ELOCUTION TEACHER- கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் (1யோவான் 2:6)

 கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் (1யோவான் 2:6)

நிலைவாழ்விற்கு மாதிரியாகவும், கிறிஸ்துவுடன் ஒன்றித்து வாழ்வதற்கு சான்றாளர்களாகவும் சிறார்களை முன்னிலைப்படுத்திய இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், இறையரசுக்குரியவராய் சிறார்களை பக்குவப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்களும், வணக்கங்களும். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி 1யோவான் 2:6. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச ஆசிக்கிறேன்.

அப்போஸ்தலராகிய யோவான் தன்னுடைய முதலாம் நிரூபத்தில் கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோரை குறித்தும், கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்வதற்கான ஆயத்தங்களையும் அதன் ஊடாய் கிடைக்க பெறும் நன்மைகளையும் ஆலோசனைகளாய் வழங்குகிறார். இறையரசுக்குரியோர் பாவத்தை விட்டு பரிசுத்தமாம் வாழ்வை வாழ வேண்டும் என்கிற அறைகூவல் தூய யோவானால் தரப்படுகிறது. “பாவம் என்பது கிறிஸ்துவின் அன்பிலிருந்து மனுக்குலத்தைப் பிரித்து விடும் தன்மை கொண்டது என்கிற எச்சரிப்போடு, நமது பாவங்களுக்காய் பிதாவிடம் பரிந்து பேசுபவர் கிறிஸ்து ஒருவரே, அவரே நீதிபரர், அவராலே முழு உலகிற்கும் விடுதலை வாழ்வை அருள முடியும் என்றுரைக்கிறார். கிறிஸ்துவின் அன்பு அவரது கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களிடம் பூரணப்பட்டிருக்கும், அத்தகையோரே அவரில் நிலைத்திருந்து இறையரசுக்குரியோராய் வாழ தகுதியுடையவர்கள். மாறாக கிறிஸ்துவை அறிந்தும், அவரது கற்பனைகளை சிறு பருவம் முதலே கற்றிருந்தும் அதன்படி நடவாமல் இருந்தால், அவர்களே பொய்யர்கள் என்னும் தெளிவையும் தன் நிரூபத்தின் வழியாய் தருகிறார் தூய யோவான். கிறிஸ்து நடந்தபடியே அவரது அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்பவரே, இறையரசிற்குறியோர் என்னும் கருத்து இங்கு மேலோங்கி நிற்கிறது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய உலகில் Modernisation, Digitalisation என்னும் போர்வையில் திருமறையை கையில் ஏந்தி ஆலயம் வரும் இளையோரின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைந்து வருகிறது. Online worship பெருக்கத்தால் ஆலயம் சென்று இறையோரை தொழுதுக்கொள்ளும் மாண்பும் பெரும்நகரங்களில் குறைந்து வருகிறது. கிறிஸ்தவ பெற்றோர் அநேகர் தங்கள் பிள்ளைகளை ஞாயிறு கல்வி, வாலிபர் கூடுகை போன்றவற்றிற்கு விடுப்பு அளித்து, ஞாயிறுதோறும் Special Tuition, Special Courses என்று உற்சாகப்படுத்துகிறார்கள். இத்தகைய பெற்றோர் திருமறை வெளிச்சத்திலும் திருவசனங்களை அறிந்தும் வளர்வதினால் பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெறும் கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், பராமரிப்பையும் உணர்ந்து கொள்வதில்லை. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்னும் திருமறைக்கூற்றை உணராத பெற்றோர், திருமறை கொடுக்கும் அறிவுரைகள், அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், உவமைகள், நன்னடத்தை கருத்துக்கள், நல்வாழ்வுக்கான ஆலோசனைகள் போன்றவை சவால்களும், போட்டிகளும் நிறைந்த இந்த 21-ஆம் நூற்றாண்டுக்கு மிக மிக அவசியமானவை என்பதை உணர்ந்து கொள்ள தவறிவிடுகிறார்கள். பார் போற்றும் ஞானியான சாலொமோன், பக்தி வாழ்விற்கு சான்றான தானியேல், தன்னிகரில்லா தலைவர் யோசேப்பு, உத்தமரான யோபு போன்றோரின் வாழ்க்கைப் பாடங்கள், உலக வாழ்வில் நன்மை, தீமை அறிந்து வாழ பிள்ளைகளுக்கு பெரிதும் துணைப் புரிகிறது என்னும் தெளிவில்லாமல் அறியாமை என்னும் இருளில் அடைப்பட்டிருக்கிறார்கள். உலக கல்வி பொருளாதார ரீதியில் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதைப்போன்று ஆன்மீக வாழ்விற்கு திருமறைக் கல்வியும் மிக மிக அவசியமானது என்பதை கிறிஸ்தவ பெற்றோர் உணர்ந்து நடப்பது சாலவும் சிறந்தது. இறையரசுக்குரியோரை உருவாக்கும் சிற்பிகளே பெற்றோர், அவர்களது ஆன்மீக வாழ்வை பண்படுத்தி, பாதுகாக்கும் பொறுப்பினை பெற்றோராகிய நமது கரங்களில் இறைவன் கொடுத்திருக்கிறார் என்னும் புரிதல் இக்காலகட்டத்தில் அவசியமாகிறது.

