந்த கடினங்களை ஏற்கிறார். மோசேயின் இளமை காலத்தில் அவர் பார்வோனின் அரண்மனையில் வளர்ந்த போது செல்வ செழிப்பு மிகுந்த சூழல்களை கொண்டிருந்தார். பாடுகளும், வேதனைகளும் அறியாத ஒரு நிலையில் அவர் வளர்க்கப்பட்டா.ர் இது மோசேயின் வாழ்வின் ஒரு பகுதி. மோசே வாழ்வின் இரண்டாம் பகுதியை பார்க்கிற போது சுமார் 40 ஆண்டுகள் தன் மாமன்  மந்தைகளுக்கு மேய்ப்பனாக மோசே செயல்படுகின்றார். இங்கே சாதாரண மனிதர்களுக்குரிய வேதனையும், வருத்தங்களும், சங்கடங்களையும் அறிந்துகொள்ளும் மோசே விடுதலைக்கான அவசியத்தை முழுமையாக புரிந்து கொள்கிறார்.  கடவுள் இரு வேறு சூழல்களில் மோசேயை வளர்க்க காரணங்கள் இருந்தன.

இஸ்ரவேலருக்கான விடுதலையின் உடன்படிக்கையை பார்வோனிடத்தில் பேசவும், கடவுளின் திட்டங்களை முன்னெடுத்து செல்லவும் பார்வோனின் அரண்மனையில் எப்படி நடக்க வேண்டும்? எப்படி பேச வேண்டும்? அரண்மனை நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பன போன்ற பாடங்களை கற்றுக் கொள்வதற்கு மோசே வாழ்வின் இளமைப் பருவம் அவருக்கு உதவியது. அதுபோன்று சமூகத்தின் கடை நிலையில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த மக்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும், அவர்களுடைய விடுதலையின் அவசியத்தை மனதில் ஏற்றுக் கொள்வதற்கும் மோசே வாழ்ந்த இன்னொரு வாழ்க்கை சூழல் அவருக்கு வாய்ப்பளித்தது. இவைகள்தான் இரு தரப்பினரிடமும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அல்லது இணைத்துக்கொள்ள மோசேக்கு பேருதவியாய் இருந்தது.

இதே போலவே நம்முடைய குமரி மண்ணில் அடிமைப்பட்டு கிடந்த நம் முன்னோர்களை விடுதலையாக்க, அன்று மிஷனரிகள் திருமறையை சுமந்து வந்தனர். அவர்கள் ஏற்றுக்கொண்ட கடினங்களும், போராட்டங்களும் நமக்கு இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்காலத்தில் மிஷனரிகள் ஏற்றுக்கொண்ட கடினங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த நம் முன்னோரை அன்றைய மேலாதிக்க சமூகத்தின் எல்லா வளங்களை பயன்படுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் நம் முன்னோர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியது. இதைப்போலவே மோசே சந்தித்த கடினங்கள் அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இஸ்ரவேலருக்கும் விடுதலை வாழ்வை கொடுத்தது. இதை தான் “Not all of us can do great things, but we can do small things with great love”  என்கிறார் Mother Teresa. மோசேயின் இந்த செயல்கள் இஸ்ரவேல் மக்கள் மீதும், கடவுளின் வார்த்தை மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது. இன்று நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கடின அனுபவங்களும், ஏதோ ஒரு விதத்தில் கடவுளோடு நம்மை இணைப்பதாகும், எதிர்காலத்திற்கென்று நம்மை பக்குவப்படுத்துவதாக அமையப் பெற்றிருக்கிறது. இதனால் தான் சொல்வார்கள் அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை, ஆக்ரோஷமான கடலே திறமையான மாலுமிகளை உருவாக்குகிறது.”

