ELOCUTION 2023-PRIMARY நம்பிக்கைக்கு நற்சான்றான சிறுமி (IIஇராஜாக்கள் 5:3)

 நம்பிக்கைக்கு நற்சான்றான சிறுமி (IIஇராஜாக்கள் 5:3)

நம்பிக்கை நாயகராம் இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் சிரித்த முகத்துடன் சிறந்த தீர்வை வழங்க வீற்றிருக்கும் நடுவர் அவர்களே, என்போன்ற போட்டியாளர்களே, சபையோரே, அவையோரே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு நம்பிக்கைக்கு நற்சான்றான சிறுமி என்பதாகும், இதற்கு ஆதாரமான திருமுறைப்பகுதி IIஇராஜாக்கள் 5-ம் அதிகாரம் 3-ம் திருவசனம். இதனை அடிப்படையாக கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துகளை திருமறை பின்னணியத்தோடு பகிர்ந்துக் கொள்ள ஆசிக்கிறேன்.

சீரியா தேசத்து ராஜாவின் படைத்தலைவனாய் இருந்தவர் நாகமான். இவர் அந்த நாட்டின் ராஜாவிடத்திலும், மக்களிடத்திலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். திருமறை இவரை குறித்துச் சொல்லும்போது IIஇராஜாக்கள் 5:1-ல் இவரைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பை கட்டளையிட்டார் என்றும், இவர் மகா பராக்கிரமசாலி என்றும் சான்று பகிர்கிறது. ஆனால், இவரோ குஷ்டரோகம் என்னும் மோசமான தோல் வியாதியால் அவதி கொண்டிருந்தார். அதனால் ஏற்படும் வலியை இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இத்தகைய நிலையில் இருந்த நாகமான் வீட்டில், இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைப்பிடித்து வரப்பட்ட ஒரு சிறுமி நாகமானின் மனைவிக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

அவள் தன்னுடைய எஜமான் ஒவ்வொரு நாளும் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவர் மேல் மனதுருகி, அவர் குணம் பெற வேண்டி ஆவல் கொண்டு, அவருக்கு உதவ முன்வந்தாள். தன்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு தன்னை பிரித்தவர்கள் மீது எந்தவித கோபமோ, எரிச்சலோ கொள்ளாமல் சிறு பருவம் முதலே அவள் கற்று வந்த திருமறை போதனைகளின்படி பிறர் குற்றங்களை மன்னித்து, வேதனையோடு அவதிப்பட்டுக் கொண்டிருந்த நாகமான் சுகம் பெற வேண்டும் என்று மனதார விரும்பினாள். சிறு வயதிலேயே தான் அடிமையாய் மாறுவதற்கு இந்தக் குடும்பம் தான் காரணம் என்று சொல்லி அவர்களை சபிக்காமல், அவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்பி IIஇராஜாக்கள் 5:3-இன் படி என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்று ஆலோசனை வழங்குகிறாள். தான் ஒரு அடிமை என்றோ, வயதில் சிறியவள் என்கிற தயக்கமோ, பயமோ அவளுக்கு சிறிதும் இல்லை. தன் சொந்த தேசமாம் இஸ்ரவேலிலே கடவுளின் நாமத்தால் தீர்க்கதரிசிகள் செய்து வந்த அற்புதங்களைக் கண்டு வளர்ந்தவள், தான் வணங்கும் இஸ்ரவேலின் தேவனால் நாகமானுக்கு விடுதலை வழங்க முடியும் என்கிற ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தாள்.

இன்றைய நவீன உலகில் நம்பிக்கைக்கு நற்சான்றாய் விளங்க அத்தனை வாய்ப்புகளும் அமையப்பெற்றிருந்தும், திருமறை மீது நாட்டம் கொள்ளாமல், திருமுறை காட்டும் நல்வழியில் நடவாமல், அதை அசட்டை செய்து, சிறுபருவம் முதலே Facebook, Instagram, online games மீது ஆவல் கொண்டு இணையதள வலையில் சிக்கி தவிக்கும் கிறிஸ்தவ சிறுவர்கள் அநேகம். ஆனால் நாகமான் வீட்டில் இருந்த சிறு பெண் தனக்கு சாதகமான சூழல் இல்லாத போதிலும், நம்பிக்கைக்கு நற்சான்றாய் விளங்க வாய்ப்பு கிடைத்தபோது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாள். இதன் விளைவாக சிறுமி சொன்னதை நாகமானிடம் அவருடைய மனைவி அறிவித்தாள். தான் வியாதியிலிருந்து குணம் பெற எதையும் செய்யும் மனநிலையில் இருந்த நாகமான் சிறுமியின் ஆலோசனையின்படி இஸ்ரவேல் தேசத்தின் தீர்க்கதரிசியிடத்திற்கு சென்று தன் வியாதியிலிருந்து பரிபூரண விடுதலையை பெற்றுக் கொண்டார். இதன் பிரதிபலனாக தான் இயேசு கிறிஸ்து லூக்கா 4:27-ல் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள். ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று நற்சான்று பகிர்கிறார். எனவே சிறுவர்களாகிய நாமும் சிறு வயது முதலே திருமறை தரும் ஆலோசனைகளை கேட்டு, அதன்படி நடந்து பிறர் வாழ்வில் ஒளியேற்றும் நம்பிக்கையின் தீபங்களாய் மாறுவோம், இறையரசின் பங்காளிகளாகுவோம் என கூறி இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி சொல்லி, என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)