சிலுவை மொழி-2 இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் SERMON ON THE CROSS VERSE 2

 சிலுவை மொழி-2

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 23:43)

He replied, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23:43)

சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து மொழிந்த இரண்டாம் வார்த்தை கள்வனுக்கு பரதீசு வாழ்வு”. பரதீசு என்ற வார்த்தை ஒரு பாரசீக சொல். இதற்கு தரப்படுகிற பொருள் என்னவென்றால் வேலியடைக்கப்பட்ட தோட்டம்”, நந்தவனம்”, செழிப்பான தோட்டம் என்பனவாகும். பாரசீக அரசன் தன்னுடைய விருந்தினர்களை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக பரதீசு என்று பொருள் தரும் தோட்டத்தில் விருந்து கொடுப்பது அக்கால வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது.

இயேசுவும் சிலுவையில் கள்வனை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக பரதீசு வாழ்வை (வாய்ப்பை) அவனுக்கு அருளுகின்றார். திருவிவிலியம் இந்த வார்த்தையை பேரின்ப வீடு என்று குறிப்பிடுகிறது. ஆக இயேசு கள்வனுக்கு அருளின வாழ்வு, தன்னுடன் இருக்கும் வாழ்வு. பரதீசு என்ற வார்த்தைக்கு பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், அதன் மையம் இயேசுவுடன் இருக்கும் வாழ்வையே குறிக்கிறது. எத்தனை விளக்கங்கள் இந்த பரதீசு வார்த்தைக்கு தரப்பட்டாலும் இயேசுவுடன் இருக்கும் எந்த ஒரு இடமும் நமக்கு பரதீசு தான்.

பரதீசு வாழ்விற்கு முன் கள்வனின் நிலை:

இவ்விரு கள்வரும் ரோம ஆட்சியை எதிர்த்து கலகம் செய்தவர்கள். எனவே இவர்கள் இயல்பாக வாழ்வு வாழ முடியாதபடி மலை சிகரங்களின் அடியோரங்களில் பதுங்கி வாழ்ந்து வாழ்ந்தனர். மேலும் வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதை மரபு செய்தி ஒன்று கூறுகிறது.

மத்தேயு 27:44- அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் என்று குறிப்பிடுகிறது. இரு கள்வர்களும் அவரை நிந்தித்தார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை தூஷிக்க அவர்கள் சற்றும் தயங்கவில்லை. இது அவர்களின் வாழ்வியலை வெளிப்படுத்துகிறது.

ஏன் தூஷித்தார்கள்? என சிந்திக்கும்போது, இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட காலம் பஸ்கா பண்டிகை காலம். பொதுவாக இந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் இருக்கும் யூதர்கள் எருசலேம் வருவார்கள். எனவே யூதர்களை சிலுவை மரணத்திற்கு இந்த நாட்களில் ஒப்புக் கொடுக்க மாட்டார்கள். இதற்கு காரணம், ஒருவேளை யூதர்களை இந்த காலகட்டத்தில் சிலுவை தண்டனைக்கு ஒப்புக்கொடுத்தால், ரோமர்கள் மீது தவறான அபிப்ராயம் யூதர்களுக்கு வந்து விடும், இதன் மூலமாக தங்களுடைய ஆட்சியை எதிர்த்து கலகம் செய்வார்கள் என்கிற அச்சம் ரோமர்களுக்கு இருந்தது. ஆனால் இயேசுவின் காரியத்தில் இது பின்பற்ற முடியவில்லை. இது கள்வர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இன்னும் ஒரு வாரம் கூட தாங்கள் உயிரோடு இருப்போம் என நம்பியவர்களின் நம்பிக்கை இயேசுவால் பொய்த்து விட்டது என நினைத்தனர், இதன் பிரதிபலிப்பாகவே இயேசு கிறிஸ்துவை தூஷித்தார்கள்.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான் (லூக்கா 23:39). தனக்கு சிலுவை தண்டனை கிடைத்த பிறகும் இயேசு தப்பித்தால் தானும் தப்பித்து விடலாம் என்ற அவனின் குறுகிய மனநிலையை இது வெளிப்படுத்துகிறது. மரண தருவாயில் கூட தங்கள் தவறை உணர்ந்து கொள்ள முன்வரவில்லை. மாறாக ஏதாவது ஒன்றை செய்து இந்த தண்டனையிலிருந்து தப்பி விட வேண்டும் என்கிற குறுகிய பார்வையில் தான் கள்வர்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். சிலுவையில் அறையப்பட்ட தருணத்தில் கூட தங்கள் வேதனையை அவர்கள் உணரவில்லை. மாறாக இயேசுவை பரிகாசம் செய்வதிலேயே குறிக்கோளாய் இருந்தார்கள். முதல் கள்வன் ஏன் இயேசுவை இகழ்ந்திருப்பான்? என்று சிந்திக்கும் போது, ஒருவேளை ரோமர்களோடு சேர்ந்து இயேசுவை இகழ்ந்தால் தன்னை சிலுவையில் இருந்து இறக்கி விடுவார்கள் என்ற குறுகிய எண்ணம் கூட இதற்கு காரணமாய் இருக்கலாம்.

ஏன் கள்வனின் திடீர் மாற்றம்!

நிராகரிக்கப்படுவதை (Rejections) தன்னுடைய வாழ்வில் நிறைய பார்த்தவன். இயேசு எல்லாராலும் நிராகரிக்கப்படுவதை கண்டு தன் நிலை உணர்கிறான். அவனை இயேசுவில் காண்கிறான். குடும்பம், பெற்றோர், பிள்ளைகள், மனைவி மற்றும் சமூகத்தால் தான் கைவிடப்பட்டதையும், நிராகரிக்கப்பட்டதையும் இங்கு எண்ணி பார்க்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாய் ரோமர்களின் தனிமனித உரிமை நிராகரிப்பே இவன் தீய செயல்களுக்கு காரணம் என்பதை சிலுவையில் உணர தொடங்குகிறான்.

இத்தகைய சூழலில் இயேசு சிறப்பு கைதி (Special Prisoner) எனவே எல்லா சேவகர்களும் இயேசுவையே Target செய்தனர். பரபாசை விடுதலையாக்கி இயேசுவை அவனைவிட பெரிய குற்றவாளியாக தீர்த்தது இயேசுவுக்கு அழிக்கப்பட்ட அநியாயம் என்கிற உள்உணர்வு அவனுக்கு தோன்றியது. இது இயேசுவின் மீது நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வந்தது. லூக்கா 23:28-இல் இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று தன் பாடுகளின் நேரத்தில் கூட பிறர் மீது கரிசனை கொண்ட இயேசுவின் பரிவு உள்ளம் அவனை கவர்ந்தது.

பொதுவாக சிலுவை மரண தண்டனை பெற்றவர்கள் தீய வார்த்தைகள், சாபமிடுதல், தன்நிலை மறந்து பேசுதல், போன்ற பண்புகளையே வெளிப்படுத்துவார்கள்  ஆனால் இயேசுவின் செயல் இதற்கு எதிர்மறையாக இருந்தது. நிதானத்தோடும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், மிக மிக கவனமாக இருந்த இயேசுவின் செயல்பாடுகள் கள்வனை கவர்ந்தது. இத்தனை துன்பங்களையும், நிந்தைகளையும், அவமானங்களையும், வீண்பழியையும் தனக்குத் தந்த பகைவர்களுக்காக பிதாவிடத்தில் மன்னிப்பை இயேசு வேண்டியது, மெய்யாகவே இவர் தேவகுமாரன் என்பதை அவன் முழுமையாக ஏற்றுக் கொள்ள காரணமானது.

மத்தேயு 27:34- கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். உடல் வேதனையை மறக்க செய்யும் போதை நிறைந்த காடியை இயேசு குடிக்க மறுத்தது இந்த கள்வனை கவர்ந்தது. இவர் மெய்யாகவே இரட்சகர் என்பதை அவனில் உறுதிப்படுத்தியது.

சீஷர்களுக்கு அருளாத பரதேசி ஏன் கள்வனுக்கு?

இதற்கு காரணம் தன்னிலை அறிந்த கள்வன் தன் தவறை திறந்த மனதுடன் ஒப்புக்கொள்கிறான். அதே சமயம் திருந்திய கள்வன் மற்ற கள்வனையும் திருத்த முயற்சிக்கிறான். லூக்கா 23:40-41- மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டுஇது இயேசுவின் பேரின்ப வீட்டின் வாழ்வை இவனுக்கு தேடி தந்தது நீதிமொழிகள் 28:13- தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிற திருமறை வசனத்திற்கு ஏற்ப இயேசுவின் இரக்கத்தை பெற்றுக் கொள்கிறான்

வாழ்வை தாரும், உடனே தாரும் என்று அவன் கேட்கவில்லை மாறாக உன் ராஜ்ஜியத்தில் வரும்போது நினைத்தருளும் என்று தான் வேண்டுதல் செய்கிறான். இயேசுவின் சீஷர்கள் போன்று வலது பக்கமோ, இடது பக்கமோ இடம் கேட்கவில்லை. லூக்கா 23:42-இல் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான், ஆண்டவரை என்று அறிக்கை செய்கிறான். கள்வன் பயன்படுத்தின ராஜ்ஜியத்தில் என்கிற வார்த்தையிலிருந்து அவன்  இயேசுவை ராஜா என்றே பறைசாற்றுகிறான் என்பது தெளிவு பெறுகிறது. நமது ஆண்டவர் உடன்படிக்கையை நினைத்தருளும் ஆண்டவர். எனவே இவன் வேண்டுதல் நினைத்தருளப்பட்டு இயேசுவுடனான நித்திய வாழ்வை பெற்றுக் கொள்கிறான். இங்கு எந்த வகை ஞானஸ்தானமும், ஆவிக்குரிய கூட்டங்களின் தேவையோ ஏற்படவில்லை. மாறாக கள்வனின் கடைசி நேர மன மாற்றம் இயேசுவுக்கு ஏற்புடையதாகவும், பரதீசு வாழ்வைப் பெற போதுமானதாயும் அமைகிறது.

முடிவுரை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வதைப் போன்று உன்னதரை உணராத மற்றொரு கள்வனின் நிலை அமையப்பெற்றிருக்கிறது. தன்னிலை உணர்ந்த கள்வன் இன்றுவரை புகழப்படுகிறான். தன் நிலை அறியாதவன் இன்று வரை இகழப்படுகிறான். சிலுவையில் மலர்ந்த மன்னிப்பின் நறுமணம் இரு கள்வனில் ஒருவனின் மனதை கவர்ந்தது, அவன் இயேசுவின் மனநிலையை அறிந்து பேசினான். மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்(உபாகமம் 8:5) என்ற வார்த்தை இங்கு செயல் வடிவம் பெறுகிறது.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊


Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)