ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)

 எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)

ஞானத்தின் உறைவிடமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் என் அன்பின் வணக்கங்கள். இறைஞானத்தால் நடுநிலைத் தவறாது தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், என்னைப்போன்ற பேச்சாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் வாழ்த்து சொல்லி, எறும்பு கற்பிக்கும் ஞானம் என்னும் தலைப்பில் நீதிமொழிகள் 6:6-யை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

திருமறை, ஞானத்தை கற்றுக்கொள்ள பெரிய ஞானிகளை முன் வைக்காமல், சிறு எறும்பை முன் வைக்கிறது. எறும்பு சரியான காலங்களில் தனக்குத் தேவையான தானியங்களை சேர்த்து வைப்பதுண்டு. அப்படி தானியங்களை சேர்க்கும்போது அவைகள் முளைக்காமல் இருக்க அந்த தானியம் முளைக்கும் குறிப்பிட்ட பகுதியை கடித்துவிட்டு, அதன்பின் பத்திரமாக சேர்த்து வைக்கும். எறும்புகள் பொதுவாகவே குழுவாக தான் வாழும், அது அவற்றின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. தானியங்களை எடுத்துச் செல்லும் போதும், அவற்றை சேகரிக்க செல்லும்போதும் வரிசையாகவே செல்லும், இது எறும்புகளில் காணப்படும் ஒழுக்கத்தை காட்டுகிறது. அவற்றை வழிநடத்த அரசுமில்லை, அரசருமில்லை, அதிகாரமில்லை, அதிகாரிகளுமில்லை. ஆனாலும் எறும்புகள் தங்களுக்கு வேண்டியவைகளை சுறுசுறுப்புடன் தனது உழைப்பின் மூலம் பார்த்துக் கொள்கிறது. இதன் வழியாக “தன் கையே தனக்கு உதவி” என்னும் வாழ்வியல் கோட்பாட்டை நமக்கு பாடமாக்குகிறது. எறும்புகள் குழுவுக்குள் செய்தியை பரிமாறும் திறன் கொண்டவை, இது உறவுகளுக்குள் இருக்க வேண்டிய உரையாடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், எறும்புகளுக்கு உடல் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கும் திறன் உண்டு, இது கடின உழைப்பிற்கான மாதிரியாய் அமைகிறது. அதேசமயம் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தையும் நமக்கு கற்றுத் தருகிறது. எறும்புகளின் ஆயுள் வெறும் 90 நாட்கள் தான், ஆனாலும் அவைகள் காலத்தால் அழியாத ஞானத்தை கொண்டுள்ளன. எனவே தான் கடவுளின் ஞானத்தை பெற்ற சாலமோன் அரசன் தான் எழுதிய நீதிமொழிகள் 6 6-இல் சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் எனக் கூறி எறும்பிடம் சென்று ஞானத்தை கற்றுக் கொள்ள அறிவுரை வழங்குகிறார்.

தற்கால உலகில் வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர், சுயநல சிந்தனை கொண்டு, பிறர் நலம் பேணா வாழ்வு வாழ்கிறார்கள்.  உழைப்பால் உயர வாய்ப்புகள் அதிகம் இருந்தும், குறுக்கு வழியை நாடுகிறார்கள். ஒன்றித்து வாழ வேண்டியவர்கள் பிறரை ஒடுக்கி ஆளுகிறார்கள். இத்தகையோருக்கு எறும்பின் வாழ்வு நிச்சயமாகவே வாழ்வியல் பாடம் தான். ஆகவே, நாமும் எறும்பிடம் பாடம் கற்று, சிறு வயது முதலே சுறுசுறுப்புடன் வளருவோம் எனக் கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன் ஆமென்.


************

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023