இயற்கை வளங்களை சுதந்தரித்தல்
இயற்கை வளங்களை சுதந்தரித்தல்
இயற்கை வளங்கள் மீது அதிக கவனமும், அதை பாதுகாப்பதில் அதிக முனைப்பும் கொண்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக கருதப்படுவது ஐரோப்பா நாடுகளில் ஒன்றான “லிதுவானியா” (Lithuania) என்கிற 65,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய நாடு. இயற்கைக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கும் நாடும் இதுவே. அடிமட்டத்திலிருந்து உயர்மட்டத்திலிருக்கிற அனைத்து குடிமக்களுக்கும் எந்தப் பாகுபாடுமின்றி ஒரே தரமான மாசற்ற தூய குடிநீரை வழங்கும் இவ்வுலகின் ஒரே நாடு இதுதான். இதற்கு காரணமாக சொல்லப்படுவது இயற்கை வளத்தை பாதுகாக்க அந்நாடு கையாளும் சட்ட, திட்டங்களும் அதை சரிவர பயன்படுத்தும் அந்நாட்டு மக்களுமே. திருமறையில் இயேசுவின் போதனைகளில் மிகவும் புகழ் வாய்ந்தது மலைப்பொழிவு எனலாம். அதன் ஒரு பகுதியை தான் மத்தேயு 5:3-10 வரையிலான பகுதிகளில் காண்கிறோம். மோசே இஸ்ரவேல் மக்களின் நெறி தவறா வாழ்விற்காக சீனாய் மலையில் கடவுளின் சட்டத்தை பெற்று தந்தார். இந்தப் திருமறைப் பகுதியில் இயேசு ஒரு புதிய மோசேயாக, ஒரு புதிய சட்டத்தை வழங்கி, ஒரு புதிய மக்கள் இனத்தை உருவாக்குபவராக மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை காட்சிப்படுத்துகிறார்.

குறிப்பாக
மத்தேயு 5:5-இல் “சாந்தகுணமுள்ளவர்கள்
பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்கிற
ஒரு புதிய சட்ட, திட்டத்தினை இயேசு கிறிஸ்து மலைப்பொழிவின் போது தம் ஜனத்திற்கு ஏற்படுத்துகிறார். அதாவது, கனிவான உள்ளம் கொண்டோர் கடவுளின் படைப்பாகிய இயற்கை வளங்களினால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த பூமியை சகந்தரிப்பார்கள் என்பதையும், அதோடு இயற்கை
மீது மானிடம் காட்ட வேண்டிய கரிசனை மற்றும் அன்பை பிரதிபலிப்பதாகவும் இது
அமையப் பெற்றிருக்கிறது.
பூமியின் வளங்களில் ஒன்றான மண்ணினாலே மனிதன்
உருவாக்கப்பட்டான். பிறகு அதே மண்ணை ஆளும் உரிமையையும், பண்படுத்தி
பாதுகாக்கும் உன்னத பொறுப்பினையும் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்டான்.
அதை சிறப்பாக நிறைவேற்ற உங்களுக்கு சாந்தகுணம் என்பது அடிப்படை
அவசியமானது என்ற தெளிவை ஏற்படுத்துகிறார் இயேசு கிறிஸ்து.
இயேசுவின் காலத்தில் அநீதி, ஏழ்மை, அடக்குமுறை போன்றவற்றால் நலிவுற்றிருந்த ஜனங்களுக்கு இயேசுவின் போதனைகள் உற்சாகத்தை கொடுத்து, மேசியாவின் ஆளுகை மீது நம்பிக்கையும் ஏற்படுத்தியது. அன்று விடுதலை வாழ்வதற்காக ஏங்கி தவித்த மக்களைப் போன்றே, இன்று இயற்கையும் விடுதலை வாழ்விற்காக பல நிலைகளில் ஏங்கித் தவிக்கிறது. எப்படியெனில் இன்றைய மானிட சமூகம் அளவுக்கு மீறி ஆற்றுமணல் எடுத்தல், ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்தல், மாற்று மரம் நடாமல் அதிக அளவில் மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், அரியவகை மிருகங்களை வேட்டையாடுதல் போன்ற இயற்கைக்கு எதிரான தீய செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. எனவே அத்தகைய செயல்களை விட்டுவிட்டு, இயற்கை வளங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நற்செயல்களை முன்னெடுத்துச் செல்ல இந்த திருமறைப் பகுதி நமக்கு அறைக்கூவல் விடுக்கிறது. இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பு அதைப் படைத்தவரை ஆராதிக்கும் திருச்சபைக்கு அதிகம் உண்டு என்கிற உணர்வோடு இயற்கை மீது கரிசனை கொண்டு, இந்த சமுதாயத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவோம். மாயமற்ற, நேர்மையான, கரிசனை கொண்ட சாந்தகுணத்தை வெளிப்படுத்தி இயற்கையை சுதந்தரிப்போம். அதன் பலனாக படைப்பாளராம் கிறிஸ்துவின் கையின் கருவிகளாய் மாறுவோம்.
A. Jenil Dhas
Thank you for visiting my blog page. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment