ELOCUTION ADULT- ஒன்றிப்பின் விருந்து (மத்தேயு 8:11, லுக்கா 13:29)
ஒன்றிப்பின் விருந்து (மத்தேயு 8:11, லுக்கா 13:29)

மனுக்குலம்
ஒன்றிப்பின் அனுபவத்தில் வளர தன்னிகரில்லா இன்னுயிரை விருந்தாக்கிய சிலுவைநாதர்
இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் ஒன்றிணைந்த சிந்தைக்கொண்டு நடுநிலை தவறா
தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், ஆன்றோருக்கும், சான்றோருக்கும் என்னைப்
போன்ற போட்டியாளர்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ஒன்றிப்பின் விருந்து” என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதிகள் மத்தேயு 8:11, லூக்கா 13:29. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில்
எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இயேசு
கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் தாங்களே ஆபிரகாமின் சந்ததியார் என்றும்,
வாக்குத்தத்தின் புத்திரர் என்றும், பரலோக ராஜ்ஜியத்திற்கு சுதந்தரவாளிகள் என்றும்
தங்கள் இருதயங்களில் பெருமைக் கொண்டு இருந்தனர். “இரட்சிப்பு” என்பது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரியது, அதில் புறஇனத்தவருக்கு
பங்கில்லை என்னும் ஆணவ சிந்தை அவர்களிடம் மிகுதியாக இருந்தது. இரட்சிப்பு யூதருக்கே உரியது என்று வேதபாரகரும்,
பரிசேயரும் அவர்களுக்கு இதுவரையிலும் உபதேசம் பண்ணியிருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ மத்தேயு 8:11-இல்
அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து,
பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்
என்பதின் மூலம் இதுவரையிலும் யூதர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அவமாக்குகிறார். பரலோக ராஜ்ஜியம் என்பது குறிப்பிட்ட ஒரு
பிரிவினருக்கோ இனத்தவர்களுக்கோ ராஜ்ஜியங்களுக்கோ உரியது அல்ல அது மொழி இனம் பேதம்
கடந்து எத்தேசத்தாருக்கும் உரியது என்னும் தெளிவினை ஏற்படுத்துகிறார்.
“மூத்தோர் சொல்லும்
முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்,
பின்னர் இனிக்கும்” என்பது போல் இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகள் யூதர்களுக்கு கசப்பாகவே இருந்தது. இதுவரையிலும் தங்களுக்கே உரியது
என்றிருந்த ஒன்றை மற்றவர்களோடு ஒன்றிப்பின் விருந்தாய் கொள்வது யூதர்களுக்கு கடினமாய்
இருந்தது. கடவுளை தொழுதுக் கொள்ள தாங்கள்
மட்டுமே எல்லா நிலைகளிலும் தகுதியுடையவர்கள், அவரோடு பந்தி அமர தாங்களே பாக்கியம்
படைத்தவர்கள் என்கிற குறுகிய சிந்தைக் கொண்டிருந்த யூதர்களால் இயேசுவின்
ஒன்றிணைக்கும் ஒன்றிப்பின் விருந்தை அதாவது இயேசு கிறிஸ்துவின் நல்ஆலோசனைகளை மனதார
ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இஸ்ரவேலரின்
வரலாற்றில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் யூதர்களின் பிரதிநிதிகளும், அரசர்களும்,
தலைவர்களுமே இருந்து வந்தனர்.
ஆனால் மத்தேயு 8:10-இல்
இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை
காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பதன் மூலம் இயேசு
கிறிஸ்து புறஇனத்தவரான, அதுவும் யூதரல்லாத ஒருவரை, யூதர்களின் வெறுப்பிற்கு காரணமான ரோமப் படையை சார்ந்த
நூற்றுக்கு அதிபதியை விசுவாசத்திற்கு மாதிரியாய் காண்பிக்கிறார். இது
“விசுவாசத்தின் தந்தை” என்றழைக்கப்பட்ட ஆபிரகாமின் சந்ததிகளான
யூதர்களுக்கு கசப்பாகவே இருந்தது என்பதை நிதர்சனம்.
நூற்றுக்கு
அதிபதி என்பது ரோமப் பேரரசின் சேனையில் பணிபுரியும் ராணுவ அதிகாரியின் பதவியாகும். இவருக்கு கீழ் நூறு போர் வீரர்கள் பணி
புரிவார்கள். இவர் ஒரு ரோமன், அதாவது யூதர்களை
பொருத்தவரை புறஜாதியான்.
பொதுவாகவே ரோமப்
பேரரசின் போர் வீரர்கள் கடவுளிடத்தில் பக்தியாய் இருப்பதில்லை அதே சமயம்
ஜனங்களிடத்திலும் அன்பாக இருப்பதில்லை. பெரும்பாலும் முரட்டுத்தனமாகவே நடந்து
கொள்வார்கள். அதிலும் குறிப்பாக நூற்றுக்கு
அதிபதி என்பவர்கள் யூதர்களை அடக்கி ஆள்பவர்கள். எனவே யூதர்கள் இவர்களை வெறுத்தார்கள். இயேசு கிறிஸ்துவோ யூதருக்கு அரசனாக இருந்த போதிலும்,
நூற்றுக்கு அதிபதியினிடத்தில் அன்புடனும், கரிசனையுடனும் நடந்து கொள்கிறார். அவரை சிநேகிதனைப் போல நேசிக்கிறார். இதற்கு காரணம் நூற்றுக்கு அதிபதியிடம்
காணப்பட்ட நற்குணமே.
பொதுவாகவே ரோம
வீரர்களிடம் அன்பையும், பரிவையும் எதிர்பார்க்க முடியாது என்கிற சிந்தை கொண்டிருந்த
அக்கால சமூகத்தில் தன் வேலைக்காரனுடைய நலனுக்காக இயேசு கிறிஸ்துவிடம் கெஞ்சிய
நூற்றுக்கு அதிபதியின் வாழ்வு மாதிரியாய் காண்பிப்பதற்கு தகுதி உடையதே. நூற்றுக்கு
அதிபதி இயேசுவை கண்ட மாத்திரத்தில் “ஆண்டவரே” என்று மத்தேயு
8:6-இல் அழைக்கிறார். ரோம வீரர்கள் ரோமப்பேரரசர்களை தான்
ஆண்டவரை என் அழைப்பார்கள்.
ஆனால் இவரோ இயேசுவை ராஜாவாக
காண்கிறார். இயேசு தன் வீட்டிற்கு வர தான்
தகுதியற்றவன் என சிந்தை கொண்டு,
மத்தேயு 8:8-இல் ஆண்டவரே!
நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம்
சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்பதின் மூலம் மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து
புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்கிற இயேசு
கிறிஸ்துவின் திருவார்த்தைகளுக்கு மாதிரியாய் மாறுகிறார். இது அவருக்கு நித்திய ராஜ்யத்தின் ஆனந்தத்தை பெற்று தந்தது. இயேசு கிறிஸ்து யூதருக்கு மட்டும் அரசர்
அல்ல அகிலத்திற்கும் அரசர் என்பதை நூற்றுக்கு அதிபதியின் செயல்கள் உணர்த்துகிறது. இவரே இங்கு ஒன்றிப்பின் விருந்திருக்கு
காரணியாய் மாறுகிறார்.
இன்றைய
உலகில் வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர் தான் மட்டுமே எல்லா தகுதியையும் கொண்டிருக்கிறேன்,
என் குடும்பம் தான் சிறந்தது உயர்ந்தது என்கிற சிந்தை கொண்டு பிறரோடு ஒன்றித்து
வாழ்வதின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். பிறரை நம்மை விட தாழ்ந்தவராக எண்ணுவது, நாம் வாழ்ந்து வரும்
சமுதாயத்தில் நம் தகுதியை தாழ்த்தி விடுகிறது. அதேசமயம் ஒருவரை இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என அடையாளப்படுத்துவது இவ்வுலகில் ஒன்றிப்பின் அடையாளமாக பிறந்த இயேசு
கிறிஸ்துவை புறம்பே தள்ளுவதை போன்றது. இயேசு
கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது சமுதாயத்தில் வாழ தகுதியற்றவர்கள் என முத்திரையிடப்பட்டு
வனாந்தரத்திற்கு துரத்தி விடப்பட்டிருந்த குஷ்டரோகிகள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,
சமூக கட்டமைப்பின் கடைநிலையில் இருந்தோரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பாவிகள் என்றழைக்கப்பட்டவர்களோடு பந்தி
அமர்ந்தார். ஊதாரிகள் என்றழைக்கப்பட்ட
கூட்டத்தோடு ஊழியம் கொள்ள ஊர் ஊராக சுற்றித்திரிந்தார். அத்தகைய கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களாகிய நாம் ஒன்றித்த
வாழ்விற்கு அடையாளமாய் மாறுவோம், கிறிஸ்துவின் ஒன்றிப்பின் விருந்தில் பங்கு
பெறுவோம் எனக் கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment