ELOCUTION-SENIOR மன்னித்து மறக்கும் அன்பு (நீதிமொழிகள் 10:12)
மன்னித்து மறக்கும் அன்பு (நீதிமொழிகள் 10:12)

மன்னிக்க
தயை பொருந்தியவரும், அன்பின் மகுடமுமான
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை மாறாது
நல்ல தீர்ப்பு வழங்க அமர்ந்திருக்கும் நடுவர்களுக்கும், என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு பேசும்படியாக
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “மன்னித்து மறக்கும் அன்பு” என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி நீதிமொழிகள் 10:12. இதனை அடிப்படையாகக் கொண்டு என்
சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச விளைகிறேன்.
மனித
பண்புகளை ஆராய்பவர்கள், “பகை” என்பது மனித மனங்களின்
ஆழத்தில் பதுங்கி இருக்கிறது, அது மனித சுபாவத்திலே ஊறி இருக்கிறது என குறிப்பிடுகிறார்கள். திருமறையும் அதற்கு சான்றளிக்கும்
விதத்தில் நீதிமொழிகள் 10:12-இல் பகை
விரோதங்களை எழுப்பும் என்பதுடன் அதன் பிறப்பிடமாய் மனுக்குலம்
விளங்குகிறது என்பதையும் நீதிமொழிகள் 15:18-இல் கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான் என்று உரைக்கிறது. பகையினால்
வரும் மோதல்கள் இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளை கொண்டு வருகிறது. இந்தப் பகை பழி வாங்கும் எண்ணத்தை
தூண்டிவிட்டு, ஒருவரைவொருவர்
இகழ்ந்து பேச வைக்கிறதே அல்லாமல் அவர்களை ஒன்று சேர்க்காது. அதேசமயம் இதற்கான தீர்வும் மனக்குலத்திடமே இருக்கிறது அதுதான் “அன்பு” என்பதை, பார் போற்றும் ஞானியான சாலமோன் அன்போ சகல பாவங்களையும் மூடும் என்கிறார். இந்த அன்பு தேவனாலே அருளப்படுகிறது, அந்த தேவன்பு எல்லா தவறுகளையும் மூடுகிறது, மறைக்கிறது, மறக்கிறது,
மன்னிக்கிறது. அன்பு என்பது ஊற்று போல் தானாக வெளிப்படும் அற்புதமான ஓர் உணர்வு. இவ்வுலகில்
எல்லாம் மதங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன. இறைவன் அன்பாய் இருக்கிறார் என்பதே எல்லா மதங்களின் மனங்களாய் அமைகிறது.
எனவே தான் வள்ளுவர்
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்
பூசல் தரும்
என வினவுகிறார்.
இத்தகைய அன்புடையவர்களே பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவர்கள். இவர்களே சான்றாண்மை உடையவர்களாய்
விளங்குவர். திருமறை குறிப்பிடும் அன்பு
என்பது சுயநலமில்லாதது, எனவே தான் உன்னைப் போல் பிறரையும் நேசி என்கிறது. இத்தகைய அன்பின் இயல்பு படைத்தவர்கள்
தமக்காக வாழாமல், பிறருக்காக வாழ்பவர்கள், இத்தகையோரிடமே
பொதுநலம் மிகுதியாய் காணப்படும்.
அதேசமயம் பிறர் நலம்
மீது கரிசனை இல்லாத சுயநலவாதிகள், தாம் பார்க்கும் அனைத்தும் “தமக்கு மட்டுமே” என கொள்வர்.
அன்பின் இயல்பினை
குறித்து 1கொரிந்தியர் 13:4-7-இல் அன்பு நீடிய சாந்தமும்
தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச்
செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில்
சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும், சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்பன போன்ற நெடுநீண்ட பட்டியலை
தருகிறது. இத்தகைய இயல்பினை கொண்டவர்களே
அன்புடையோர் என சான்றோரும் குறிப்பிடுகிறார்கள்.
நாம்
வாழ்ந்து வரும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் பிறர் மீது கரிசனை
இல்லாத சுயநல சிந்தனை கொண்ட மனிதர்களையே பெரும்பாலும் காண முடிகிறது. நான், எனது, என்னுடையவைகள் என்பனபோன்ற
குறுகிய சிந்தை மேலோங்கி நிற்கிற இன்றைய சமுதாயம் எதிர்கால தலைமுறையினருக்கு
மிகப்பெரிய ஆபத்து என்பதே நிதர்சனம். மதம்,
மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைய சமூகம் பிரிந்து நிற்பது வேதனையின்
உச்சம். அன்பு பாராட்டும் உள்ளங்கள் குறைந்து,
பகையை வளர்க்கும் ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகுகிறார்கள். ஆண்டுக்கணத்தில்
பிறரோடு பகைமையை வளர்த்து, பழிக்கு பழி என பல ஆண்டுகள்
கழித்து பழிதீர்க்கும் செய்திகளும் அன்றாட செய்தித்தாள்களில் தவறாது இடம்பிடித்து
வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்,
கொலை, கொள்ளை இவையெல்லாம் அன்பு இல்லாதோரின் பெருக்கத்தையே வெளிக்காட்டுகிறது. எனவே மன்னிப்பின் மகுடமாம் இயேசு
கிறிஸ்துவை பின்பற்றும் நாம் அவர் உலகிற்கு அருளிய மன்னிப்பை, பிறருக்கு தாராளமாய்
வழங்குவோம். ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாகுவோம் எனக் கூறி உரைக்கு திரையிடுகிறேன்.
ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment