ELOCUTION-SUPER SENIOR ஒருமனம் என்னும் நறுமணம் (பிலிப்பியர் 2:2, சங்கீதம் 133 1:2)
ஒருமனம் என்னும் நறுமணம் (பிலிப்பியர் 2:2, சங்கீதம் 133 1:2)

ஒருமனம் பாரில் பெருக ஒப்பில்லா தன்னுயிரை ஈந்த சிலுவைநாதர் இயேசு
கிறிஸ்துவின் ஈடு இணையற்ற
இனிய நல்நாமத்தில், ஒரே சிந்தைக் கொண்டு நடுநிலைத் தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும்,
என்னை போன்ற போட்டியாளர்களுக்கும், சபையோருக்கும், அவையோருக்கும் என் அன்பின்
வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ஒருமனம் என்னும்
நறுமணம்” என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதிகள் பிலிப்பியர்
2:2, மற்றும் சங்கீதம் 133:1,2 ஆகும். இதனை
அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை பின்னணியத்தோடு
பேச ஆசிக்கிறேன்.
தூய பவுலார் தனது இரண்டாவது மிஷெனரி பயணத்தின் போது, மக்கதோனியா மாகாணத்தின் முக்கிய நகரமான பிலிப்பியில் ஒரு
தேவாலயத்தை நிறுவினார். அதுவே பிலிப்பி திருச்சபை என்றழைக்கப்படுகிறது. இயல்பாக, பவுல் தான் நிறுவிய திருச்சபைகளோடு தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தும்
யுக்திகளில் ஒன்று “கடிதப் பரிமாற்றம்.” அந்த வரிசையில் பிலிப்பியர் நிருபம்
பவுலின் கடிதங்களில் ஒன்றாகும். இந்த நிருபம் “சிறைப்பிடிப்பு கடிதம்”, பவுலின் மகிழ்ச்சிக் கடிதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கடிதம்
பிலிப்பி திருச்சபை மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும், அந்த திருச்சபை கொண்டிருந்த மாற்றுருவாக்கத்தின் பண்பு
நிலைகளையும் தெளிவுர எடுத்துரைக்கிறது. பிலிப்பி திருச்சபை ஐரோப்பிய கண்டத்தில்
நிறுவப்பட்ட முதல் தேவாலயமாகும். பவுல் நிறுவிய திருச்சபைகளில் பிலிப்பி சபையார், அவரின் கடின
சமயங்களில் ஆறுதலாகவும், ஆதரவாகவும்
இருந்தனர். இந்த பிலிப்பி திருச்சபை என்னும் கூட்டமைப்பு மன, உடல், பொருளாதார
ரீதியில் பவுலுக்கு பெரும் ஊக்கமாக இருந்துவந்தது. சமய, சமூக சிக்கல்கள் திருச்சபைகளில் பிரச்சனைகளாய்
உருவெடுப்பதையும், இவைகளை
பிரச்சனைகளாய் உருமாற்றுபவர்களுக்கும் எச்சரிக்கையாய் இருக்கும்படி பிலிப்பியர்களை
தூய பவுலார் எச்சரிக்கிறார். அதேசமயம்
கிறிஸ்துவை மையமாய் கொண்டிருந்த பிலிப்பி திருச்சபையில் யூதமயமாக்கும் போக்கைக்
கொண்டிருந்த பிலிப்பியர்களையும் கடிந்துக் கொள்கிறார்.
சமய, சமூக காரியங்கள் பிலிப்பு திருச்சபை விசுவாசிகளை
பிரிவினைக்கு நேராக வழி நடத்துவதை அறிந்த பவுல், கிறிஸ்துவின்
அன்பை குறித்து அவர்களுக்கு கடிதத்தின் வழியாக நினைவுப்படுத்துகிறார்.
கிறிஸ்துவுக்குள் நாம் சகோதர, சகோதரிகள்
எனவே நமக்குள் ஒருமனம் தேவை, அதுவே மானுட
வாழ்வை நறுமணமாக்கும் என்னும் கருத்தை ஆழமாக பதிவு செய்கிறார். இதனை தான் பிலிப்பியர் 2:2-இல் நீங்கள்
ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே
சிந்தித்து, என்
சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்பதின் மூலம் ஆலோசனையாய் வழங்குகிறார். கருத்து
வேறுபாடுகளும், சமுதாயப்
பிரிவுகளும், பொருளாதார
ஏற்ற, தாழ்வுகளும்
பிலிப்பி திருச்சபை மக்களின் ஒன்றிணைந்த வாழ்வை சீர்குலைத்து விடக்கூடாது என்பதில்
மிக கவனம் செலுத்துகிறார் தூய பவுல். கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்ட திருச்சபை
சீர்குலைந்து போவதை பவுல் விரும்பவில்லை. எனவே ஒருமனதின் முக்கியத்துவத்தை
நிதானத்தோடு எடுத்துரைக்கிறார். கிறிஸ்து பாராட்டின அன்பை பிறருக்கு கொடுக்க
வேண்டும், அதன் மூலம்
மகிழ்ச்சி பெருகும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இந்த ஆலோசனை கடிதம் அன்றைய
பிலிப்பித் திருச்சபை மக்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.
சங்கீதக்காரனாகிய தாவீதும் கூட 133-வது சங்கீதத்தில் சகோதரர்கள்
ஒருமித்து வாழ்வதின் மேன்மை நன்மையும், இன்பமுமானது
என உரைக்கிறார். இந்த ஒன்றிப்பின் வாழ்வே கடவுளின் ஆசீர்வாதத்திற்கு அழைத்துச்
செல்லும் என்பதையும் விவரிக்கிறார். ஒருமனம் என்பது கடவுளின் அருட்கொடை என்பதை யோவான் 17:22-இல் நாம்
ஒன்றாயிருக்கிறதுபோல: அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை
நான் அவர்களுக்குக் கொடுத்தேன் என்பதின் வாயிலாக யோவான் நற்செய்தியாளரும்
குறிப்பிடுகிறார். இதனை தான் பக்தன் ஒருவர் தன் பாடல் வரிகளில்:
விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்…
என கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த
திருச்சபையில் ஒருமைப்பாட்டின் அவசியத்தை விளக்குகிறார்.
ஆனால் தற்கால திருச்சபைகள் பல கிறிஸ்துவின் அன்பில் மையம்
கொள்ளாமல், ஒருமன
சிந்தையற்றவர்களாய், தற்பெயருக்கும், பதவி மோகத்திற்கும் அடிமைப்பட்டிருப்பது வேதனை தருவதாய்
அமைகிறது. ஆலயங்களின் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்து கொண்டிருக்கின்றன, அதேசமயம் ஆலயத்தில் ஆராதிப்பவர்களின் நல்மனம் குறைந்து
கொண்டிருக்கிறது என்பதும் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றே. கிறிஸ்தவ பெற்றோர்
அநேகர் தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பையும், திருச்சபையின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுக்க
தவறிவிடுகிறார்கள். ஒழுங்காகவும், ஒழுக்கத்துடனும்
ஆலயம் செல்வத்தையும், ஆலய ஆராதனை
நேரத்தில் பிள்ளைகள் ஆலயத்தின் உள்ளே இருக்கிறார்களா? இல்லையா? என்பதை கூட
கவனிக்க பல சமயங்களில் தவறிவிடுகிறார்கள். திருச்சபை என்பது மானுட வாழ்வை
சீர்படுத்தவும், தவறிலிருந்து
திருத்தப்படவுமே என்பதை இக்கால சிறார்கள் உணர்ந்து நடக்க பெரியவர்கள் உதவி புரிய
வேண்டும். பலவகை சமூக, சமய
கட்டமைப்புகளோடு இருந்த பிலிப்பி பட்டண மக்கள், பவுலின் வழியாக கிறிஸ்துவின் நற்செய்தி பறைசாற்றப் பட்டபோது, அதை
மாற்றுருவாக்கத்திற்கான அடித்தளமாய் ஏற்றுக் கொண்டதைப் போன்று, நாமும் நம்முடைய வாழ்வில் மாற்றுருவாக்கத்திற்கான வாய்ப்பை
திருமறை வழி அமைத்துக் கொள்வோம். கிறிஸ்துவின் அவயவங்களாய் இருப்பதே திருச்சபை, அந்த திருச்சபையில் நம்முடைய பங்களிப்பை கிறிஸ்துவை மையமாக
கொண்ட வாழ்வால் அலங்கரிப்போம்! திருச்சபை வாழ்வில் நறுமணம் வீசுவோம்! என கூறி என்
உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.
Comments
Post a Comment