Sermon on சபைநாள் விழா CHURCH DAY

 

சபைநாள் விழா

(தி. பா : சங்கீதம்: 132:13-18)



திருச்சபை என்பது கற்களாலும், கைவினைகளினாலும் உருவான வெறுமையான கட்டிடம் மாத்திரம் அல்ல. மாறாக, அவை கடவுளால் அழைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட மக்களாலான கூட்டமைப்பு. இத்தகைய சிறப்பு மிக்க திருச்சபை கூட்டமைப்பின் பிறந்தநாளே சபைநாள். இது உளமாற ஆண்டவருக்கு நன்றி கூறும் நன்னாள். திருச்சபையின் வெகுதூர பயணப் பாதையில் இன்னும் ஓர் மைல் கல்லை காணும் பாக்கியத்தை இந்த ஆண்டிலும் பெற்றுக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க நினைவு நாள்.

தென்னிந்திய பேராயங்களில்  நமது கன்னியாகுமரி பேராயம் மிஷனெரிகளின் தியாகத்தாலும், உதிரத்தாலும் உருவான பல திருச்சபைகளை இன்றும் வரலாற்று சின்னங்களாய் சுமந்து நிற்கிறது. காலத்தால் அழியாத வரலாற்று நிகழ்வுகளை பல திருச்சபைகள் பாதச்சுவடுகளாய், நெஞ்சின் நினைவுகளாய் பதித்து வைத்துள்ளன.   திருச்சபைகள் நூறு, இருநூறு ஆண்டுகள் வரலாற்று சிறப்புடையது என்பதற்காக ஆண்டுகளின் எண்ணிக்கையினால் மாத்திரமே சிறந்த இடத்தை  அடைந்துவிட முடியாது. மாறாக திருச்சபையின் செயல்பாடுகள் மற்றும் நல் எண்ணங்களின் பிரதிபலிப்புகளும், அதனால் ஏற்படும் வளர்ச்சியும், சமுதாய தாக்கங்களுமே திருச்சபையின் சிறப்புகளை தீர்மானிக்கின்றன. ஆக சபையின் வளர்ச்சி என்பது ஆண்டுகளின் எண்ணிக்கைகளில் அல்ல! மாறாக, அவைகளின் நல் எண்ணங்களால்  மதிப்பிடப்படுகின்றன. Charles. R. Swindoll என்கிற இறையியலாளர் சொல்லும்போது “Church is not a ferry boat to take effortless passengers to the shores of heaven. But church is a lifeboat for the rescue of sin- wrecked and perishing souls” என்கிறார். எனவே வழக்கமான பாரம்பரிய சபை நாள் கொண்டாட்டங்களோடு மட்டும் நின்று விடாமல் நாம் கொண்டாட வேண்டிய அர்த்தமுள்ள சபைநாளையும், அவை கற்றுத் தரும் பாடங்களையும், அவை நமக்கு விடுக்கும் அழைப்புகள் என்ன? என்பதையும் திருமறை பின்னணியத்தோடு சிந்திப்போம்.

 

I. கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதற்கு:

பலவித ஆயத்தங்களோடும், மகிழ்ச்சியோடும்  ஆலயத்தில் இணைந்திருக்கும் இந்நாளில், திருச்சபை என்பது கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டு, அவரை ஆராதிக்க தரப்பட்டுள்ள பரிசுத்த இடம் என்கிற அடிப்படை புரிதல் மிக அவசியமானது. இந்த இடம் கடவுளால் நம் முன்னோர்களுக்கு வாக்குத்தத்தத்தின் இடமாக அருளப்பட்டு, அவர்களின் கடின உழைப்பு, உதாரத்துவமான காணிக்கைகள், இறை பக்தி, இறை பயம் உறுதியான ஜெபம், விடாமுயற்சி போன்றவற்றால் பல தடைகளையும், சவால்களையும், இன்னல்களையும் தாண்டி நம் சந்ததிகளின் ஆசீர்வாதத்திற்கு என்று தரப்பட்டுள்ள இடம் என்பதை நினைத்துப் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நாள் இது. இதைதான் சங்கீதக்காரன் சங்கீதம்:132:13-ல் கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்என்று கடவுளின் விருப்பத்தை பிரதிபலிக்கிறார்.  

கனவு ஆண்டாய் கருதப்பட்ட 2020 ஆம் ஆண்டில் கொரோனா கொள்ளை நோய்க்கு பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்த போதிலும், கடவுள் நம்மை தயவாய் நினைத்தருளி இன்று நம்மை இந்த பரிசுத்த ஸ்தலத்தில் கூடி வர செய்திருக்கிறார். இதையெல்லாம் நன்றியோடு நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நாளே சபைநாள். எனவேதான் தூய பவுலார் எபேசு திருச்சபையாருக்கு கடிதம் எழுதிய போது எபேசியர்:2:20-ல் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்’ என்று நினைவுபடுத்தி அவர்கள் கிறிஸ்துவில் தொடர்ந்து வளரவும், முன்னேறவும் வழிவகுக்கின்றார். பவுலாரின் இந்த வார்த்தை நிச்சயமாகவே எபேசு திருச்சபையாரை கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்க செய்திருக்கும்.

இன்றைய உலகில் கைப்பேசியும், வலைத்தளமும் பயன்படுத்தாதவர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு அன்றாட வாழ்வோடு ஒன்றிவிட்டன இவ்விரண்டும். சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு Password அமைத்து, அதை நினைவில் வைத்து எல்லாம் பாதுகாப்புடன் இருக்கிறது என்ற நிறைவை பெறுகிறார்கள். அதேசமயம் இவ்வுலகில் ஜீவனோடு நம்மை வைத்திருக்கும் கடவுளிடமும் இறைவேண்டல் என்கிற password- யை நினைவுகூர்ந்து, அதை அனுதினமும் பயன்படுத்தி, பாதுகாப்பான வாழ்வை பெற முயல்வதும் மிக அவசியமானது. இறைவேண்டலின் மகத்துவத்தை குறித்து Martin Luther சொல்லும்போது, “prayer is a strong wall and fortress of the church; it is a goodly Christian weapon” என்கிறார்.

II.நிகழ்காலத்தில் நிலைத்து நிற்பதற்கு:

முன்னோர் அமைத்து தந்த பாதையில் இத்தனை காலம் பயணித்து, அவர்கள் செயல்படுத்திய செயல்களை அவர்களைப் போன்றோ அல்லது அதைவிட சிறப்பாகவோ திருச்சபையில் செய்து நிறைவேற்ற வேண்டுமெனில், கன்மலையாம் கிறிஸ்துவின் மீது திருச்சபைகள் கட்டப்பட்டுள்ளது என்கிற உறுதி நிலை நம்மில் காணப்பட வேண்டும். இதைதான் T.S. Eliot – “The true church can never fail. For it is based upon a rock” என்கிறார். கன்மலை என்னும் கிறிஸ்து போராட்டம் மிகுந்த இவ்வுலகில் நம்மை நிலைத்து நிற்கச் செய்து, தாகத்தோடு இருப்பவர்களின் ஆத்தும தாகம் தீர்க்கிறார். திருச்சபை கடவுள் விரும்பி வாசம் செய்யும் இடம் என்பதை சங்கீதம்:132:14  இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன் என்று கோடிட்டு காட்டுகிறது.

vஇந்த ஸ்தலம் வாக்குவாதத்தின் இடம் அல்ல! இது வாக்குத்தத்தத்தின் இடம்.

vஇது பங்கு போடும் இடம் அல்ல! கிறிஸ்துவுக்காக பக்குவப்படும் இடம்.

vஇது வாழ்வு அலங்கோலமாகும் இடம் அல்ல! ஆசீர்வாதத்தால் அலங்கரிக்ப்படும் இடம்.

vஇது அவமானத்தை தரும் இடம் அல்ல! கடவுளின் வெகுமானத்தை தரும் இடம்.

இன்னும் எத்தனை காலம்தான் முன்னோர் அமைத்து தந்ததை அனுபவித்துக் கொண்டு பாரம்பரியம் என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கப் போகிறோம்? இன்று நாம் நம் முன்னோர் புகழ்பாடி கொண்டிருப்பதைப் போன்று நம் வருங்கால சந்ததியர், இன்றைய செயல்களை வரலாறாய் போற்றி மகிழ நாம் அவர்களுக்காய் செய்ய போகும் நன்மையான காரியங்கள் தான் என்ன? என்பதை சிந்தித்து செயல்படுத்துவோம். இறைவன் தங்கும் ஆலயம் எவ்வளவு அருமையும், பரிசுத்தமுமானது, அது எவ்வளவு உறுதித் தன்மை உடையது என்பதை அறிந்து, புரிந்து கிறிஸ்துவின் திருச்சபையாய் மாறுவோம். நல்ல பல திட்டங்களை, பிறருக்கு வாழ்வு தரும் செயல்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தூய பவுல் பிலிப்பியருக்கு கடிதம் எழுதும்போது பிலிப்பியர்: 4:9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் என கூறி தன்னில் கண்ட கிறிஸ்துவை வெளிப்படுத்தி, அவரில் நிலைத்து நிற்க ஆலோசனை வழங்குகிறார். நாமும் வீண் தற்பெருமைகளை திருச்சபையில் பறைசாற்றமல் கிறிஸ்துவின் புகழ்பாடி அவரில் நிலைத்திருப்போம். கிறிஸ்து தங்குமிடமாய் திருச்சபை மாறும்போது திருப்தியான வாழ்வு நம்மில் வெளிப்படும். சவால்கள் நிறைந்த நிகழ்காலத்தில் கிறிஸ்துவை வாழ்வில் காட்டி நிலையில்லா இவ்வுலகில் சாட்சிகளாய் நிலைத்திருப்போம்.

III.எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு:

இன்றைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் முன்னேறிச் கொண்டிருந்தாலும், மறுபுறம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகளை எடுப்பதில் தடுமாறிக் கொண்டிருப்பது வேதனையானதே. தோல்வியை ஏற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேறிச் செல்ல மாற்று வழிகள் பல இருந்தும், கடந்து 2020-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் பயத்தில் தற்கொலை மட்டுமே முடிவு என வாழ்வை இழந்த மூன்று +2 மாணவர்களின் மனநிலை இன்றைய இளைஞர்களுக்கு எதிர்காலத்தை எதிர்கொள்வதில் இருக்கும் தடுமாற்றத்தையே வெளிக்காட்டுகிறது. சில நேரங்களில் பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகளும் கூட பிள்ளைகளை இத்தகைய முடிவுகளுக்கு இழுத்துச் சென்று விடுகிறது. இத்தகையச் சூழலில் திருச்சபையின் பங்களிப்பு மிக முக்கியமானது, எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தி, மனத்தெளிவோடு இவ்வுலகின் சவால்களை எதிர்கொள்ளும் துணிவை சமூகத்திற்கு திருச்சபைகள் ஏற்படுத்த வேண்டும். சங்கீதம்:132:15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்என்கிறது. தேவையில் இருப்போர் சந்திக்கப்பட வேண்டும் என்பதே திருச்சபைக்கு திருறை தரும் ஆலோசனை. பொருளாதார அடிப்படை தேவைகள் சந்திக்கப்படுவது மட்டுமல்ல, மனநிலை மற்றும் வாழ்வியல் ரீதியான தேவைகளை சந்திப்பதும் திருச்சபையின் கடமையாகும்.

இன்று Mobile phone, Online games, Internet  போன்றவற்றிற்கு அடிமைப்பட்டு, வாழ்வின் அத்தனை தேடலுக்கும் google ஒன்றே போதும் என்ற மனநிலை இன்று உருவாகி விட்டது. புத்தக வாசிப்பு, குடும்பமாக இணைந்து செலவிடும் நேரம் குறைந்து அலைபேசியின் அரவணைப்பு போதும் என்கிற நிலை இன்றைய சமுதாயத்தின் அவலம். இந்நிலை மாற்றம் பெற திருமுறை தேடலை குழந்தைகளுக்கு சிறு பருவம் முதலே ஏற்படுத்துவதில் திருச்சபைகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம் இதுவே. காலத்தின் மாற்றங்கள் முக்கியமானவைகள் தான், அதேசமயம் அந்த மாற்றங்கள் மனிதனை இயந்திரமாக மாற்றி விடக் கூடாது. இனிவரும் காலங்கள் திருச்சபைகளுக்கு மிகுந்த சவால் நிறைந்தவை என்பதில் எந்த ஐயமுமில்லை. அதை எதிர்கொள்ள தூய ஆவியாரின் துணை மிக அவசியமானது. D.L. Moody – “Church attendance is as vital to a disciple as a transfusion of rich, healthy blood to a sick man” என்கிறார். நாளைய திருச்சபைகள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு சபைநாளிலும் திருச்சபைகள் எதிர்காலத்தை மனதில் கொண்டு, திட்டங்களை செயல்படுத்தி, ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுப்பது சிறந்தது. கிறிஸ்து  சிலுவையில் சிந்திய உதிரத்தால் உருவான திருச்சபையின் பங்காளிகளான நாம், இந்த சமூகத்திற்கும், எதிர்கால தலைமுறைக்கும் பயன்தரும் வாழ்வை வெளிப்படுத்துவோம். இறையாசி உங்கள் அனைவரோடும் நிறைவாய் இருப்பதாக. ஆமென்.

 

. ஜெனில் தாஸ்.

Thank you for visiting my blog page. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)