கடவுளிடமிருந்து கற்பனைகளை கைப்பற்றுகிறார் மோசே

பத்து கற்பனைகள் அல்லது கட்டளைகள் என்பது இஸ்ரவேலரின் வாழ்வில் உயிரும், உணர்வும் போன்றது. இஸ்ரவேலரின் பெற்றோர் இதை எல்லா நாட்களிலும் தங்கள் பிள்ளைகளுக்கு ஞாபக குறியாக கற்றுக்கொடுத்திருந்தனர். இதை பெறுவதற்கு தான் மோசே புதிய பாதையை உருவாக்கினார், கடவுளை சென்றடையும் பொருட்டு பல கடினங்களை ஏற்றுக்கொண்டார். பத்து கற்பனைகளை குறித்து David Hazony என்பவர் சொல்லும்போது The ten commandments, how our most ancient moral text, can renew modern life” என்கிறார். பத்து கற்பனைகள் காலத்தால் பழமையானதாக இருந்தாலும் அது நிகழ்காலத்திற்கும் பொருந்துகிறது என்கிறார். மோசே இத்தனை சவால்களையும் தாண்டி சென்றதால் அவருக்கு கிடைத்த பலன் தான் என்ன? என்பதை உபாகமம் 5:22 மோசே, “இந்தக் கட்டளைகளை கர்த்தர் மலையிலே உங்கள் எல்லோர் முன்னிலையிலுமே வழங்கினார். அக்கினியிலிருந்தும், மேகத்திலிருந்தும், இருளிலிருந்தும் மகா சத்தமாகவே கர்த்தர் பேசினார். அவர் வழங்கிய இக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவர் இந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார். கடவுளின் கரத்திலிருந்து கற்பனைகளை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா அல்லது இந்திய மாமணி என்கிற விருது. இது 1954-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விருது மிகச்சிறந்த தேசிய சேவையாற்றிவர்களை கெளரவப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. குறிப்பாக கலை, இலக்கியம், சமூக சேவையில் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு என மாற்றப்பட்டுள்ளது. அதிகபட்சம் மூன்று பேருக்கு ஒரு வருடத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது, இது ஜனாதிபதியின் கரங்களால் வழங்கப்படும் விருது என்பது கூடுதல் சிறப்பு. இதைப்போலவே தன்னுடைய கடின உழைப்பிற்காகவும், சேவைகாகவும் மோசே பெற்ற கவுரவம் அல்லது விருதுதான் கடவுளுடைய கரத்திலிருந்து பெற்ற இஸ்ரவேலருக்கான பத்து கட்டளைகள். அன்று மோசே எடுத்த முயற்சியை இன்று வரை நாம் நினைவு கூறுகிறோம், அதன்படி நடக்க முயற்சிக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவும் இதை கற்றுக் கொண்டார், தன் வாழ்வில் அவைகளை செயல்முறை படுத்தினார், மக்களுக்கும் போதித்தார் என்பதை மத்தேயு 22:35-40, மாற்கு 12:28-34, லூக்கா 10:27 ஆகிய திருமறை வசனங்கள் விவரித்து சொல்லுகின்றன.

எனவே இதிலிருந்து நமக்கு கிடைக்கபெறும் வாழ்க்கை பாடம் என்னவெனில் கடவுள் நம்மை குறித்து வைத்திருக்கும் திட்டத்தில் நாம் சோதிக்கப்படுவோம், சவால்களை சந்திப்போம், அதே சமயம் கடவுளுடைய உடனிருத்தலை ஒவ்வொரு முறையும் நம்மால் உணர முடியும் என்பதே. புதிய பாண்டமாய் வனைவதற்கு எப்படி களிமண் அடிக்கப்பட்டு, குயவன் கையில் புதுபாண்டமாய் மாறுவதற்கு ஆயத்தமாகிறதோ, அதை போலவே கடவுளுடைய ராஜ்யத்தில் நாம் கூட்டி இணைக்கப்பட, இந்த பூவுலகில் நாம் ஆயத்தமாக்கப்படுகிறோம். எனவே இவ்வையகத்தில் நாம் அனுபவிக்கிற ஒவ்வொரு பாடுகளையும், கண்ணீரையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம் இது நம்மை கடவுளுடைய ராஜ்யத்தின் பிரதிநிதிகளாய் நிலைநிறுத்துவதற்கு நம்மை தயார் படுத்துகிறது என்கிற நம்பிக்கையோடு கிறிஸ்தவ வாழ்வில் முன்னேறிச் செல்வோம், சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை சுமக்கும் பங்காளிகளாகுவோம். ஆமென்.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.  😊

 

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)