திருவிருந்து - Holy Communion

 திருவிருந்து

முன்னுரை

சீர்திருத்தத் திருச்சபையின் (protestant church) சாக்கிரமந்துகளில் ஒன்று திருவிருந்து (holy communion). சாக்கிரமந்து (sacrament) என்பது இலத்தீன் சொல் ஆகும். அதன் தமிழ் அர்த்தம் திருவருட்சாதனம் என்பதாகும்.  திருவிருந்து என்னும் சாக்கிரமந்து/திருவருட்சாதனம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படி (remembering the death of Jesus Christ) நாம் கடைபிடித்து வருகிறோம். இயேசுவால் நியமிக்கப்பட்ட (instituted) திருவிருந்து, பழைய ஏற்பாட்டு பஸ்கா ஆசரிப்போடு தொடர்புடையது. இதன் மேன்மைகள் பற்றி சுருக்கமாக பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.

பஸ்கா (pass over)

பஸ்கா என்பது யூதரின் மிகவும் புனிதமான பண்டிகையாகும். எகிப்தியர்களுக்கு உண்டான கடைசி வாதையின் போது சங்காரத்தூதன் வீட்டின் தலைச்சன் பிள்ளைகளை சங்கரிக்கக் கடந்து சென்ற போது இஸ்ரவேலர்கள் தங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓர் ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை அவர்களது வாசல்களின் நிலைகளில் பூசினார்கள். அப்படி இரத்தம் பூசப்பட்ட வீடுகளை சங்காரத்தூதன் கடக்கும் போது அவர்களுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை. ஆனால் அப்படிப் பூசப்படாத எகிப்திய வீடுகளில் சேதம் உண்டானது. அந்த ஆட்டுகுட்டி பின்பு சுடப்பட்டு புளிப்பில்லாத அப்பத்தோடு (unleavened bread) உட்கொள்ளப்பட்டது. தலைமுறைகள்தோறும் இந்த பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருந்தார் - யாத். 12:1-29. இந்த விடுதலையின் நாளைத் திரும்பிப் பார்க்கும் ஒரு நினைவுகூருதல் பண்டிகைதான் யூதர்களின் பஸ்கா பண்டிகை. அப்படிப்பட்ட ஒரு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடத்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேம் சென்றனர்.

திருவிருந்தின் தோற்றம் (Origin)

தொன்மைமிக்க பஸ்கா ஆசரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது,  இயேசு தம் மரணத்தை முன்னிட்டு ஒரு புதிய ஐக்கியத்தின் பந்தியை ஏற்பாடு செய்தார். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி படி, இயேசு "புளிப்பில்லாத அப்பத்தின் முதல் நாளில்" நற்கருணையை நிறுவினார் - மத். 26:17; மாற்கு 14:12. பொதுவாக, பாரம்பரிய பஸ்காவில் தலைவர் முதலில் பருகி விட்டு, அடுத்தவர் பருகக் கொடுப்பார். கடைசியில், மீதி இருப்பதை மிச்சம் வைக்காமல் தலைவர் பருகி பஸ்காவை நிறைவு செய்வார்.

ஆனால், பஸ்கா கொண்டாட்டதின்போது, இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு தன் சீஷர்களுக்கு கொடுத்தார். தான் அந்த அப்பத்தையோ, திராட்சை ரசத்தையோ  ருசிக்கவில்லை. சீஷர்களிடத்தில் கொடுக்கும்போது "இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். சீஷர்கள் போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தபடியே பாத்திரத்தையும் கொடுத்து, இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை என்றார்" - லூக். 22:19-20. அதைத்தான் நாம் மேன்மையான திருவருள்சாதனமாகிய திருவிருந்தாக இன்றுவரைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

திருவிருந்தின் பொருள்

திருவிருந்து என்பது கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் நாம் பங்கேற்பதாகும்.  கடைசி இராப்போஜனத்தின் போது "இது என் உடல், இது என் இரத்தம்” “என்னை நினைவுகூரும் வகையில் இதைச் செய்யுங்கள்" என்று இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கை நிறுவப்பட்டது. இது ஆராதனையின் மிக முக்கியமான பாகமாகும். இது கர்த்தருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மற்றும் எதிர்காலத்தில் அவருடைய மகிமையான வருகையையும் நினைவுகூரச் செய்கின்றது.

"என்னை நினைவுகூரும்படி" என்ற சொல்லாடல்வழி, திருவிருந்து எதிர்காலத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். எனவேதான் பவுல், "ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள்"  -

1 கொரி.11:26, என்று கர்த்தருடைய வருகை வரைக்கும் திருவிருந்தை ஆசரிக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் வழியாக தெளிவுபடுத்துகிறார்.

திருவிருந்தின் பிற பெயர்கள்

கிறிஸ்து நமக்களித்த ஆன்மீக உணவாகிய திருவிருந்தைக் குறிப்பிட பல்வேறு பெயர்கள் உள்ளன. அவையாவன,

      அப்பம் பிட்குதல் (Breaking of the Bread)

இது திருவிருந்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால பெயர் ஆகும் - அப்போஸ்தர் 2:42, 46.

      கர்த்தரின் இராப்போஜனம் (Lord's Supper)

பவுல், திருவிருந்தை கர்த்தரின் இராப்போஜனம் என்று குறிப்பிட்டார் -1 கொரிந்தியர் 11:21.

      நன்றி கூறல் (Eucharist)

இதன் கிரேக்க வார்த்தை eucharistia என்பதாகும். ஆண்டவர் இயேசு பயன்படுத்திய நியமன வார்த்தைகளில் (words of institution) இப்பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது (லூக். 22:19, 1 கொரி. 11:34). இரண்டாம் நூற்றாண்டிற்குள் இது, நியமன வார்த்தைகளையும், ஆசீர்வதிக்கபட்ட அப்பம், திராட்சை ரசம் ஆகியவற்றையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்டன.

      மாஸ் (Mass)

மாஸ் என்ற சொல் "மிஸ்ஸா" (Missa) என்னும் லத்தீன் சொல்லிலிருந்து வருகிறது. திருவிருந்து நிறைவுற்றது சமாதானத்தோடு போய் வாருங்கள் என்பதை "மாஸ்" குறிக்கிறது.

      திருவிருந்து (Holy Communion)

இதில், விசுவாசிகள் ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் பெறுவதின் மூலம் கிறிஸ்துவோடும் பிற விசுவாசிகளோடும் ஐக்கியப்படுகின்றனர் என்பது வலிபுறுத்தப்படுகிறது.

      தூய கொர்பானா (Holy Qurbana)

சிரியன் திருச்சபையார் இச்சொல்லை பயன்படுத்துகின்றனர். இச்சொல்லின் பொருள் கொடை என்பதாகும். பலி என்னும் சொல்லிலிருந்து வந்தது கொர்பானா.

கத்தோலிக்க, சீர்திருத்தத் திருச்சபையின் கருத்துக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையினர் பொருள்மாறுதல் கொள்கையை (Transubstantiation) வலியுறுத்துகின்றனர். ஆயர், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தின் மீது கையை வைத்து ஆசீர்வதிக் கும்போது "அப்பம் இயேசுவின் உடலாகவும், திராட்சை ரசம் இயேசுவின் உதிரமாகவும் மாறுகிறது" என்று நம்புகின்றனர். அதாவது, திருவிருந்தின்போது இயேசுவின் உடல் சார்ந்த அருள் பிரசன்னத்தை (real presence) வலியுறுத்துகின்றனர்.

மார்ட்டின் லூதர், பொருள்மாறாக் கொள்கையை (Consubstantiation) வலியுறுத்தினார். நெருப்பு, பழுக்கக் காய்ச்சின இரும்பில் இருப்பது போல, அப்பத்தில் கிறிஸ்துவின் உடலும் பிரசன்னமாயிருக்கிறது என்றார். பொருள் மாறாக் கொள்கையின்படி "அப்பம் மற்றும் திராட்சை ரசத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. ஆனால் கடவுளின் பிரசன்னம் தூய ஆவியின் வழியாக அப்பம் மற்றும் திராட்சை ரசம் ஆகியவற்றில் வந்து அவற்றை ஆசீர்வதிக்கிறது.