அப்போஸ்தலனாகிய யோவான் இயேசுவுக்கு அன்பான சீடனாய் இருந்தவர், கிறிஸ்துவின் திருப்பணிகளில் இவருக்கு அதிமுக்கிய பங்கு இருந்தது, இயேசுவை சிலுவை வரை பின்தொடர்ந்தவர், கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு சான்று பகிர்ந்தவர் இத்தகைய சிறப்புமிக்க தூய யோவான் 1யோவான் 2:5,6-இல் அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும் என்பதின் மூலம் கிறிஸ்துவோடு இணையும் வழியையும், அவசியத்தையும் ஆலோசனையாய் வழங்குகிறார். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது பாவிகளோடும், துன்பத்தில் தவித்தவர்களோடும், வீண்பழி சுமந்தவர்களோடும்,  வியாதியஸ்தர்களோடும், கைவிடப்பட்ட கைம்பெண்களோடும் தன்னை இணைத்துக்கொண்டு, அவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போன்று கிறிஸ்துவை பின்பற்றி நடக்கும் நாமும், தற்கால சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், ஓரம்கட்டப்பட்டவர்கள், அதிகாரத்தின் அடக்குமுறைகளை அனுபவிப்பவர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை தான் மத்தேயு 25:40-இல் மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

எனவே கிறிஸ்துவின் கற்பனைகளை கைக்கொண்டு அவர் இவ்வுலகில் வாழ்ந்த போது செய்து நிறைவேற்றிய அருட்பணியை நாமும் செய்ய முன்வருவோம். நம்பிக்கை இழந்தோரின் நம்பிக்கையாகவும், வாழ்விந்தோருக்கு வாழ்வு வழங்குவோராகவும், இருளில் தவிக்கும் ஜனங்களுக்கு பேரொளியாகவும் செயல்படுவோம். இத்தகைய செயல்களே கிறிஸ்து விரும்பும் வாழ்வு. இதுவே மனுக்குலம் மீட்படைய இறுதிவரை போராடி, தன்நிகரில்லா இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவோடு இணைக்கும் வாழ்வு. “நற்செய்தி என்பது வெறுமனே காற்றில் அறிவிக்கப்படும் வார்த்தைகள் அல்ல, அவை செயல் வடிவங்கள் பெறவேண்டியவை. கடவுளைக் குறித்து அறிவிப்பது மட்டுமே இறையரசுக்குரியோரின் பணி அல்ல, மாறாக வாழ்வில் கரை சேர துடிப்போருடன் சேர்ந்து போராடுவதும், அவர்கள் கரைசேர படகாய் மாறுவதுமே இறையரசுக்குரியோரின் பணி என்பதை உணர்ந்து கிறிஸ்துவுடன் ஒன்றித்து வாழும் இயேசுவின் உண்மை தொண்டர்களாய் மாறுவோம், திருமறைக்கல்வி ஆசிரியர்களாய் பொறுப்பேற்றிருக்கும் நாம், நமக்கு தரப்பட்டிருக்கிற பொறுப்பினை உணர்ந்து சிறார்களை இறையரசுக்குரியவராய் உருவாக்குவோம் எனக் கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.


A. JENIL DHAS

Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊


 

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)