சிலுவை மொழி-1 "மன்னிப்பு" - SERMON ON THE CROSS VERSE 1

 சிலுவை மொழி-1

"மன்னிப்பு"


பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். (லூக்கா 23:34).

இறைவேண்டல்

மன்னிக்கும் தயை கொண்ட தாயும், தந்தையுமான வல்ல கடவுளே! உம்முடைய பாடு மரணத்தை சிந்திக்கின்ற இந்த நாளை நாங்கள் காணவும், நீர் சிலுவையிலிருந்து மொழிந்த திருவாய்மொழிகளை நாங்கள் தியானிக்கவும், நீர் எங்களுக்கு வழங்கி இருக்கிற கிருபைகளுக்காக உம்மை நன்றியோடு போற்றுகிறோம். இப்பொழுது நாங்கள் சிந்திக்க இருக்கின்ற முதலாம் திருவார்த்தை எங்களுக்கு அருளாசியை தரட்டும். பேசுகிற அடியவரை மறைத்து, உம் திருவார்த்தையின் மெய் பொருளை வெளிப்படுத்தும். தியானிக்கிற எல்லாருடைய இருதயத்தின் சிந்தனைகளும் உம்முடைய சமூகத்தில் ஏற்புடையதாய் இருக்கட்டும். இவைகளை சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து வழி நின்று வேண்டுகிறோம் அன்பு கடவுளே! ஆமென்.

முன்னுரை

வானாதி வானங்களுக்கு நேராக தம்முடைய பரம சிங்காசனத்திலே வீற்றிருப்பவரும், அதிகாரத்தின் முழு அதிகாரமாய் எம்மை ஆளுகை செய்பவரும், மரணத்தை வென்றவருமான சிலுவைநாதர் இயேசு கல்வாரி சிலுவையிலே தன்னுடைய இதய மொழியாக இந்த மன்னிப்பு என்னும் முதலாம் திருவார்த்தையை லூக்கா 23:24- பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் என்று கூறுகின்றார். இரட்சகர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தைகள் ஏழு அந்த ஏழு வார்த்தைகளும் ஒப்பற்றவை, உயரியவை, சிறந்தவை.

இந்த முதலாம் வார்த்தை இயேசுவின் முதன்மையான வார்த்தை, ஏனெனில் கிறிஸ்தவத்தின் அடித்தளம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவால் அருளப்பட்ட மன்னிப்பில் அமையப் பெற்றிருக்கிறது. அவரது முதன்மையான பணி முழு மானிடத்துக்கும் மன்னிப்பு வழங்குவது, மேலும் இந்த வார்த்தை முழு மானிடத்திற்கும் முழு உலகத்திற்கும் உரிய வார்த்தையாகவும் காணப்படுகிறது. இந்தப் பூவுலகில் முதல் இரத்த சாட்சி ஆபேல் என்று சொல்லலாம். அன்று, ஆபேல் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாய் அமைந்தது அவன் சகோதரன் காயினின் மன்னிக்க தவறுகிற மாண்பே. அன்று சகோதரர்களுக்கு இடையே வழங்க தவறப்பட்ட மன்னிப்பை இங்கு சிலுவையிலே இயேசு கிறிஸ்து வழங்குகிறார். மன்னிப்பு மனம் திரும்புதலில் உள்ளது.

