ELOCUTION POST ADULT- நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி (நீதிமொழிகள் 4:18)
நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி (நீதிமொழிகள் 4:18)

இருளில்
வாழும் ஜனங்களுக்கு பேரொளியாய் இவ்வையகத்தில் அவதரித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின்
இனிய நல்நாமத்தில் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கும்
நடுவர்களுக்கும் என்னை போன்ற போட்டியாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும்
என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள
தலைப்பு “நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி” என்பதாகும்.
இதற்கு ஆதாரமான
திருமறை பகுதி நீதிமொழிகள் 4:18. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“நீதிமான்” என்னும் சொல்லுக்கு தமிழ் அகராதி கொடுக்கும்
விளக்கம் நீதியும், நேர்மையும் உடையவர் என்பது. அத்தகைய நேர்மையாளரின் பாதை
நீதிமொழிகள் 4:18-இன் படி நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற
சூரியப்பிரகாசம்போலிருக்கும்
என்கிறது திருமறை. ஒளிவு, மறைவில்லாத நேர்மையாளரின் வாழ்வை
குறிப்பிடுகிறது இத்திருவசனம். கறை என்னும் இருளில்லா தூய வாழ்வின் பிரதிபலிப்பாகவே
இவ்வொளி அமையப் பெற்றிருக்கிறது. சூரிய வெளிச்சம் எழுகிற வைகறை பொழுதில் இருள்
அகன்று,
வெளிச்சம் தோன்றும், அது இருளில் மறைந்திருக்கும் அத்தனை பொருட்களின் உண்மை சாயலை
வெளிக்கொண்டுவரும். வெளிச்சம், உள்ளதை உள்ளதென்றும்,
இல்லதை இல்லதென்றும் விளங்க செய்வதை போன்று நீதிமானின் வாழ்வும் நீதிக்கு துணை போவதாய்,
பிறருக்கு நன்மை வகைப்பதாய், நேர்மையின் வழி தோன்றலாய் இருக்கும். குறுக்கு
சிந்தனையும், குறுகிய
மனநிலையும் நீதிமானிடத்தில் காணப்படுவதில்லை. சங்கீதம் 34:19-இல் நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர்
அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் என்பதின் மூலம் நேர்மையான
வாழ்வுக்கு கிடைக்கும் வெகுமதியை குறிப்பிடுகிறது. நீதிமானுக்கு வரும் துன்பம் அதிகமாயிருந்தாலும்
அதை நேர்மையான வழியில் கையாளும் தன்மையும் நீதிமானிடத்தில் காணப்படும். இத்தகைய
நேர்மையின் வழியில் நடக்கும் நீதிமான் நீதிமொழிகள் 24:16-இன் படி ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான். நேர்மையானவர்களால்
பிறர் வாழ்வடைவார்கள், சமுதாயமும் சீர் பொருந்தும். அதேசமயம்
அநீதி செய்பவர்களால் துன்பம் பெருகும், அமைதி குலைச்சல் ஏற்படும், அத்தகையோரால்
நல்லோர் தீமை அனுபவிப்பார்கள். துன்மார்க்கரின் வாழ்வு தன்னையும் கெடுத்து,
பிறருக்கும் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது. ஆனால் நேர்மையாளரின் வாழ்வோ, கப்பல்கள்
கரை சேர உதவும் கலங்கரை விளக்கம் போன்றது, அது பிறரை கரை சேர்க்க உதவும்.
திருமறை
வரலாற்றில் நீதியும், நேர்மையுமாய் நடந்தவர்கள் சோதிக்கப்பட்டாலும் ஒருபோதும்
கடவுளால் கைவிடப்படவில்லை. கடவுளின் உடனிருத்தல் எல்லா தருணங்களிலும்
நேர்மையாளருக்கு கிடைக்கப் பெற்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு,
தானியேல், யோபு போன்றோர் சோதிக்கப்பட்டாலும் கடவுளின் உடனிருத்தலை கொண்டிருந்தனர். எனவே
தான் இயேசு கிறிஸ்து நேர்மையாளரின் வாழ்வை குறித்து சொல்லும் போது, சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை
விடுதலையாக்கும் என்கிறார். இஸ்ரவேல்
மக்கள் பாபிலோன் தேசத்தில் அடிமைகளாய் இருந்தபோது, உடலளவிலும் மனதளவிலும் துன்பம் அனுபவித்தார்கள்.
