திறந்த திருச்சபை – “சமூகத்திற்கான குரலும், நம்பிக்கையும்” - An Open Church is a Voice and Hope

திறந்த திருச்சபை – “சமூகத்திற்கான குரலும், நம்பிக்கையும்


எக்கிளேசியா(Ecclesia) என்கிற கிரேக்க சொல் திருச்சபை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுவிக்கப்பட்ட மக்களின் பொதுக்கூட்டம்(Gathering of those Summoned) என்று பொருள்ப்படுத்துகிறார்கள். கிரேக்கருக்கு இச்சொல் சமய சார்பற்றது. எனவே திருச்சபை என்றதும் உலகத்தை விட்டு தனியாக பிரிந்திருக்க பொறுக்கி எடுக்கப்பட்ட சிலர் என்று கருதுவது முற்றிலும் தவறு. மாறாக, இவ்வார்த்தை உலகத்தோடு இணைந்து செயல்படும் அழைப்பை, வாழ்வை முன்வைக்கிறது. திருச்சபை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, சமயத்திற்கோ உரியது அல்ல! இது ஒட்டுமொத்த உலகிற்குமானது. கடவுளால் அழைக்கப்பட்டு, அவரை சந்திக்கவும், அவரது சொல்லைக் கேட்டு நடக்கவும் கூட்டப்பட்ட கூட்டமைப்பே திருச்சபை. நற்செய்தியை அறிவிப்பது மட்டுமே திருச்சபையின் கடமையல்ல, ஏழை, எளியோருடன் தன்னை இணைத்துக்கொண்டு, சமூக மாற்றத்திற்கான நற்செயல்கள் புரிந்த இயேசுகிறிஸ்துவின் மாதிரி வாழ்வினை உலகில் பிரதிபலிக்க செய்யவதே திருச்சபை. திறந்த உலகில் திறந்த திருச்சபையின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும்?

Voice for the voiceless:

திறந்த திருச்சபை சமூக கட்டமைப்பின் கடைநிலையில் தவிப்போரைத் ஆதரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சமூக, சமய வாழ்வுகள் இத்தகையோரை மையம் கொண்டே அமையப்பெற்றிருந்தது.லியோர்க்கு மேலும் வலிமை சேர்ப்பதாய் இல்லாமல், எளியோர் வலிமைப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. நற்செய்தி என்பது எல்லா வசதி வாய்ப்பும், வளமும் கொண்ட இடத்தில் போதிக்கப்படுவது மட்டுமல்ல, உலகில் எல்லா மூலைகளிலும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய உன்னத நற்செயல்”. உரிமைகள் மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான குரலாக திறந்த திருச்சபையின் குரல் எழும்ப வேண்டும். ஆமோஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் அந்நிய நாட்டில் இஸ்ரவேல் மக்கள் அனுபவித்த துயரத்தை காட்டிலும், சொந்த நாட்டில் சொந்த மக்களாலும், அதிகாரத்தாலும் அனுபவித்த துயரம் அதி(நே)கம். இஸ்ரவேல் மக்களின் கனவு தேசம், களவு தேசமாய் மாறிப்போனது. எளியோரை சுரண்டி, அநீதியின் பிறப்பிடமாய் தன்னை உருமாற்றிக் கொண்டது. அச்சூழலில் கடவுளின் குரல் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வழியாய் துயரில் இருந்த மக்களைத் தேற்றியது. இளையோருக்கான ஆதரவு குரல் கடவுளால் எழுப்பப்பட்டது. இன்றைய திருச்சபை எளியோரின் குரலாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

நம்முடைய மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் கூலி தொழிலாளர்களாக வரும் வடமாநில இளைஞர்களை திருடர்களாகவும், அடிமைகளாகப் பாவிக்கும் நிலை இன்று பெருகி வருகிறது. அவர்களும் இந்திய தாய் திருநாட்டின் பிரஜைகள் என்னும் சிந்தை நம்மில் ஏற்பட வேண்டும். தவறுகள் எல்லா இடங்களிலும் நடைபெற தான் செய்கிறது, ஏதோ ஒருவர் செய்யும் தவறால் ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, சமயத்தையோ, சமுதாயத்தையோ, சார்ந்த ஒட்டுமொத்த மக்களையும் தவறாக எண்ணுவதும், புரிந்துக் கொள்வதும் ஏற்புடையதல்ல.  அவர்களும் நம்மைப் போன்று வாழ்வின் எழுச்சிகாய் போராடுகிறவர்கள் தான். மனைவி, பிள்ளைகள், குடும்ப உறவுகள், பெற்றோரை விட்டுவிட்டு வாழ்விற்கான விடியலைத்தேடி நம் மத்தியில் வந்திருக்கிறார்கள் என்ற புரிதலோடு சகோதர பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். மொழி, சமயம், கலாச்சாரம், இனம் போன்ற பாகுபாட்டை களைந்து அனைவரும் கடவுளின் சாயலை பெற்ற மனுக்குலம் என்ற உணர்வு கொண்டு செயல்படுவோம். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனெரிகளின் குரல் அடிமைத்தன வாழ்வு வாழ்ந்து வந்த நம் முன்னோர் வாழ்வில் விடுதலையின் தீபத்தை ஏற்றியது. அதைப்போல நாமும், நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்தில் விடுதலையின் குரல்களாய் மாறுவோம்.

Hope for the hopeless:

திறந்த உலகில் திறந்த திருச்சபை என்பது வாழ்வில் நம்பிக்கை இறந்தோரின் நம்பிக்கையின் பிரதிநிதியாய் செயல்பட வேண்டும். தற்கால சூழலில் பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தங்கள், நெருக்கடிகள், சவால்கள், அதிகார ஆதிக்கம், பணி இடையூறுகள், தேர்வு பயம் போன்றவற்றால் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிவு இழந்து தற்கொலை மட்டுமே தீர்வு என்னும் மனத்தெளிவற்ற இளைஞர் சமுதாயம் பெருகிவருகிறது. Google வலைத்தளம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேதனையின்றி தற்கொலை செய்வது எப்படி?” என்கிற தேடலை இளைஞர்கள் அதிக அளவில் கூகுள் செய்திருப்பது சொல்லொண்ணா வேதனையை ஏற்படுத்துகிறது. World Health Organization-இன் அறிக்கையின்படி 15-29 வயது வரம்பினர்களின் தற்கொலைகள் தான் எண்ணிக்கையால் அதிகம் என்று குறிப்பிடுகிறார்கள்.  அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்துவரும் அதே சமயத்தில் இளையோர் தங்கள் பொன்னான இளம் வயதை வீணடிப்பதும், வீழ்ந்துப் போவதும் இன்றைய சமுதாயம் சந்திக்கும் அவநிலைகளின் உச்சம்.

இத்தகையச் சூழலில் திருச்சபையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இச்சமயத்தில் திருச்சபைகள் இளையோருடன் நிற்கவேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தும் போதனைகள், செயல்முறை பயிற்சிகள், தனித் திறமையை வெளிக்கொண்டு வரும் வாய்ப்புகள் போன்றவற்றை திருச்சபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறு பருவத்தில் சமய, சமுதாய ஈடுபாடுகளுடன் வளரும் பிள்ளைகள் இளம் வயதில் அதிலிருந்து முற்றிலும் தன்னை ஓரங்கட்டிக் கொள்ள காரணம் அவர்களுக்கான இடமும், வாய்ப்புகளும், உரிமைகளும் மறுக்கப்படுவதே. இளையோர் வளர்ந்து விட்டார்கள் என்றால் தங்கள் பதவியும், அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும், சந்தேகத்தாலும், இளையோருடன் இணைந்து செயல்படுவதேயோ, அவர்கள் மேடை ஏறுவதையோ, ஏற்றப்படுவதையோ, வளரும் வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. இத்தகைய நிலைகளுக்கான மாற்றமாக திருச்சபை செயல்பட வேண்டும். சமுதாய மாற்றங்களுக்கான மாதிரி திருச்சபையிலிருந்து உருவாவது சாலவும் சிறந்தது. வாழ்வில் எழுச்சி பெறத் துடிக்கும் இளையோருக்கான இடமாய் திறந்த திருச்சபைகள் இருக்கும் பட்சத்தில், இது இளையோரின் சமய, சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆதிக்கங்களும், அதிகாரங்களும் அடிமைப்படுத்த நினைக்கும் போதுதான் விடுதலைக்கான முன்னெடுப்பு தேவைப்படுகிறது. அதேசமயம் பிறரை அரவணைத்துச் செல்லும் போது அன்பும், சகோதரத்துவமும் வெளிப்படுகிறது, அதன் வழியாக ஆரோக்கியமான சமுதாயம் கட்டமைக்கப்படுகிறது, அமைதியான வாழ்வு பிறக்கிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற முதுமொழிக்கு ஏற்ப இயேசு கிறிஸ்துவின் சமூக, சமய வாழ்வு அமையப் பெற்றிருக்கிறது. அவர் ஒரு குறிப்பிட்ட இனத்துக்காகவோ, சமயத்திற்காகவோ இவ்வையகத்தில் தோன்றவில்லை. முழு மனுக்குலத்தின் மீட்பை மையமாக கொண்டே தோன்றினார். அவர் வலிமையுடையோரோடு தன்னை இணைத்துக் கொள்ளவில்லை, எளியோரோடு தன்னை இணைத்து, எளிமையான வாழ்வை வெளிப்படுத்தினார். அடிமைத்தனத்தில் தவித்தவர்களோடும், வாய்ப்புகள் இழந்தோரோடும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களோடும் தன்னை இணைத்துக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கொண்டிருக்கும் நாம், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வை இவ்வுலகில் வாழ்ந்துக் காட்டுவோம், நம்மில் வாழும் கிறிஸ்துவை பிறர் காண செய்வோம். ஆண்டவரின் திருவார்த்தைகளுக்கு சான்றாளர்களாகுவோம். உங்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்களும்! நல்ஆசிகளும்!!.

ஆ. ஜெனில் தாஸ்


 Thank you for visiting my blog. Feel free to give your comments. Don't forget to follow my blog page. 😊 Have a good time.



Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)