ஒரு முறை புனித வெள்ளி அன்று போதகர் ஒருவர் ஆலயத்தில்மன்னிப்புஎன்கிற முதலாம் திருவார்த்தையை குறித்து ஆழமாக பேசிக் கொண்டிருந்தார். ஏன் ஆண்டவர் இவ்வுலகில் வந்தார்? எதற்கு வந்தார்? என்பதை குறித்து மிக தெளிவான முறையில் போதித்து கொண்டிருந்தார். இதனை ஆலயத்திற்கு வர இயலாத முதியவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே ஒலிபெருக்கியின் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார். போதகர் பேசிய மன்னிப்பு என்ற வார்த்தை முதியவருக்கு தெளிவை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டியது. ஆலய ஆராதனை நிறைவுற்றதும் முதியவர் தனது மகனை அழைத்து, மகனே போதகரை மாலை வேளையில் வீட்டிற்கு வரச் சொல் என கூறினார். போதகரும் மாலையில் முதியவரை பார்க்க சென்றார். முதியவர் தனது பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த தனது எதிரியை குறித்து கூறினார். எவ்வளவு முயன்றும் அந்த நபரை என்னால் மன்னிக்க முடியவில்லை, எனவே தான் மரித்து போனால் தனக்கு பரலோக ராஜ்ஜியம் கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு போதகர் மன்னிக்கவில்லை என்றால் பரலோக ராஜ்ஜியம் கிடைக்காது என பதில் உரைத்தார். உடனே முதியவர் போதகரிடம் தனது எதிரியை மன்னிப்பதற்காக ஜெபித்துக்கொள்ள வேண்டிக்கொண்டார். போதகரும் ஜெபித்து போய்விட்டார். முதியவரும் தனது எதிரி செய்ததை மறந்து மன்னித்து விட்டார். சற்று நேரம் சென்ற பின்பு தனது மகனை அழைத்த முதியவர், மகனே நான் நமது பக்கத்து வீட்டில் வசிக்கும் எதிரியை மனதார மன்னித்து விட்டேன், ஆனால் நீ என்றுமே அவரை மன்னித்து விடக்கூடாது என்று கூறினார். மனிதனின் மன்னிக்கும் மாண்பும், மன்னிக்கும் மனநிலையும் இன்றைய உலகில் இப்படிதான் காணப்படுகிறது.

ஆனால் இயேசுவின் மன்னிப்பு சிலுவையில் உயர்ந்து மலர்ந்து இன்றும் நறுமணம் வீசி கொண்டிருக்கிறது. சிலுவையில் இயேசுநாதர் மொழிந்த முதல் திருமொழி மற்றவர்கள் மீது இயேசு கொண்டிருந்த மாபெரும் அன்பின் வெளிப்பாடாய் அமைகிறது. இவர்களுக்கு மன்னியும் என்ற வார்த்தையில் யாரை ஆண்டவர் மன்னிக்க கூறுகிறார்? மனுஷகுமாரனுக்கு சகல அதிகாரமும் இருந்த போதிலும் இயேசு பிதாவே என்று ஏன் இங்கு அழைத்து மன்னிப்பு கோர வேண்டும்? முந்தின தினம் கெத்சமனே ஜெபம் இதற்கு பதில் தருகிறது. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (லூக்கா 22:42) இப்பொழுது இனி சம்பவிக்க போவது எல்லாம் தன்னுடைய கரத்தில் இல்லை எல்லாம் தன் பிதாவின் கரத்தில் இருக்கிறது என்பதை நேற்றே வெளிப்படுத்தி விடுகின்றார்.

After Retirement No Rights என்பது போன்று சிலுவையில் இயேசுவின் நிலை, ஊழியர் ஒருவர் தான் பணி நிறைவு பெற்ற மறுநாளில் இருந்தே அதில் எந்த அதிகாரமோ, ஆளுமையோ செலுத்த முடியாததை போன்று தான் கல்வாரி இயேசுநாதரும் தன் பணிகள் எல்லாவற்றையும் நிறைவு செய்து இறுதியாக அனைத்தையும் பிதாவிடம் ஒப்படைக்கிறார். இந்த முதல் வார்த்தை பரிந்துரை(Recommendation) போன்றது. யாருக்காக இயேசு பரிந்துரை செய்தார்? ஒருவேளை தன்னை காட்டி கொடுத்த யூதாஸிற்காகவா? மறுதலித்த பேதுருகாகவா? ஓடிப்போன தன்னுடைய சீடர்களுக்காகவா? பொய் சாட்சி தேடிய ஆலோசனை சங்கத்திற்காகவா? அநியாயத் தீர்ப்பு வழங்கிய பிரதான ஆசாரியனுக்காகவா? இயேசுவை பரிகாசம் செய்த ஏரோத்திற்காகவா? குற்றம் காணாமல் இயேசுவை சிலுவை மரணத்திற்கு கொடுத்த பிலாத்துவுக்காகவா? தன்னை சிதைத்து சித்திரவதை செய்து நகைக்து கேலி செய்த போர் செய்தவர்களுக்காகவா? அநியாயமாய் தங்கள் மீது சாபத்தை வரவழைத்துக் கொண்ட ஜனங்களுக்காகவா? ஆக இது தனிப்பட்ட மனிதனுக்கான பரிந்துரை அல்ல ஒட்டுமொத்த உலகின் பாவத்திற்கு மன்னிப்பு வேண்டிய பரிந்துரை.

இரண்டாவது வார்த்தையில் மனமாறிய கள்வன் கூட பரதீசு வாழ்வு பெற, இயேசுவின் இந்த மன்னிப்பின் வார்த்தை அவனை நிச்சயமாய் கவர்ந்திருக்க வேண்டும் இயேசுவின் இந்த பாடு மரண போராட்டத்திலும் மற்றவர்களை இயேசுவால் மன்னிக்க முடிகிறது என்றால் தன்னையும் மன்னிக்க முடியும் என்ற மனமாற்றத்தின் உறுதியை வெளிப்படுத்தினான் கள்வன். இதைதான் எபேசியர் 7:1-இல் இயேசுவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது என்று பவுல் குறிப்பிடுகிறார்.

யூத சமய எண்ணங்களில் பாவமன்னிப்பு குறித்த கருத்து மிக முக்கியமானது எத்தகைய பாவம் செய்தாலும் கடவுளிடம் மன்னிப்பு உண்டு என்று யூதர்கள் நம்பினர். கடவுளுக்கு ஆடு, மாடு, புறா போன்றவற்றை பலி செலுத்துவதாலும், எருசலேமின் வரியை சரியாக கொடுப்பதினாலும் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனாலும் தங்களுக்கான பாவத்தை மன்னிக்க இயேசு கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாய் இவ்வுலகில் வந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரையே பலியாக செலுத்த தயக்கமின்றி முன் வந்தனர். இயேசுவுக்கு செய்த இந்த துரோகத்திற்கு பிதாவிடம் மன்னிப்பு உண்டோ! இல்லையோ! என்பது இவர்கள் அறிந்திருக்கவில்லை. விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிற்கு மறுவாழ்வு கொடுத்த போது இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவான் 8:11) என்று தானாக முன்வந்து மன்னித்து அனுப்பியவர், இங்கு மற்றவர்களின் பாவத்தை மன்னிக்க பிதாவிடம் மன்னிப்பு வேண்டுகிறார். இன்னும் என் வேளை வரவில்லை என்று தன்னுடைய முதல் அற்புதத்தின் போது பிதாவின் பதிலுக்காக காத்திருந்தவர், இந்த இறுதி நேரத்தில் எல்லாம் கைவிட்டு போனது என்பதை உணர்ந்தவராய் ஜனங்களின் பாவத்திற்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார்.

தன் ஒரே மகனின் பாடு மரணத்திற்கு காரணமானவர்களை பிதா எதுவும் செய்து விடாத வண்ணம் சிலுவையின் கோர காட்சியாய் முதல் பொன்மொழியிலேயே மன்னிப்பு வேண்டுகிறார். மனித வாழ்க்கையில் கடைசி வார்த்தைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில வழக்குகளில் கூட பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் மிக முக்கியமானதாய் பார்க்கப்பட்டு, அதற்கு மிகுந்த கவனம் செலுத்தப்படும். இதே போல தான் இயேசுவின் கடைசி வாக்குமூலம் ஆரம்பமே அவர் மிகவும் நேசித்த உலகின் மீது இருந்தது. எனவே தான் நமக்காக பிதாவிடம் மன்னிப்பு கோருகிறார், பரிந்து பேசுகின்றார். இன்றும் நம்முடைய அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு வேண்டி பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார் இயேசுநாதர். இந்த உலக வாழ்வில் நாம் வாழும் குறுகிய காலத்தில் மற்றவர்களை மன்னித்து மகிழ்ச்சியாய் வாழ முயல்வோம் பகைமையை வளர்த்து, நல்ல உறவுகளை இழந்து போகாதவர்களாய் வாழ்வோம். மன்னிப்பு எல்லா தீமைக்கும் அருமருந்து என்பதை உணர்ந்து மற்றவர்களை குற்றப்படுத்தாமல் பிறரை குணப்படுத்த முயல்வோம். சிலுவைநாதர் தாமே சிலுவையின் வழி மன்னிப்பின் வாழ்வை நமக்கு வழங்குவாராக. ஆமென். 

                                                                                                                 ஆ. ஜெனில் தாஸ்

Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊


Comments

  1. Best wishes for your work, it is useful

    ReplyDelete
  2. Update the words on cross by part 1,2...etc for different years..useful

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)