தங்கள் தவறுகளை உணர்ந்து கடவுளின் சமூகத்தை நாடி, தேடிய போது வாக்குத்தத்தின்
கடவுள் எசாயா 58:8-இல் அப்பொழுது விடியற்கால
வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன்
நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் என்று சொல்லி தம்மிடம் திரும்பியோரை
ஆற்றித்தேற்றுகிறார். தவறுகளை விட்டு உண்மையாய் மனம் திரும்பி,
நேர்மையின் வழியில் நடப்போருக்கு எப்பொழுதும், எவ்விடத்திலும் கடவுளின் சகாயம்
கிடைக்கும் என்பதை தான் சங்கீதக்காரர் சங்கீதம் 92:12-இல் நீதிமான் பனையைப் போல் செழித்து,
லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் என்று நீதிமானுக்கு கிடைக்கும்
நேர்மைக்கான பிரதிபலனை குறிப்பிடுகிறார்.
தற்கால
உலகில் வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர் நேர்மையாய் வாழ வாய்ப்புகள் அநேகம்
இருந்தும் shortcuts என்கிற
குறுக்குப் பாதையை தான் தேர்வு செய்கிறார்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் காசு,
பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்காக எதையும் செய்யவும் மனிதர்கள் தயங்குவதில்லை. பண ஆசை
எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்கிற திருமறை வசனத்தை அறிந்த பிறகும்,
குறுக்கு வழியை நாடி தேடுவோர் அநேகர். அதிலும்
குறிப்பாக கிறிஸ்தவர்கள் பலர், கடவுள் தங்களுக்கு கொடுத்திருக்கும் நல்ல பதவிகளுக்கும்,
தொழில்களுக்கும் நன்றி சொல்லாமல் அதை தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் தவறான ஊடகமாய்
பயன்படுத்திக் கொள்கிறார்கள். லஞ்சம் வாங்குதல், பிறருடையதை அபகரித்தல், சகோதர,
சகோதரிகளின் சொத்துரிமைகளை கொள்ளை பொருளாகுதல், வஞ்சகம், வக்கிரம் போன்றவற்றை
வெளிப்படுத்தும் கிறிஸ்தவர்களும் இன்றைய சமூகத்தில் அதிகம் தான். திருமறை
போதிக்கும் வழியில் நடவாமல், இறுதியில் தங்கள் சந்ததிகளுக்கு சாபத்தை விளைவிக்கும்
கிறிஸ்தவ பெற்றோரும் பெருகி வருகிறார்கள் என்பது வேதனையின் உச்சம். திருமறை
போதிக்கும் நீதியின் வாழ்வு என்பது பிறருக்கு சமாதானத்தை அருளும் வாழ்வு, அது
தன்னை கரைத்து பிறருக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியின் தன்மை போன்றது. நானே வழியும், சத்தியமும், ஜீவனும், உலகிற்கு ஒளியுமாய் இருக்கிறேன் என்றுரைத்த இயேசு கிறிஸ்துவை
பின்பற்றும் நாம் குறுகிய சிந்தனைகளை உதறித் தள்ளி, நேர்மையின் வாழ்வைப் பெற்று,
தன்னலமில்லா வாழ்வை வெளிப்படுத்துவோம். பிறரை வாழ்வின் கரை சேர்க்கும்
கலங்கரை விளக்காகவும், வெளிச்சம் கொடுக்கும் வைகறை ஒளியாகவும் செயல்படுவோம்
எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment