POST SUPER SENIOR- வாழ்வெனும் கனி தரும் மரம் (நீதிமொழிகள் 3:18)

 வாழ்வெனும் கனி தரும் மரம் (நீதிமொழிகள் 3:18)

எல்லா ஞானத்திற்கும் ஊற்றாகவும் ஊற்றின் கண்ணாகவும் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் இறைஞானத்தால் கனிகளை அறிந்து நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு வாழ்வெனும் கனிதரும் மரம் என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி நீதிமொழிகள் 3:18. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை துணைக் கொண்டு பேச விளைகிறேன்.

இறைஞானம் பெற்று, இன்றளவும் இவ்வையகம் போற்றும் மாபெரும் செயல்களை செய்தவர் தான் சாலொமோன் ஞானி. அவரைப் போன்றவர் இதற்கு முன்பும் இல்லை, இனி வரப்போவதுமில்லை என்று கடவுளால் சான்று பகிரப்பட்டவரும் இவரே. சாலொமோனின் ஞானத்தை குறித்து வியந்து, அதின் சிறப்பை அறிந்துக் கொள்ள கடல் கடந்து அவரை தேடி வந்தவர்களின் வரலாற்று சரித்திரத்தையும் திருமறை குறிப்பிட தவறவில்லை. இத்தகைய சிறப்புமிக்க சாலொமோன் ஞானி நீதிமொழிகள் 3:18-இல் ஞானமும் புத்தியும் தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம் என்பதின் மூலம் ஞானமேவாழ்வெனும் கனி தரும் மரம் என உரக்க உரைக்கிறார். எதை சம்பாதிக்காவிட்டாலும் ஞானத்தை சம்பாதிக்க சொன்ன இவரே ஞாலம் போற்றும் ஞானி என போற்றப்படுகிறார். ஆனால் சாலொமோனோ இந்த ஞானம் என்னுடையது அல்ல இது கடவுளின் ஈவு என்பதை தாழ்மையோடு வெளிப்படுத்தவும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தவறவில்லை. எனவேதான் தான் பெற்றுக்கொண்ட இறைஞானத்தை தன் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து ஜனங்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி தான் இயற்றிய நீதிமொழிகளில் ஞானத்தை அடைவதற்கான வழிகளை அறிவுரையாய் வழங்குகிறார். ஞானத்தை தேடுவதும், அதைப் பற்றிக் கொள்வதுமே பாக்கியம் என்றுரைக்கிறார்.

பழைய ஏற்பாட்டின் காலம் தொடங்கி, புதிய ஏற்பாட்டின் காலத்தை கடந்து, நவீன யுகமாகிய இந்த 21-ஆம் நூற்றாண்டையும் தாண்டி இன்னும் மக்கள் மத்தியில் நிலவுகிற தேடல்களில் ஒன்று ஞானத்தை பற்றிய தேடல். அதேசமயம் மனிதன் பாவத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கும் தன்னுடைய வாழ்வின் இலக்கணத்தை பிழையின்றி அமைத்துக் கொள்வதற்கும் அவன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை தெளிவுப்படுத்துவதற்கும் கர்த்தர் கொடுத்த கோட்பாடுகள் தான் திருமறை என்கிற ஞான பொக்கிஷம், அதுவே ஞானத்தை கண்டடைவதற்கான வழி என்பதை அறிந்துக் கொள்ள பல தருணங்களில் மறந்து விடுகிறது மனுக்குலம். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பதின் மூலம் சாலொமோன் கடவுளிடமே ஞானம் இருக்கிறது என்னும் தெளிவை தருகிற போதிலும் இன்றைய நவீன உலக மக்கள் அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் அநேகர் உலகம் காட்டும் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டு இருப்பது வேதனையை தருகிறது. மதுபானம், வேசித்தனம், விபச்சாரம், இணையதள சூதாட்டங்கள், வீண் பெருமை, கபட வாழ்வு போன்ற அறியாமைக்கு அடிமைப்பட்டு வாழ்வை இழந்து தவிக்கிறார்கள்.

கடவுள் நமக்கு நன்மை, தீமை அறிந்துக் கொள்ளும் நல்புத்தியை தந்திருந்தும், அதை ஞானமாய் பயன்படுத்த தவறிவிடுகிறோம். சாலொமோன் ஞானியின் ஞானம் அவர் அரசாண்டு மக்களுக்கு மகிழ்வின் வாழ்வை குறைவின்றி வழங்கியது. அவரது ஞானத்தால் நாடு செழித்தது, ராஜ்ஜியம் விரிவடைந்தது, குடும்பங்கள் மகிழ்ச்சியால் தளைத்தன, எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் நாமம் பாரொங்கும் போற்றப்பட்டது. அந்நிய நாட்டு ராஜஸ்திரீ சாலொமோனின் கடவுளை புகழ அவரது ஞானம் வழி வகுத்தது.‌ எனவேதான் சாலொமோன் அரசரின் ஆட்சிக் காலம் இஸ்ரயேல் வரலாற்றின் பொற்காலம் என புகழப்படுகிறது. ஞானமடைந்தோர் தன்னை மட்டுமல்ல தன்னைப் போன்று பிறரையும் நேசிப்பார்கள், தான் மட்டுமல்ல பிறரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என விரும்புவார்கள். ஞானமுடையோரால் குடும்பங்கள் மகிழும் என்பதை தான் சாலொமோன் ஞானியின் வாழ்வும், அவர் இயற்றிய நீதிமொழிகளும் நமக்கு கற்றுத் தரும் வாழ்வியல் பாடம்.

நீதிமொழிகள் 3:15-இல் முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல என்கிறார் சாலொமோன். மேலும் நீதிமொழிகள் 3:17-இல் அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம் என்பதன் மூலம் அதைத் தேடி அடைந்தோரின் பிரதிபலனையும் சிறப்புற எடுத்துரைக்கிறார். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களாகிய நாம் அநேக நேரங்களில் சமாதான குலைச்சலுக்கு காரணிகளாய் இருந்து வருகிறோம். பிறருக்கு மன்னிப்பு வழங்க மனதில்லாதவர்களாகவும், பிறருடையதை அடைவதற்கு எத்தனிப்பவர்களாகவும், பிறரை குறித்து அவதூறு பரப்புகிறவர்களாகவும், வீண்பழி சுமத்துபவர்களாகவும், கடவுளின் ராஜ்ஜியமாம் திருச்சபையில் பதவிக்கும், தற்பெருமைக்கும் பயன்படுத்துகிறவர்களாகவும், ஊழியங்களுக்கும், ஊழியர்களுக்கும் தடையாகவும் இருந்து வருகிறோம். நீதிமொழிகள் 21:30-இல் கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை என்னும் திருமறைக் கூற்றை இருதயத்தில் பதித்து, இவையெல்லாம் ஞானமுடையோரின் நற்குணங்கள் அல்ல என்னும் சிந்தைக் கொண்டு, திருமறையை நாடி, அது காட்டும் வழியில் நடந்து, இறைஞானத்தைக் கண்டடைவோம், பிறர் வாழ்வின் தீபங்களாகவும், உலகிற்கு சமாதானத்தை கொடுக்க வந்த கிறிஸ்துவின் சீடர்களாகவும் மாறுவோம் எனக் கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.

 

 A. JENIL DHAS

Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)