கால்வின் பாரம்பரியத்தினர், திருவிருந்தில் பங்கு பெறுகிறவர்கள் மனதில் இயேசு நம்பிக்கையின் அடிப்படையில் பிரசன்னமாகிறார் என்கின்றனர். அதாவது, ஆன்மீக பிரசன்னத்தை வலியுறுத்துகின்றனர்.

வேறுசில திருச்சபைகள் நினைவுகூருதலாகவும் (remembrance) இதனைக் கருதுகின்றனர்.

இறையியலாளர்களின் கருத்துக்கள்:

"கிறிஸ்துவோடு ஒன்றுபடும் நிலைக்கு நற்கருணை துணையாகிறது" என்று நெகேமியா கோரே என்ற இறையியலார் புரிந்துகொள்கிறார்.

"தூயநற்கருணையின் மூலம் கிறிஸ்துவை முழுக்கரத்திலும் பற்றிக்கொள்கிறோம்" என இறையியலாளர் றாபர்ட் புருஸ் குறிப்பிடுகிறார்.

"திருவிருந்து அழியாமைக்கு மருந்து" என்கிறார் திருச்சபைத் தந்தை புனித இக்னேசியஸ்.

திருவிருந்து குறித்த நிறைவான பொருள்

 1. நினைவுகூருதல்: பஸ்கா பண்டிகை போலவே திருவிருந்தும் ஒரு நினைவுகூரும் ஆசரிப்பு ஆகும். அதை நாம் ஆசரிக்கும் போதெல்லாம் நமக்காக பலியிடப்பட்ட பஸ்காவாகிய ஆட்டுக்குட்டியானவரை நினைவுகூருகிறோம். திருவிருந்தில், லூக். 22:19 - ல் கூறியபடி, "என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள்" என்பதற்கேற்ப, கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகள், அதனால் நாம் பெற்ற மீட்பு, நாம் பெற்ற வாழ்வு ஆகியன நினைவுகூரப்படவேண்டும். அவருடைய மரணத்தையும், அவருடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை "அன்று சங்கார தூதனிடமிருந்து இஸ்ரவேல் மக்கள் காப்பாற்றப்பட்டதுபோல ஆக்கினைத் தீர்ப்புக்கு நாமும் காப்பாற்றப்படுவோம்" என்பதையும் நினைவுகூர வேண்டும்..

 2. கிறிஸ்துவை உணவாகக்கொள்ளுதல்: நானே வாழ்வின் அப்பம் என்ற இயேசு (யோவான் 6:48), நீங்கள் வாங்கிப் புசியுங்கள் (மாற்கு 14:22) என்றார். கிறிஸ்துவை உணவாகப் பெற்று நாம் அவரில் வளர வேண்டும் (யோவான் 6:51, 15:4; எபேசியர் 3:17).

 3. பலி: பவுல், இயேசுவின் பணியைப் பலியுடன் ஒப்பிட்டு நற்கருணை/திருவிருந்துடன் இணைக்கின்றார் (கொரிந்தியர் 5:7). கிறிஸ்து சிலுவையில் தம்மைப் பலியாக்கினார். ஆகவே, நற்கருணையில் அப்பலியின் தன்மையை

நினைவுகூருகிறோம்.

 4. புதிய உடன்படிக்கை: மத்தேயு, திருவிருந்தை, அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கை என்கிறார் (மத்தேயு 26:28). எரேமியா குறிப்பிட்ட புது உடன்படிக்கை நிறுவப்படுகிறது (எரேமியா 31:31). இது கீழ்ப்படிதல், அன்பு, அர்ப்பணத்தாலாகியது. நற்கருணை இயேசுவின் இரத்தத்திலான புது உடன்படிக்கையின் அடையாளமாகும். இது அவர் வருகை வரையிலும் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று (1கொரி. 11:26).

திருவிருந்தின் சின்னங்கள்

      அப்பம் (wafer)

அப்பம் உலக வாழ்வின் முக்கிய உணவாகும். திருவிருந்தில் பகிரப்படும் அப்பம் ஆன்மீக வாழ்வின் பிரதான உணவாகும். கடைசி இராப்போஜனத்தில் இயேசு புளிப்பில்லாத அப்பத்தை எடுத்து தமது உடலுக்கு ஒப்புமைப் படுத்தினார் - மத். 26:26; மாற். 14:22; லூக். 22:19. பிரதிஷ்டை செய்யப்பட்ட/ ஆசீர்வதிக்க பட்ட அப்பம் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.

      திராட்சை ரசம் (grape juice/ wine)

திராட்சை ரசம், அப்பத்தைப் போலவே இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையே பஸ்கா உணவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. திராட்சை ரசம், "உடன்படிக்கையின் இரத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த" இயேசுவால் பயன்படுத்தப்பட்டது - மத் 26:28; மாற். 14:24; லூக் 22:20. ஆகவே, திருவிருந்தில், திராட்சை ரசம் இயேசுவின் இரத்தமாக ஓப்புமை படுத்தப் படுகிறது.

      கிண்ணம்/கோப்பை (challice)

கடைசி இராப்போஜனத்தில் இயேசு தனது இரத்தத்திற்கான பாத்திரமாக ஒரு கோப்பை அல்லது பாத்திரத்தை பயன்படுத்தினார்.

      வெள்ளை உடை (white garment)

வெள்ளை நிறம் தூய்மை மற்றும் சமாதானத்தின் அடையாளமாக விளங்குகிறது. ஆகவே, திருவிருந்தில்

தூய்மை, பரிசுத்தம், மற்றும் சமாதானத்தின் அடையாளமாக வெள்ளை உடை பயன்படுத்தப்படுகிறது. 

      பெலிக்கான் மற்றும் குஞ்சுகள் (pelican & chicks) 

குஞ்சுகள் உணவின்றி இறந்து கொண்டிருந்தால், தாய் பெலிக்கன் தனது சொந்த இரத்தத்தால் குஞ்சுகளுக்கு உணவளிக்க அதன் உடலை கிழித்து இரத்தத்தை எடுத்து குஞ்சுகளுக்கு உணவளிக்கும்.  அதேபோல், இயேசுவின் இதயம் சிலுவையில் குத்தப்பட்டது (யோவான் 19:34), மேலும் வெளியேறிய இரத்தம் உண்மையான பானம், அவருடைய இரத்தத்தைக் குடிப்பவர் நித்திய ஜீவனைப் பெறுகிறார் (யோவான் 6:54,55) என்பதை அடையாளப் படுத்தும் வகையில் இத்தகைய சின்னம் பயன்படுத்தப்படுகிறது.

ஆதித்திருச்சபையில் திருவிருந்து

ஆதித்திருச்சபைக் காலத்தில் சபை கூடிவரும் பொழுதெல்லாம் அப்பம் பிட்குதல் (breaking of the bread) நடந்தது. இந்த அப்பம் பிட்குதல் சகலத்தையும் சமமாகப் பங்கிட்டு வாழ்ந்த திருச்சபையினரின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகவே இணைந்திருந்தது - அப். 2:42-45. அப்போஸ்தலர் காலத்திலிருந்து, திருவிருந்து ஞாயிறு வழிபாட்டின் மைய செயலாக இருந்தது - அப். 20:7.

வெளியிலிருந்து பார்த்த புறஜாதியார் அப்பத்தை மாமிசமாகவும் திராட்சை இரசத்தை இரத்தமாகவும் கருதி அவற்றைப் புசிப்பது நரமாமிசம் சாப்பிடுவதற்கு ஒப்பானது என்று சாடினார்கள். இதனால் அனேகர் ஆதித் திருச்சபையினரைக் காட்டுமிராண்டிகள் என்றே அழைத்தனர். ஆனால் ஆதித்திருச்சபை முற்பிதாக்கள் நாங்கள் அப்பத்தை சரீரமாக மாற்றுவது இல்லை; திராட்சை இரசத்தையும் இரத்தமாக மாற்றுவது இல்லை;  எங்களுக்காக பிட்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை நினைவுகூரும்படி நாங்கள் அப்பம் பிட்கிறோம்; அப்போது அப்பம் அப்பமாகவே இருக்கிறது சரீரமாக மாறுவது இல்லை; ஆகவே நாங்கள் நரமாமிசம் சாப்பிடுவது இல்லை; அதே போல எங்களுக்காக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தை நினைவுகூரும் படியாக நாங்கள் திராட்சை இரசத்தைக் குடிக்கிறோம்; அந்த திராட்சை இரசமும் இரத்தமாக மாறுவதில்லை என்று விளக்கம் அளித்தார்கள்.

திருவிருந்தில் பங்குபெறும் பாங்கு

பவுலின் கூற்றுப்படி, ஒரே அப்பத்தில் நாம் பங்கேற்பதன் மூலம் கிறிஸ்துவில் ஒன்றாக மாறுகிறோம்- 1கொரி.10:16-17. ஆகவே, திருவிருந்து கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தம் என்பதால் அதில் மிகுந்த பக்தியுடனும் அக்கறையுடனும் பங்கேற்க அறிவுறுத்துகிறார் பவுல் -1கொரி.11:27-28. ஆகவே பவுல், கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து: "இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தை புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து, இந்த பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜன பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்" (1 கொரி 11:27-29) என்றார்.

அப்பத்தைக்குறித்தும் பாத்திரத்தைக் குறித்தும் உண்மையான அர்த்தம் அறியாமல், நம்முடைய இரட்சிப்புக்காக இரட்சகர் செலுத்தின விலைக்கிரயத்தை மறந்து பங்குகொள்வது அபாத்திரம் என்று பொருள்படும். அல்லது திருவிருந்து ஆராதனையில் அறிக்கையிடப்படாத பாவத்தோடு பங்குகொள்வது என்றும் பொருள்படும். பவுலுடைய கட்டளையின்படி நம்மைநாமே நிதானித்து பின்பு அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் பானம் பண்ண வேண்டும்.

ஒரு அப்பமானது வெவ்வேறு செடிகளில் வெவ்வேறு இடங்களில் விளைந்த கோதுமை மணிகளை ஒன்றாகத் திரட்டி, வேறுபாடுகளற்ற ஒரே மாவாகப் பிசைந்து ஒரே வார்ப்பில் அப்பமாக மாற்றப்படுகிறது. அதுபோல, வேறுபாடுகள் களைந்து, பாவங்கள் சுத்தீகரிக்கப்பட்டு, ஒரே சரீரமாகிய அப்பமாகிய இயேசுவின் உடலை உட்கொள்கிறோம் என்பதை உணர்ந்து திருவிருந்தில் நாம் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும், நம்முடைய பிதாவானவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை விலைக்கிரயமாக செலுத்தி நம்முடன் செய்து கொண்டுள்ள இந்த புதிய உடன்படிக்கையை நினைவுகூரும் புதிய பஸ்காவாகிய திருவிருந்தை பரிசுத்தமாக ஆசரித்து, கடவுளின் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

நிறைவுரை

பஸ்காவில் ஆட்டுக்குட்டி பலி செலுத்தப் பட்டதுபோல, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியாகிய இயேசு, கர்த்தருடைய இராப்போஜனத்தின் வழியாக தம்மை பலியாடாக வெளிப்படுத்தினார். ஆகவே, கிறிஸ்துவாகிய பஸ்கா ஆட்டுக்குட்டி பலியானபோது பழைய உடன் படிக்கை புதிய உடன்படிக்கையாய் மாறினது. இதன் காரணமாக, பலி செலுத்துகிற முறை இன்று தேவைப்படாமல் போனது - எபிரேயர் 9:25-28. கர்த்தருடைய இராப்போஜனம்/ திருவிருந்து என்பது கிறிஸ்து செய்ததை நினைவுகூர்ந்து அவருடைய பலியினால் நமக்குக் கிடைத்த பலனைக் கொண்டாடுவது ஆகும். ஆகவே, ஆன்மீக உணவாக, விசுவாசிகளின் கூட்டுணவாக ஆண்டவரை உணர்ந்து, பாவத்தை அறிக்கையிட்டு இத்திருவருட்சாதனத்தின் அருளைப் பெற்று வாழ்வோமாக.


 Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow.  😊

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)