Sermon on Seventh verse on the Cross

 

ஒப்படைப்பு


சிலுவைநாதர் இயேசு கிறிஸ்துவின் திருவாயால் அருளப்பட்ட ஏழாவது திருமொழி ஒப்படைப்பு இதற்கு ஆதாரமான திருமறை வசனம் லூக்கா 23:46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளில் முதலும், நடுவும், இறுதியுமான வார்த்தைகள் பிதாவை மையப்படுத்தி அல்லது பிதாவினிடத்தில் பேசுகிற வார்த்தைகளாய் அமையப் பெற்றிருக்கின்றன. எத்தனையோ எதிர்ப்புகள், தவறான குற்றச்சாட்டுகள், வீண்பழிசுமைகள், எத்தனையோ குறுக்கு விசாரணைகள், கையினாலும், வாரினாலும் அடித்த காயங்கள் அப்போதெல்லாம் அமைதியோடு இருந்தவர் இத்தனை காரியங்களையும் தனக்கு எதிராய் செய்பவர்களுக்காக தன் பிதாவினிடத்தில்  மன்னிப்பை வேண்டினார். இறுதியாக பிதாவை அழைத்து தன் ஆவியை ஒப்புக் கொடுக்கிறார்.

பொதுவாக சிலுவை தண்டனை பெற்றவர்கள் தன்நிலை மறந்து, பதட்டமும், பயமும் நிறைந்தவராய், நிதானமிழந்து தான் சிலுவையில் பேசுவார்கள். முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள் தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த நடைமுறை அனைத்துக்கும் எதிர்மறையாக இயேசுவின் செயல் சிலுவையில் அமைந்திருந்தது. தன் கசப்பான சூழலை நிதானத்தோடும், தன் வாயின் வார்த்தைகளை மிக மிக கவனத்துடனும் பயன்படுத்துகிறார் இயேசுகிறிஸ்து. பொதுவாக மரணத்தருவாயில் இருப்பவர்களின் வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். அவை பல நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் பரிதாப நிலையை தான் வெளிக்காட்டும். அந்த வாக்குமூலங்கள் குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியே பேசப்பட்டிருக்கும். ஆனால் இயேசுவின் இறுதி வார்த்தைகள் உலகிற்கு ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியது. காரணம் இயேசுவின் வார்த்தைகள் தன்னை குற்றம் சாட்டியவர்களுக்கும், பகைவருக்கும் வாழ்வு வழங்கும் வாக்குறுதிகளாய் சிலுவையில் வெளிப்பட்டது. அதிலும் குறிப்பாக இறுதியான ஒப்படைப்பு மானுடத்தின் மீது அவருக்கு இருந்த பொறுப்புணர்வை வெளிக்காட்டுகிறது.

இயேசுவின் ஏழாம் திருமொழியின் சிறப்பினை சிந்திப்போம்:

இந்த வார்த்தை ஒருவகையான இறை வேண்டுதல். இதை தான் சங்கீதம்:31:5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்என்று குறிப்பிடுகிறது. இது யூதர்களின் ஜெபம் மூன்று சூழல்களில் இதை சொல்வார்கள்

            i.     நித்திரைக்கு முன்பு,

           ii.     துன்ப நேரங்களில்,

           iii.     மரண தருவாயில்.

பொதுவாக யூத பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நித்திரைக்குச் சொல்வதற்கு முன்பு இந்த ஜெபத்தை ஏறெடுக்க செய்த பிற்பாடுதான் நித்திரைக்கு அனுமதிப்பார்கள். இதற்கு காரணம் தங்களின் நித்திரை சமயத்தில் தங்கள் ஆத்துமா பிதாவின் கரத்தில் பாதுகாக்கப்பட்டு இருக்கும் என்ற ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

ஒவ்வொரு பஸ்காவின் போதும் பஸ்கா ஆசரிக்க வரும் யூதர்கள் ஆண்டவருக்கு பலி செலுத்துவதற்காக பழுதற்ற ஆட்டுக்குட்டியோடு எருசலேம் தேவாலயம் வருவார்கள். அவர்கள் கொண்டு வருகிற விலங்குகள் பரிசோதிக்கப்பட்டு அது பலி செலுத்தப்படும் நாள் வரையிலும் எருசலேம் தேவாலயத்தின் வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும். அதைப்போலவே இயேசுகிறிஸ்துவும் தான் சிலுவையில் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாய் ஒப்பு கொடுக்கவே, தன் மரண பாடுகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே எருசலேம் தேவாலயத்தை சுற்றி, சுற்றி வருகிறார் உலகத்தில் வந்த நோக்கம் நிறைவேறியது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக் குட்டியாய் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்து, மகிழ்ந்து பிதாவே உன் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று பிதாவை அழைத்து தன் ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவுக்கு வேத வசனங்களை பயன்படுத்தும் பழக்கம் சிறுவயது முதலே இருந்தது. தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் தொடங்கி, வனாந்திரத்தில் தான் சோதிக்கப்படும் போதும், எருசலேமில் பிரசங்கிக்கும் போதும், தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஜனங்களுக்கு போதனை வழங்குகிற போதும், தன் சீடர்களுக்கு அறிவுரை கொடுத்த போதும் பல நிலைகளில் வேதவாக்கியங்களை அடிக்கோல் காண்பித்தே, ஆண்டவரின் செயல்பாடு அமைந்திருந்தன. பழமொழியில் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்லுவார்கள் இயேசுவின் திருமறை வாசிப்பும், இறைவேண்டல் வேண்டுதலும் சிலுவை வரை அவரை பின் தொடர்ந்து வந்தது. கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக இவ்விரண்டையும் சிலுவை மரணத்தில் கூட ஆண்டவர் பின்பற்ற மறந்து போகவில்லை.வேத வசனத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றை இந்த வார்த்தை வெளிக்காட்டுகிறது. தன் சோதனைகள் எல்லாவற்றையும் வேத வசனத்தை கொண்டே எதிர்கொண்டவர் இப்பொழுது அதே வேத வசனத்தை சொல்லி தன் வாழ்வை முடிவுக்கு கொண்டு வருகிறார்.

தான் உலகில் வந்ததற்கான கடமையை சரியாக செய்து முடித்து விட்டேன் என்ற பெருமை தொனி தான் இந்த ஒப்படைப்பின் வார்த்தை. பொதுவாக தங்கள் கடமைகளில் நீதியும், நேர்மையுமாய் நடப்பவர்களால் மட்டுமே எல்லார் முன் நிலைகளிலும் தாங்கள் செய்த காரியத்தை வெளிப்படையாக ஒப்படைக்க முடியும். அதே காரியத்தை இயேசு கல்வாரியில் சிலுவையில் உலகம் அறிய தன் பணியின் நிறைவை பிதாவிடம் ஒப்படைக்கிறார். இது ஒருவகையில் பணி ஓய்வு பெறுவதைப் போன்று தான். எனவேதான் மாற்கு:10:45 மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் என்று காண்கிறோம்.

மரணம் என்பது தெரிந்து நிகழ்வது இல்லை, ஆனால் இயேசுவின் வாழ்வில் இது தெரிந்தே நடைபெற்றது. சிலுவை மரண சரித்திரத்தில் போராடி, துடிதுடித்து, வாயில் வந்ததை பேசி, மாரிப்போரின் மத்தியில், இயேசு அமைதியோடும், சமாதானத்தோடும், நிதானத்தோடும், தன் மரணத்தை எதிர்கொண்டார்.

வார்த்தை மாம்சம் ஆனார்என்பதில் தொடங்கி இந்த நொடி வரையிலும் பிதாவின் சித்தத்திற்கே தன்னை ஒப்புக்கொடுத்தவர், இப்பொழுது தன் ஆவியை ஒப்புக் கொடுக்கிறார். இந்த நாள் நிச்சயமாகவே அவருக்கு மகிழ்வின் நாள், உலகில் நல்ல போராட்டத்தை போராடி, ஓட்டத்தை முடித்து, ஜீவ கிரீடத்தை பெற்ற நாள் அந்த மகிழ்ச்சியோடு தன் ஆவியை பிதாவினிடத்தில் ஒப்படைத்தார்.

தன்னை குறித்ததான அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து தன் ஆவியை ஒப்படைத்தார். இங்கு பிதாவின் கைகளில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்ததின் மூலம் புதிய அத்தியாயத்தை இயேசு கிறிஸ்து ஆரம்பித்ததை இந்த வார்த்தை வெளிப்படுத்துகிறது. இத்தனை பாடுகளிலும் பிதாவே என்று அழைத்து அவருடைய கரத்தில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னால், இது பிதாவின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

ஏழு என்ற எண் யூத மரபில் முழுமையைக் குறிக்கும் அடையாளம், அதைப்போலவே இயேசு கிறிஸ்துவின் ஏழாம் வார்த்தை அவர் இந்த பூவுலகில் வந்ததற்கான நோக்கம் முழுமை பெற்றதை அடையாளப்படுத்தும் வார்த்தையாய் அமையப் பெற்றிருக்கிறது.

உலகில் வாழும் மனிதன் தேவ சாயலை பெற்றவனாய் தேவனால் அருளப்பட்ட ஜீவ சுவாசத்தை உடையவனாக இருக்கிறான். எனவே இவ்வுலகில் வாழும் மனிதனின் உயிர் அவனுடையது அல்ல அது பிதாவினுடையது என்பதை அறிந்தவராய் தன் ஜீவனை அல்லது ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக் கொடுக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 2020-வது ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி நம்முடைய இந்திய தேசத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 381 பேர் தங்கள் இன்னுயிரை தாமாகவே மாய்த்துக் கொள்கின்றனர் (தற்கொலை செய்து கொள்கிறார்). இதில் இளையோர் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மனிதர்கள் தம்மைப் படைத்த கடவுளையும், இந்த உலகில் நாம் வைக்கப்பட்டிருக்கிற நோக்கத்தின் உண்மைத் தன்மையையும் அறிந்து கொண்டார்கள் என்று சொன்னால் இத்தகைய முடிவுக்கு முன் வர மாட்டார்கள். இந்த உயிர் கடவுளுடைய கரத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டியது என்பதை சிலுவையில் இயேசுவானவர் உலகிற்கு காண்பித்து கொடுக்கிறார்.

சிலுவை மொழி நான்காவது வார்த்தையில் தேவனே என்று அழைத்தவர், இந்த ஏழாம் திருமொழியில் பிதாவே என்று உரிமையோடு  அழைத்து  பிதாவோடு கொண்டிருக்கிற நித்திய உறவை சிலுவை வழியாய் உறுதிப்படுத்துகிறார்.

 

ஆ. ஜெனில் தாஸ்

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)